

வங்காள அறிவியலாளரும், புள்ளியியல் அறிஞருமான பிரசாந்த சந்திர மகலனோபிஸ் (Prasanta Chandra Mahalanobis) பிறந்த தினம் இன்று (ஜூன் 29). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l கொல்கத்தாவில் (1893) பிறந்தவர். தந்தை விளையாட்டு சாதனங்கள் விற்பனை செய்யும் முகவர். கொல்கத்தா பிரம்மோ பள்ளியில் படித்த பிறகு, மாநிலக் கல்லூரியில் இயற்பியலில் பட்டம் பெற்றார்.
l லண்டன் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்கும் முடிவுடன் கேம்பிரிட்ஜ் சென்றார். லண்டன் செல்லும் இறுதி ரயிலை தவறவிட்டதால், கேம்பிரிட்ஜ் கிங்ஸ் கல்லூரியிலேயே படிப்பது என தீர்மானித்து, முதலில் கணிதமும், பின்னர் இயற்கை அறிவியலும் பயின்றார். அப்போது கணிதமேதை சீனிவாச ராமானுஜனின் நண்பரானார்.
l இயற்கை அறிவியல் படிப்பில் இயற்பியலில் சிறப்புத் தேர்ச்சி பெற்று கேவண்டிஷ் ஆய்வகத்தில் ஆராய்ச்சித் திட்டத்தை தொடங்கினார். முன்னதாக விடுமுறைக்காக 1915-ல் இந்தியா வந்தார்.
l கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக தற்காலிகமாக பணியாற்றுமாறு அங்கு உடலியல் பேராசிரியராக இருந்த இவரது மாமா கேட்டுக்கொண்டார். அன்புக் கட்டளையை தட்டமுடியாமல், அதை ஏற்றுக்கொண்டார்.
l அந்த பணிக்கு வேறு நபர் கிடைத்துவிட்டால், தான் உடனடியாக கேம்பிரிட்ஜ் திரும்பி ஆராய்ச்சிப் பணியைத் தொடங்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். நாளடைவில் ஆசிரியப் பணியில் ஈடுபாடு ஏற்பட்டதால், கேம்பிரிட்ஜ் திரும்பும் எண்ணத்தைக் கைவிட்டார்.
l புள்ளியியலில் அவருக்கு ஆர்வம் பிறந்ததுகூட இப்படி எதேச்சையாக நடந்ததுதான். இங்கிலாந்துக்கு சென்றவர் இந்தியாவுக்கு திரும்ப தயாராகிக் கொண்டிருந்தார். வரவேண்டிய படகு தாமதமானது. கிங்ஸ் கல்லூரி நூலகத்தில் காத்திருந்தவர், ‘பயோமெட்ரிகா’ என்ற புள்ளியியல் இதழின் முதல் பாகத்தை படித்தார். அதில் ஈர்க்கப்பட்டவர், அதன் அனைத்து பாகங்களையும் சேகரித்தார். பயணத்தின்போதே அவற்றைப் படித்து, அதில் உள்ள பயிற்சிகளுக்குத் தீர்வும் கண்டார்.
l கொல்கத்தா திரும்பியதும் மீண்டும் இயற்பியல் பேராசிரியராக பணியைத் தொடங்கியவர், 30 ஆண்டுகளுக்கு இயற்பியலைப் பயிற்றுவித்தார். கூடவே, புள்ளியியல் மீதான ஆர்வமும் அதிகரித்துக்கொண்டே போனது. வானிலை, உயிரியல், மானுடவியல் என பல்வேறு துறைகளில் உள்ள சிக்கல்களுக்கும் புள்ளியியல் உதவியுடன் தீர்வு கண்டார்.
l கொல்கத்தாவில் இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தை 1931-ல் நிறுவினார். இரு வேறுபட்ட தரவுகளுக்கு இடையேயான ஒப்பீட்டு மதிப்பை வரையறுத்தார். அது ‘மகலனோபிஸ் தொலைவு’ எனப்படுகிறது.
l பெரிய அளவிலான மாதிரி சர்வேக்கள், பயிர் விளைச்சல் கணக்கிடல் ஆகியவற்றுக்கு ரேண்டம் சாம்ப்ளிங் முறை தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தார். திட்ட கமிஷன் உறுப்பினராக (1955 1967) இருந்தார். இந்தியாவில் புள்ளியியல் துறை வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினார்.
l பயன்முகப் புள்ளியியல் துறை மேம்பாட்டில் சிறந்த பங்களிப்புக்காக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் வெல்டன் மெமோரியல் பரிசு, அமெரிக்க எகனாமிக் சொசைட்டியின் ஃபெலோஷிப், பத்மவிபூஷண், சீனிவாச ராமானுஜன் தங்கப்பதக்கம் என ஏராளமான கவுரவங்கள், விருதுகளைப் பெற்றார். இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் செயலர் இயக்குநராகவும், மத்திய அமைச்சரவையின் புள்ளியியல் துறை கவுரவ ஆலோசகராகவும் பணியாற்றிவந்த மகலனோபிஸ் 79 வயதில் (1972) மறைந்தார்.