Published : 25 Jun 2015 10:17 AM
Last Updated : 25 Jun 2015 10:17 AM

மவுண்ட்பேட்டன் 10

பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைஸ்ராயும், சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலுமான ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் (George Mountbatten) பிறந்த தினம் இன்று (ஜூன் 25). அவரைப் பற்றி அரிய முத்துக்கள் பத்து:

l இங்கிலாந்தில் வின்ட்ஸர் என்ற இடத்தில் பிறந்தார் (1900). லூயி பிரான்சிஸ் ஆல்பர்ட் விக்டர் நிக்கோலாஸ் ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் (Louis Francis Albert Victor Nicholas George Mountbatten) இவரது முழு பெயர். ஆரம்பத்தில் 10 வருடங்கள் வீட்டிலேயே கல்வி பயின்றார்.

l பின்னர் ஹெர்ட்ஃபோர்ட்ஷயரில் இருந்த லாக்கர்ஸ் பார்க் பள்ளியில் பயின்றார். 1916-ல் கப்பற்படையில் சேர்ந்தார். துணைத் தளபதியாக பதவி உயர்வு பெற்றார். பிறகு கேம்பிரிட்ஜில் உள்ள க்ரைஸ்ட் கல்லூரியில் பொறியியல் பயின்றார். அபாரத் திறன் கொண்டவர். 1920-ல் கடற்படைத் தளபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.

l அதற்கு அடுத்த வருடம் இளவரசர் எட்வர்டுடன் இந்தியா, ஜப்பான் நாடுகளுக்குப் பயணம் சென்றார். கப்பற்படையில் பணியாற்றினாலும் தனது படிப்பை நிறுத்திவிடவில்லை. 1924-ஆம் ஆண்டில் போர்ட்ஸ் மவுத் சிக்னல்ஸ் பள்ளியில் சேர்ந்து பயின்றார். அதன் பிறகு கிரீன்விச், ராயல் நேவல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் பயின்றார்.

l வின்ஸ்டன் சர்ச்சிலின் பிரியத்துக்குரியவராக இருந்ததாலும் தன் சொந்த திறன் மற்றும் கடும் உழைப்பினாலும் தன் வாழ்க்கையில் வெகு சீக்கிரத்திலேயே பல முக்கிய உயர் பதவிகளை பெற்றார். கப்பற்படையில் படிப்படியாக உயர்ந்த இவர், கேப்டன் பதவி பெற்றார். 1939-ல் கெல்லி போர்க்கப்பலின் பொறுப்பு வழங்கப்பட்டது.

l இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஹெச்.எம்.எஸ். கெல்லியின் கமாண்டராக பல துணிச்சலான வியூகங்களை வகுத்து செயல்படுத்தினார். மேலும் பல்வேறு முக்கிய பொறுப்புகளையும் பதவிகளையும் வகித்தார். 1947-ல் இந்தியாவின் வைஸ்ராயாக நியமிக்கப்பட்டார். இங்கிருந்து ஆங்கிலேயர்கள் சுமூகமாக வெளியேறுவதற்கும் பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து இந்தியா, பாகிஸ்தான் என்ற இரண்டு சுதந்தர நாடுகளாகப் பிரிப்பதற்குமான விவகாரங்களைத் திறமையுடன் கையாண்டார்.

l உண்மையில் இவர் ஒன்றிணைந்த இந்தியாவாக சுதந்திரம் பெற வேண்டும் என்றுதான் விரும்பினார். ஆனால் அவ்வாறு பிரிவினையால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளையும் அதன் சிக்கல்களையும் நன்கு அறிந்திருந்தாலும் இவரால் பிரிவினையைத் தடுக்க முடியவில்லை.

l எனவே, தான் நினைப்பதுபோல ஒருங்கிணைந்த இந்தியா சாத்தியம் இல்லை என்பதைப் புரிந்து கொண்ட இவர், அதற்கான திட்டமிடுதல்களைத் தொடங்கினார். பிரிட்டிஷ் இந்தியாவிடமிருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கான அதிகார மாற்றங்களை திறனுடன் செயல்படுத்தினார். சுதந்திரத்துக்குப் பிறகு பெரும்பாலான பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்தியாவைவிட்டு வெளியேறி விட்டனர்.

l ஆனால் மவுண்ட்பேட்டன் ஜுன் 1948 வரை சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பணியாற்றினார். அதன் பிறகு இங்கிலாந்து திரும்பிய இவர் 1949-ல் மீண்டும் கப்பற்படையில் கமாண்டராகப் பணியாற்றினார். 1967 முதல் 1978 வரை யுனைடட் வேர்ல்ட் காலேஜஸ் ஆர்கனைசேஷன் என்ற அமைப்பின் தலைவராகப் பணியாற்றினார்.

l பிரிட்டிஷ் வார் மெடல், விக்டரி மெடல், அட்லாண்டிக் ஸ்டார், பர்மா ஸ்டார், இத்தாலி ஸ்டார் உள்ளிட்ட ஏராளமான பதக்கங்கள், விருதுகளை வென்றுள்ளார். பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைஸ் ராயாகவும், சுதந்திர இந்தியாவின் முதலாவது கவர்னர் ஜெனரலாகவும் இருந்து அதிகாரம், நிதி, இரு நாடுகளின் பகுதிகளை வரையறுத்தல் ஆகிய சிக்கலான விவகாரங்களில் முக்கிய பங்காற்றினார்.

l ரைட் ஹானரபிள், பர்மாவின் முதலாவது கோமகன், மவுண்ட்பேட்டன் துரை என்றெல்லாம் அழைக்கப்பட்டார். 1979-ல், 79-வது வயதில், விடுமுறைக்காக அயர்லாந்து சென்றிருந்த சமயத்தில் ஐரிஷ் குடியரசின் ராணுவத்தினர் இவர் பயணம் செய்த படகில் குண்டு வைத்துக் கொன்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x