Published : 28 May 2015 18:06 pm

Updated : 04 Jun 2015 17:57 pm

 

Published : 28 May 2015 06:06 PM
Last Updated : 04 Jun 2015 05:57 PM

மான்டேஜ் மனசு 1 - அலைபாய்ந்தவன் உணர்ந்த காதல்!

1

| நிஜம் - நிழல் - புனைவு அடங்கிய புதிய ஆன்லைன் தொடர் |

ஆறு வருடங்கள் கழித்து அவளிடமிருந்து இப்படி போன் கால் வருமென்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

''ஹலோ'' குரல் கேட்ட சில நொடிகளிலேயே அவள்தான் என்பதை உணர முடிந்தது.

ஆனால், நம்ப முடியாதவனாய் சிறிது நேர மவுனத்துக்குப் பின் ஹலோ என்றேன். பரஸ்பரம் நல விசாரிப்புகளுக்குப் பிறகு, எதையோ சொல்ல வந்தவள் தயங்கித் தயங்கி நின்றாள்.

அந்த ஒரு நிமிடத்துக்குள் நான் அவளை... முதன்முதலாகப் பார்த்த 22 வயசுப் பையனாகவே மாறியிருந்தேன். நெருடல் உடைத்து சரளமாகப் பேசினேன்.

''மணி கிட்டே பேசினேன்'' என்றாள்.

''ம்''

''என்ன சொன்னான்னு கேட்க மாட்டியா...''

''அடுத்து அதானே சொல்லப்போற...''

''என்னால அவனை மறக்க முடியலைடா... கஷ்டமா இருக்கு... இந்த ஆறு வருஷத்துல அவனை நினைக்காத நாளில்லை''ன்னு சொன்னேன்.

''அவன் என்ன சொன்னான்?''

''நான் சொன்னதெல்லாம் கேட்டுக்கிட்டான். பதிலே சொல்லலை.''

''நீ விட்டிருக்க மாட்டியே?''

'' 'ஏன்டா பேசாம இருக்க'ன்னு கேட்டேன். ‘ரெண்டு வருஷத்துல எத்தனை முறை நேர்ல பார்த்திருப்பீங்க'ன்னு கேட்டான். 'ஏழெட்டு முறை'ன்னு சொன்னேன். 'நேர்ல எவ்ளோ நேரம் பேசி இருக்கீங்க'ன்னு கேட்டான். 'அஞ்சு அல்லது பத்து நிமிஷம்'னு சொன்னேன். 'இதை மறக்க முடியாமயா ஆறு வருஷம் கஷ்டப்படற? அப்போ ஏதோ மெசேஜ் பண்ணீங்க. போன்ல பேசினீங்க. ஈர்ப்பு, இனக்கவர்ச்சி மாதிரி லஸ்ட்னு நினைச்சேன்'னு சொல்லிட்டான்.

''ஒரு நிமிஷம்... மணியா லஸ்ட்னு சொன்னான்''.

''ஏன்?''

''அந்த வார்த்தையை அவன் சொன்னானா?''

''இல்லை. அந்த வார்த்தை அவனுக்குத் தெரியாது. ஆனா, அந்த அர்த்தத்துலதான் பேசினான். ஏன் கேக்குற?''

''சும்மா தான்.. நீ சொல்லு...''

''எனக்கு கஷ்டமாயிடுச்சு. அவன் எந்த உதவியும் பண்ணலை. பண்ணத்தேவையும் இல்லை. ஆனா, ஏன் அவன் நம்ம காதலை கொச்சைப்படுத்தணும்?''

''அவனுக்கு அவ்ளோதானே தெரியும். விடு.''

''அவன் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டவன் தானே.''

''அது சரி. இப்போ ஏன் அவன்கிட்ட இதெல்லாம் பேசின?''

''நீ எழுதின எல்லா கவிதைகளையும் ஒரு நோட்ல எழுதி வெச்சேன். அம்மா அதை பத்திரப்படுத்தி வெச்சு இருக்குறதை பார்த்துட்டு, 'இருக்குற பிரச்சினையில இது வேறவா. வேணாம். எரிச்சிடு'ன்னு சொல்லிட்டாங்க. மனசே இல்லாம் அதை எரிச்சிட்டேன். எரிச்ச உடனே அழுகையா வந்தது. மனசுக்கு ஆறுதலா இருக்குமே. உன்னைப் பத்தி விசாரிக்கலாமேன்னு அவனுக்கு போன் பண்ணேன். அப்போதான் இப்படி மனவளர்ச்சி இல்லாதவன் மாதிரி பேசிட்டான்.''

அதற்குப் பிறகு நடந்த உரையாடலில் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை.

மணி 'லஸ்ட்' என்ற அர்த்த தொனியில் பேசியதாக சொன்னதுதான் மீண்டும் மீண்டும் மனசுக்குள் வந்துபோனது. அவன் அப்படிச் சொல்லி இருப்பதை சகித்துக்கொள்ளவே முடியவில்லை. அவன் ஏன் இப்படி பேசினான் என்று யோசித்துக்கொண்டே இருந்தேன்.

மனம் எதிலும் லயிக்காமல் போக முகநூல் பக்கம் பார்வையைத் திருப்பினேன்.

அப்போதுதான் 'ஹன்டர்ர்ர்' (Hunterrr) இந்திப் படம் குறித்த நறுக் சுருக் விமர்சனங்கள் கண்ணில்பட்டன. லஸ்ட், லவ் பற்றிய படம் என்று கேள்விப்பட்டதும், எந்தத் தெளிவும் இல்லாமலேயே ஹன்டர்ர்ர் படம் பார்ப்பதென முடிவு செய்தேன். இரண்டு நாட்களுக்குப் பிறகு நண்பரிடம் டிவிடி வாங்கி படம் பார்த்தேன்.

படம் பார்த்ததும் மணி மீது அநியாயத்துக்கு கோபம் வந்தது.

அவன் என் நண்பன் என்று சொல்வதற்காக இந்த நிமிடம் வரையில் வெட்கப்படுகிறேன். ரொம்ப எமோஷனல் ஆகிறேனா? ஹன்டர்ர்ர் படம் பார்த்தபிறகு இப்படி நம்மை நினைத்துவிட்டானே என்ற ஆதங்கப்பட வைத்துவிட்டான்.

ஓவர் சுயபுராணம் ஆகிவிட்டதுதானே... பொறுத்தருளுங்கள்.

சின்ன ரெக்யூஸ்ட்... என்னைக் குறித்த ஆராய்ச்சியை விட்டு விட்டு ஹன்டர்ர்ர் படம் குறித்து சில விஷயங்களை தெரிந்துகொள்வதற்கான மனநிலையைத் தயார்படுத்திக்கொள்ளுங்களேன் ப்ளீஸ்....

மனம் கொஞ்சம் ஆசுவாசம் அடையவில்லை என்றால் கொஞ்சம் தண்ணீர் குடிக்க முயற்சி செய்யலாம். என்ன... மொக்கை ஐடியாவா இருக்கா? சரி... ரொம்ப திட்டாதீங்க... நேரா கதைக்கே போய்டலாம்.

படத்தின் ஹீரோ மந்தாருக்கு சின்ன வயதில் இருந்தே பாலுணர்வு குறித்தும், சிலிர்ப்புப் படங்கள் குறித்தும் அலாதிப் ப்ரியம் உண்டு.

டீன் ஏஜ் வயதில் தியேட்டரில் சிலிர்ப்புப் படம் பார்த்துவிட்டு போலீஸிடம் மாட்டிக்கொள்கிறான். 18 வயதாகிவிட்டது என்று புரூடா விட்டும் எந்த புண்ணியமுமில்லை. கடைசியில் அரை மொட்டையுடன் சலூன் கடையைத் தேடி ஓடுகிறான்.

எக்ஸ்கியூஸ்மீ... ஒரு நிமிஷம்... சின்ன கிளாரிஃபிகேஷன்... படத்தோட கதைக்குள்ள உங்க கவனம் வந்துடுச்சுதானே... நல்லது... படிங்க...

மந்தார் (குல்ஷான் தேவய்யா) ஸ்கூல் படிக்கும்போது அழகான பெண்ணை கரெக்ட் செய்ய வேண்டும் என்று நினைக்கிறான். ஆனால், அந்த அழகான பெண்ணை விட்டுவிட்டு அருகில் இருக்கும் இன்னொரு பெண்ணுக்கு ஹாய் சொல்லி அறிமுகம் ஆகிறான்.

தனக்கு பெஸ்ட்டாகத் தெரியும் இருவரில் இரண்டாம் நபரைத் தேர்ந்தெடுப்பதே அவனது வழக்கம். (என்னமா ஒரு ஐடியா பாருய்யா.... டைரக்டர் ஹர்ஷவர்தன் குல்கர்னி ரூம் போட்டு யோசிச்சா கூட இப்படி தோணி இருக்காதே..)

கல்லூரி படிக்கும்போதும் இதே ஐடியாவைப் பின்பற்றுகிறார். அந்த ஐடியா அழகாக வொர்க் அவுட் ஆகிறது. ஒரு பெண்ணை தன்வசப்படுத்துகிறான். தன்னுடைய அறைக்கு அழைத்து வருகிறான். இந்த விவகாரம் ஹாஸ்டல் வார்டனுக்குத் தெரிந்துவிடுகிறது.

ஹாஸ்டலில் இருந்து விரட்டப்படுபவன், குடியிருப்புகள் பகுதியில் தனியாக வாடகை வீட்டில் தங்குகிறான். அங்கு ஓர் ஆன்ட்டியுடன் மாற்றுக் காதல். அதில் இருந்து 'துரத்தப்பட்ட' பிறகு மற்றொரு மாற்றுக் காதல்.

தன் பக்கத்து வீட்டு சவிதா ஆன்ட்டியிடம் மியாவ் சொல்லியே இரவைக் கழிக்கிறான். இப்படி வேறு விதமான இச்சைக்காக பெண் பித்தனாக அலையும் மந்தார், ஷோபா என்.டி எனும் விருந்தாளியை அழைத்துவர விமான நிலையம் செல்கிறான். ஷோபா என்.டி என்பதை ஷோபா ஆன்ட்டி என்று தவறாக புரிந்துகொள்கிறான். யார் அவர் என்பதை மந்தாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

பயணிகள் காத்திருக்கும் அறையில் புத்தகம் படித்துக்கொண்டிருக்கும் பெண்ணையே நோட்டம் விடுகிறான். மெல்லப் போய் பேச்சு கொடுத்து, ஹோட்டலில் அறை எடுத்து தங்க வைக்கும் அளவுக்கு நம்ப வைக்கிறான். களைப்பில் இருக்கும் அப்பெண்ணின் பின்பக்கக் கழுத்தைப் பிடித்து மசாஜ் செய்ய முயற்சிக்கிறான். அவர்தான் ஷோபா என்.டி என்று தெரிந்தபிறகு வீட்டில் போட்டுக் கொடுத்துவிடுவாரோ என்ற பீதியில் ஓட்டம் பிடிக்கிறான்.

இப்படியே இருக்கும் நாயகன் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் திருப்தி உடன் (ராதிகே ஆப்தே) மட்டும் நேர்மையுடன் பழக ஆரம்பிக்கிறான். வேறொருவருடன் இருந்த லிவிங் டூ கெதர் ரிலேஷன்ஷிப் காரணமாக கர்ப்பமாகிறார் திருப்தி. அதைக் கலைக்கச் சொல்கிறார் அவர் பாய்ஃப்ரெண்ட். இதனால் இருவரும் பிரிகிறார்கள். திருப்தி கர்ப்பத்தைக் கலைக்கிறாள்.

திருப்தி தனக்கு நடந்ததை மந்தாரிடம் கண் கலங்கியபடி சொல்கிறாள். இதனிடையே, ஓர் இழப்பால் வாடுகிறான் மந்தார். அப்போது அரவணைக்கும் திருப்தியிடம், அவன் காதலைக் கண்டுணர்கிறான். க்ளைமாக்ஸ் நெருங்கும்போதுதான் அவன் 'ஐ லவ் யூ' என்ற வார்த்தையை திருப்தியிடம் உதிர்க்கிறான். படம் நெடுக பெண்வாசத்துக்கு அடிமையாக இருக்கும் மந்தார் ஒரே முறை உளப்பூர்வமாக 'ஐ லவ் யூ' சொல்வது ஆச்சர்யம்தானே.

அப்போது அவன் திருப்திக்கு கொடுக்கும் முத்தத்தில் விரசத்தையோ, ஆபாசத்தையோ பார்க்க முடியவில்லை. தூய்மையும், கள்ளம் கபடம் இல்லாத அன்பின் திருப்தியை மட்டுமே பார்க்க முடிகிறது.

காதலில் இருந்து காமம் என்ற வழக்கமான பாணியை உடைத்தெறிந்து, காமத்தில் இருந்து காதல் என்கிற புள்ளியை அடையும் தருணம் மனிதர்களுக்கு ஏற்படுவதுண்டு என்பதை இயக்குநர் ஹர்ஷவர்தன் வெகு அற்புதமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.

லஸ்ட் என்ற இடத்தில் இருப்பவனும் லவ் என்ற இடத்தை அடைவான். அதுதான் காதல் நிகழ்த்தும் அற்புதம் என்று சொல்கிறது படம். இந்தப் படம் ஒரு ப்ளாக் ஹியூமர் மாதிரி தோன்றினாலும் ப்ளூ ஹியூமர் என்ற புது ஜானரை அறிமுகப்படுத்துகிறதோ என்ற சந்தேகமும் எழலாம்.

தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படத்தை சுதந்திரமாக எடுக்க முடியுமா என்பது பெரிய கேள்விக்குறி.

மந்தாரின் நண்பன் ராணுவத்தில் இறந்துவிடுகிறார். அதற்குப் பிறகு அவரது மகன், மந்தார் வீட்டுக்கு வருகிறார். அப்பாவைப் போலவே மகனும் கழிவறையில் சிறுநீர் கழிக்காமல் வெளியில் கழிப்பதைப் பார்த்து மந்தார் நினைவலையில் மிதந்து கலங்குகிறார். அவனது அப்பழுக்கற்ற மனதை இங்கேதான் புரிந்துகொள்ள வேண்டும்.

மந்தாராக குல்ஷான் தேவய்யா நடிப்பில் பின்னி இருக்கிறார். அழகான இரண்டு பெண்களில் இரண்டாம் நபரைத் தேர்ந்தெடுப்பது, பிரச்சினை என்றதும் ஓட்டம் பிடிப்பது என்று சின்ன சின்ன ரியாக்‌ஷன்களிலும் ஸ்கோர் செய்கிறார்.

சொல்ல மறந்துவிட்டேனே?

அப்படி என்றால் என்னை மந்தாராக நினைக்கிறானா மணி?

''அவளுடன் பேசாத நாள். நான் வாழாத நாள்'' என்று மழை நேரத்து மாலையில் அவனிடம் என் காதலைப் பற்றி சிலாகித்து இருக்கிறேன்.

ஓர் ஆல்கஹால் இரவில் சலம்பும்போதும் காதலின் மகோன்னதம் குறித்து கடும் மொக்கைகள் போட்டு அவனுக்கு கலாய்ப்புப் படலம் நடத்தி இருக்கிறேன். என் மென்சோகத்தில் இளையராஜாவாக இருக்க வேண்டிய மணி, ஏன் அனிருத்தாக மாறினான்? (இந்த சமயத்தில் உங்களுக்கு அனிருத் குறித்து வேறு ஏதேனும் சம்பவங்கள் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.)

லஸ்ட்டுக்கும் லவ்வுக்கும் வித்தியாசம் தெரியாதா அவனுக்கு? அழியாத கோலங்கள், அட்டகத்தி பார்க்காதவனா அவன்?

பள்ளி நாட்களில் புதிதாக வந்த பயாலஜி டீச்சர் பாடம் நடத்தும்போது போரடிக்கிறது என்று காகிதத்தில் ராக்கெட் விட்டவன் மணி. மறுகணமே ஒட்டுமொத்த வகுப்பறையும் சிரிப்பறையாக மாறும் அளவுக்கு கால் வலிக்க வலிக்க முட்டி போட்டவன்.

பயாலஜி டீச்சரிடம் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் செய்ய நினைத்தவன் மணி என்பது அனிச்சையாய் இப்போது ஏன் எனக்கு நினைவில் வர வேண்டும்?

அந்த நேரத்தில் அவளிடம் இருந்து ஒரு எஸ்எம்எஸ் வந்தது. லைஃப் ஃபீல் பண்ண இல்லை. ஃபில் பண்ண. மிஸ் பண்ற மாதிரி தெரிஞ்சா உடனே மிஸ்ஸஸ் ஆக்கிடுவேன்னு சொன்னியே... என்று அனுப்பி இருந்தாள்.

இல்லாத இறைவனை சபிக்கத் தொடங்கியிருந்தேன் நான்...

| மான்டேஜ் மனசு இன்னும் சுழலும் |

க.நாகப்பன் - தொடர்புக்கு nagappan.k@thehindutamil.co.in

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

மான்டேஜ் மனசுஹன்டர்ர்ர்லஸ்ட்லவ்காதல்காமம்இன்னும் சுழலும்சிலிர்ப்புப் படம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author