Published : 11 Jun 2015 02:47 PM
Last Updated : 11 Jun 2015 02:47 PM

இணைய களம் - சிலையை இடித்த புல்டோசர்!

குளச்சல் யூசுஃப்

ஒன்றரை வருட காலம், மிகுந்த சிரமங்களுடன் நான் எழுதிய நாலடியார் மலையாள மொழிபெயர்ப்பின் அச்சுப்பிரதியை பைண்டிங் செய்வதற்காக ஒரு கடையின் மேஜையில் வைத்தேன். முதல் பக்கத்தில், தமிழிலும் மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் நூலின் பெயரும் என் பெயரும் கொட்டை எழுத்தில் எழுதப் பட்டிருந்தது. குமரி மாவட்டத்தின் புகழ்பெற்ற ஒரு கல்விக் கடையின் மெத்தப் படித்த, தாளாளர் அல்லது, முக்கியஸ்தர் ஒருவரும் அங்கிருந்தார். அதன் முதல் பக்கத்தை அவர் ஊன்றிக் கவனித்தார்.

“யாரிந்த குளச்சல் யூசுஃப்? இப்போது எங்கிருக்கிறார்?” என்றெல்லாம் கேட்பார் என்ற நப்பாசையுடன் (மனிதன் தானே?) பதில் சொல்வதற்கான ஆர்வத்துடன் என்னைத் தயார் நிலையில் வைத்துக்கொண்டேன். அவர் கேட்டார்: “இந்த கிளிப் எங்கே கிடைக்கும்?” சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேனே, அந்நிமிடம் செத்துப் பிழைத்தேன்.

அருள் எழிலன்

பிரபாகரன் சிலையை இடித்த புல்டோசரை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

கௌதம சித்தார்த்தன்

மகன் ஆத்மார்த்தன் வெகுஜனப் பத்திரிகை ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தான். ஈரோடு அரசு மருத்து வமனையில் குழந்தைகள் நல மருத்துவர் அவன்.

“ஏம்பா கொஞ்சம் சீரியஸாகவும் படிக்கலாமே…” என்றேன்.

தலையை உயர்த்திப் பார்த்துவிட்டு தொடர்ந்து படிக்க ஆரம்பித்தான். முன்பெல்லாம் கவிதைகள் எழுதுவான். ஒன்றிரண்டு கவிதைகளை ‘உன்னதம்’ இதழில் வெளியிட்டிருக்கிறேன்.

“ஏம்பா, அப்பப்போ எதாவது எழுதுப்பா. எழுத்து உன் வாழ்க்கைக்கான அர்த்தத்தை உனக்கு கொடுக்கும்” என்றேன்.

“உலகம் ரொம்பப் பெருசுப்பா. வாழ்க்கை அதைவிடப் பெருசு. எழுத்தாளன் மட்டும்தான் வாழ்க்கைக்கான அர்த்தத்தை உருவாக்குபவன்னு நெனைச்சுக்கிட்டிருக்குற உங்களைப் பார்த்தா எனக்குப் பரிதாபமா இருக்கு” என்று கலாய்க்க ஆரம்பித்தான். பேச்சு நீண்டது.

“நேத்து எங்க ஆஸ்பத்திரிக்கு நாலு வயசுப் புள்ளை ஒண்ணைத் தூக்கிட்டு ஓடிவந்தாங்க. கடுமையான மூச்சிரைப்பு. நான் அந்தக் குழந்தையைப் பார்த்தேன். நியர் ஃபேடல் ஆஸ்துமா நிலையில இருந்துச்சு அந்தக் குழந்தை.”

“அப்படின்னா?”

“அது உங்களுக்கு சொன்னாப் புரியாது. ஆஸ்துமாவோட ரொம்ப சிக்கலான நிலைமைன்னு வெச்சுக்குங்களேன். சீக்கிரமே நினைவு தவறிடும். கிட்டத்தட்ட கோமா ஸ்டேஜுக்குப் போறது. நான் அந்தக் குழந்தையைத் தீவிர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டுபோய் சிகிச்சை கொடுத்தேன். நாலு மணி நேரத்தில் மூச்சு வாங்குறது குறைஞ்சு, சுய நினைவு திரும்பி, இயல்பான நிலைமைக்கு வந்துடுச்சு குழந்தை. அவங்க அம்மா வந்து என் கையைப் புடிச்சிட்டாங்க. கண்ணுல தண்ணியா கொட்டுது. ஒண்ணும் பேசல. ஆனா, எனக்குப் புரிஞ்சுச்சு. இதெல்லாம் வாழ்க்கையோட அர்த்தம் இல்லையாப்பா?”

நான் அதிர்ந்துபோனேன். அந்தக் கணத்தில் என் நூல்களில் எழுதியிருந்த எழுத்துகள் யாவும் மறைந்துபோய் வெற்றுத் தாள்களாகப் படபடத்ததை உணர்ந்தேன்.

நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்

புரோட்டா மாஸ்டர் வேலைக்கு ரூ.18,000 சம்பளம் என்னும் விளம்பரத்தை வைத்து நிறைய பேர் கிண்டலடித்துவருகிறார்கள். ஒரே ஒரு நாள் புரோட்டா மாஸ்டராக இருந்து பார்த்தால் போதும். 5 லட்சம் ரூபாய் கொடுத்தாலும் வேண்டாம் என ஓடி வந்து விடுவார்கள். நீண்ட நேரம் நின்றுகொண்டே மாவு பிசையும்போது கால்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டியிருக்கும்.

மாஸ்டர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் வெரிகோஸ் வெயின்ஸ் என்னும் நரம்பு முடிச்சு நோயால் பாதிக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள். இன்ஜினீயர் சம்பளத்தை விட புரோட்டா மாஸ்டர் சம்பளம் அதிகமா என்று கிண்டல் செய்வதும், சம்பளத்தை வைத்து மனிதர்களை மதிப்பீடு செய்வதும், சரியான சமூகப் பார்வை இல்லை!

வெங்கடேஷ் ஆறுமுகம்

கட்டாய ஹெல்மெட் அணிவதை முதலில் சென்னை விமான நிலையத்தில் அமல்படுத்துவதுதான் சரியாக இருக்கும்.

உமாமகேஸ்வரன் லாவோட்சு

அந்த பிரபாகரன் சிலை வந்து அண்ணன் மானஸ்தன் சீமான் எங்கன்னு கேட்டா நான் என்ன சொல்வேன்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x