

கருப்பின மக்களின் உரிமைகளுக்காப் போராடிய மார்ட்டின் லூதர் கிங், 1968 ஏப்ரல் 4-ல் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே அதிர்ச்சியை அளித்து. மற்றொரு கருப்பின விடுதலைப் போராளி மால்கம் எக்ஸைப் போல் அல்லாமல், முற்றிலும் மிதவாதப் போக்கைக் கொண்டிருந்தவரும், மகாத்மா காந்தியின் அகிம்சைக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அமைதி வழியில் போராடியவருமான மார்ட்டின் லூதர் கிங்கைக் கொன்றவர் யார் என்ற கேள்விக்குச் சில நாட்களில் விடை தெரிந்தது.
மெம்பிஸ் நகரத்தின் லோரெய்ன் விடுதியின் இரண்டாவது மாடியின் பால்கனியில் நின்றுகொண்டிருந்தபோதுதான் மார்ட்டின் லூதர் கிங் சுட்டுக்கொல்லப்பட்டார். அன்று மாலை ரெமிங்டன் 30-06 ரகத் துப்பாக்கி அந்த விடுதியின் அருகே கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் படிந்திருந்த கைரேகை, பிற சாட்சியங்களின் அடிப்படையில், ஜேம்ஸ் எர்ல் ரே என்பவர்தான் இந்தக் கொலையைச் செய்தார் என்ற முடிவுக்கு விசாரணை அதிகாரிகள் வந்தனர். சின்னச் சின்னக் குற்றங்கள் செய்துவந்த ரே, அதற்கு முந்தைய ஆண்டில் திருட்டு வழக்கு ஒன்றுக்காகச் சிறையில் இருந்தபோது சிறையிலிருந்து தப்பியிருந்தார். நிறவெறி காரணமாக மார்ட்டின் லூதர் கிங்கைக் கொலைசெய்ததாகத் தெரியவந்தது. இந்தக் கொலைக்குப் பின்னர் தலைமறைவான ரே, அமெரிக்காவை விட்டே தப்பிச் சென்றுவிட்டதாகத் தகவல் வெளியானதையடுத்து, பிற நாடுகளிலும் அவரைத் தேடும் பணி தீவிரமாக நடந்துவந்தது.
அதே ஆண்டில் ஜூன் 8-ல் லண்டன் விமான நிலையத்தில் ஸ்காட்லாந்து யார்டு போலீஸாரால் ரே கைதுசெய்யப்பட்டார். அங்கிருந்து பெல்ஜியம் வழியாக ஜிம்பாப்வே நாட்டுக்குத் தப்பிச் செல்ல அவர் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்பட்டது. அப்போது நிறவெறி வெள்ளையின அரசு அந்நாட்டில் ஆட்சியில் இருந்தது. 1969 மார்ச்சில் மெம்பிஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 99 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கிடையே, அமெரிக்கப் புலனாய்வு நிறுவனமான எஃப்.பி.ஐ-யின் சதி காரணமாகவே மார்ட்டின் லூதர் கிங் கொல்லப்பட்டதாகப் பரபரப்புக் குற்றச்சாட்டு எழுந்தது. அவர் இறப்பதற்குப் பல ஆண்டுகாலம் முதலே அவரைக் கண்காணித்துவந்தது எஃப்.பி.ஐ. மார்ட்டின் லூதர் கிங் கம்யூனிஸச் சிந்தனைகளால் கவரப்பட்டிருந்ததாக எஃப்.பி.ஐ. இயக்குநர் எட்கர் ஹூவருக்குப் பலத்த சந்தேகம் இருந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், இந்தக் கூற்று நிரூபிக்கப்படவே இல்லை. சிறையில் இருந்த ஜேம்ஸ் எர்ல் ரே 1998-ல் காலமானார்.