Published : 02 Jun 2015 02:44 PM
Last Updated : 02 Jun 2015 02:44 PM

இன்று பேய், நாளை வா!

பேய், பிசாசு, குட்டிச் சாத்தான் கதை என்றால் யாருக்குத்தான் பிடறி சிலிர்க்காது! நள்ளிரவில் சினிமா பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும்போது, பின்னாடியே வந்து பீடிக்கு நெருப்பு கேட்ட பேய்களைப் பற்றி தங்கள் குழந்தைகளிடம் கதை அளந்த போன தலைமுறை அப்பாக்களுக்கு கணக்கு உண்டா? அல்பாயுசில் போனவர்களும், நிறைவேறாத ஆசையோடு டிக்கெட் வாங்கியவர்களும் நம்மிடையே ஆவியாக அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்பது உலகம் முழுக்க உள்ள நம்பிக்கை.

பேய்கள் நள்ளிரவில்தான் நடமாடும், நினைத்த வடிவம் எடுக்கும், காற்று வேகத்தில் பயணிக்கும், ரத்தம் குடிக்கும் என்றெல்லாம் அதன் கல்யாண குணங்களை காலம்காலமாக விவரித்து வந்திருப்பதால் திரைப்படம் தயாரிக்க மிகவும் தோதாக இருக்கிறது. நல்ல காலம், இந்தப் பேய்களுக்கு ‘பிளட் பேங்க்’ இருக்குமிடம் தெரியாது. தெரிந்தால் உட்லண்ட்ஸ் ‘டிரைவ் இன்’ போல தினமும் அங்கே போய்விடும்.

கிராமங்களில் நள்ளிரவில் தூரத்தில் மீத்தேன் வாயு தானாக வெளிப்பட்டு எரிவதை கொள்ளிவாய்ப் பிசாசு என்றார்கள். வீட்டுத் திண்ணையில் அல்லது களத்தில் கட்டில் போட்டு மல்லாந்த நிலையில் படுத்தவர்களின் மார்பு மீது திடீரென காற்றின் அழுத்தம் அதிகமாகி மூச்சுத் திணறல் ஏற்பட்டதை ‘அமுக்குவான் பிசாசு’ என அஞ்சினார்கள். (இப்படி அமுக்குவான் குமுக்கும்போது சடக்கென்று ஒருக்களித்து படுத்தால் ’பேய்’ நம்மைவிட்டு ‘பை’ சொல்லி உடனே விலகும் என்பது விஞ்ஞானம்.)

“தெருவுல நடு மத்தியானம் வரும்போது திடீர்னு குப்பை - புழுதி எல்லாம் வட்டமா சுத்துறதைப் பார்த்தா ஓடி ஒளிஞ்சுக்கடா பேராண்டி... அது சூறாவளிப் பிசாசு. ஒருவேளை ரொம்ப கிட்டக்க மாட்டிக்கிட்டா உன் உடம்புல இருக்குற துணியை எல்லாம் கழட்டிப் போட்டுட்டு நில்லு. பகல் பேய் தானா பதறி ஓடிடும்” என்று எச்சுமி பாட்டி சொன்னதைக் கேட்டு, நிர்வாண கோலத்தில் நின்ற வகுப்புத் தோழனை நினைவிருக்கிறது. பாட்டி இப்படித் தைரியமாக பச்சைப் பொய் சொன்னதற்குக் காரணம் நாம் ஆடைகளை அவிழ்க்கத் தொடங்குவதற்கு முன்னாலேயே அங்கே காற்றின் வேகம் குறைந்து, சுழல் மறைந்துவிடும் அல்லது தொலைவுக்குச் சென்றுவிடும். (ஆடை களைந்த தோழனைப் பார்த்து நாங்கள் அலறி ஓடியது தனிக் கதை!)

இப்போதெல்லாம் யாராவது இப்படி முயற்சித்தால், பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக போலீஸ் பிடித்து பொடனியில் விளாசுவது நிச்சயம்.

சில வருடம் முன்னால்கூட, ‘ஹோம் டெலிவரி’யாக வேலூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் நள்ளிரவில் பேய் வந்து கதவைத் தட்டுவதாக வதந்தி பரவியது. அனைவரும் ‘இன்று போய் (பேய்?) நாளை வா’ என்று வீட்டுக் கதவில் எழுதி வைத்தார்கள். தன்னைக் கடன்காரர்களைப் போல நடத்து கிறார்களே என்று அந்தப் பேய் ஆத்திரம் கொள்வதற்கு பதிலாக , சாதுவாக படித்துப் பார்த்துவிட்டு திரும்பிப் போனதாகவும் நம்பினார்கள்; நல்ல வேளை... பேய்கள் அத்தனைக்கும் படிக்கத் தெரிந்திருக்கிறதே!

மதுரையில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னால் முனிச்சாலை அருகில் ஒரு சுடுகாடு சாலையோரத்திலேயே இருந்தது. அதை நெருங்கும் சமயம், “செருப்பு... முறம்... விளக்குமாறு’’ என்று கத்திக்கொண்டே ஓட்டமும் நடையுமாகக் கடந்தது அந்தக் காலம். இப்போதெல்லாம், முனிச்சாலை மட்டுமல்ல.. தமிழ்நாட்டின் சகல சாலைகளிலும், ஜெகஜ்ஜோதியாக தெரு விளக்கு, வாகன விளக்கு வெளிச்சத்துடன்.... ராத்திரி பூராவும் ஜன நடமாட்டம் இருப்பதால்.. பேய்களுக்கு மவுசு இல்லாமல் போய்விட்டது. வீட்டுக்குப் பின்புறம், ‘மூச்சா’ போகிற சமயத்தில் தோட்டத்து முருங்கை மரத்தில் இருந்து, குரளைப் பேய் இறங்கி வந்து குரல் வளையைப் பிடிக்குமோ என்று, பொழுது விடிகிற வரையில் ‘அடக்கி’க் கொண்டிருந்த அவஸ்தை எல்லாம் இந்தக் காலத்துப் பசங்களுக்கு எங்கே புரியப்போகிறது?

இப்படியாக, நிஜ வாழ்க்கைப் பேச்சில் ரொம்பவே அருகிவிட்ட பேய்கள் சினிமாவில் சாகா வரம் பெற்று, கொடி கட்டிப் பறப்பது ஆச்சரியம்தான். முழுக்க மனுஷர்களே வருகிற கதைக்குகூட லாஜிக் வைக்காத நம்மவர்களுக்கு, மூளைக்கே வேலை வைக்காத பேய் கதைகளை சினிமாவாக எடுப்பது வெல்லக்கட்டியாக இருக்கிறது.

பல வருடங்களுக்கு முன்பு வந்த ‘யார் நீ?’ திரைப்படத்தை ‘ரெண்டாவது ஆட்டம்’ பார்த்துவிட்டு வீட்டில் ‘விஷக் காய்ச்சலோடு ஆடியவர்கள்’ அநேகம். பிறகு விட்டலாச்சார்யாவின் ‘ஜெகன்மோகினி’ வந்து, பேய்கள் அப்படியொன்றும் அச்சமூட்டுபவை அல்ல என்று நம்பிக்கை ஊட்டியது. ஹாலிவுட்டில் இருந்து ‘எக்ஸார்சிஸ்ட்’ மாதிரியான படங்கள் சகட்டுமேனிக்கு படை எடுத்ததும் ஒரு காலம். தியேட்டரில் தன்னந்தனியாக உட்கார்ந்து இந்தப் படத்தை கடைசி வரை பார்த்துவிட்டு உயிரோடு வெளியே வருகிறவர்களுக்கு பணமூட்டை பரிசாகக் கொடுக்கிறார்கள் என்று பேய் வேகத்தில் பரவிய வதந்திகூட பலருக்கு மறந்திருக்காது.

சமீபகாலமாகத்தான் தமிழில் பேய்கள் காமெடி பீஸாகிவிட்டன. ‘அரண்மனை’, ‘காஞ்சனா’, ‘யாமிருக்க பயமே’, ‘டார்லிங்’, ‘மாஸ்’ என்று அடுத்தடுத்து கல்லா கட்டும் பேய்களைப் பார்த்து மக்கள் சிரிப்பாய் சிரிக்கிறார்கள். ‘பிசாசு’ போன்ற மோகினிப் பேய்களின் திகிலான காதல் பார்வையில் மயங்கவும் செய்கிறார்கள்.

அகால மரணம் அடைந்தவர்கள் எல்லாம் பேயாகத்தான் அலைவார்கள் என்றால் சென்னை ஜி.ஹெச். வாசலில் இருக்கிற பஸ் ஸ்டாப் பெஞ்ச் பூராவும் பேய்கள்தான் படுத்திருக்க வேண்டும்.இருந்தாலும் இந்த மாதிரி கற்பனைகளில் ஏதோ ஒரு கிக் இருக்கத்தான் செய்கிறது.

பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி வில்லன்கள் படுகொலை செய்யும் பெண்கள் பேயாக வந்து பழிவாங்குகிற கதைதான் சினிமாக்காரர்களுக்கு மினிமம் கியாரன்டி. பூஞ்சையான அதே பெண் பேயாக சில்வஸ்டர் ஸ்டாலோனைவிட புஜபல பராக்கிரமம் கொண்டு காரைக்கூட ஒரு கையில் தூக்கி வீசி எறிவார்.

பிறகு ஐ.பி.சி., சி.ஆர்.பி.சி. போன்றவற்றால் நெருங்கக்கூட முடியாத வகையில் வில்லன்களை ஒவ்வொருவராகக் கொல்ல ஆரம்பிப்பார். யாரும் கேள்வி கேட்டுவிட முடியாது. பேயாக நடிக்கும் நடிகைக்கு மேக்கப் செலவும் மிச்சம். நமக்கோ நிஜ முகத்தை பார்த்து அச்சம்.

திரையில் பேய் வருகிற போதெல்லாம், கைகொட்டி ரசித்துச் சிரிக்கிற குழந்தைகளுக்கு நடுவே, தவறாமல் பேய்ப் படங்களுக்கு வந்து ‘இதெல்லாம் வாழ்க்கையில் சகஜமப்பா’ என்று மனசை ஆற்றிக்கொள்கிற பெரியவர்களில், 90 சதவீதம் திருமணமானவர்களே என்று அமானுஷ்யா அண்டு கோ எடுத்த ஒரு சர்வே தெரிவிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x