Published : 28 Jun 2015 11:21 AM
Last Updated : 28 Jun 2015 11:21 AM

முகம்மது யூனுஸ் 10

குறுங்கடன் திட்ட முன்னோடி

ஏழை மக்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்குப் பாடுபட்டு வருபவரும் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவருமான முகம்மது யூனுஸ் – (Muhammad Yunus) பிறந்த நாள் இன்று (ஜூன் 28). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# வங்கதேசத்தின் சிட்டகாங் அருகே பத்துவா என்ற கிராமத்தில் (1940) பிறந்தார். தந்தை நகை வணிகர். உதவி என்று யார் வந்தாலும் ஓடிச்சென்று உதவுபவர் தாய். முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவவேண்டும் என்று கூறி வளர்க்கப்பட்ட யூனுஸ், தாக்கா பல்கலைக்கழகத்தில் பொருளியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். அமெரிக்காவின் வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தில் 1969-ல் முனைவர் பட்டம் பெற்றார்.

# அமெரிக்காவின் மிடில் டென்னஸி மாநிலப் பல்கலைக்கழகம், சிட்டகாங் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

# பின்தங்கிய கிராமத்துக்கு 1974-ல் மாணவர்களை சுற்றுலா அழைத்துச் சென்றார். சிறுதொழில் செய்யும் பெண்கள் அதிக வட்டிக்கு கடன் வாங்குவதையும், அதுவே சுமையாகி அவர்களை வறுமையில் தள்ளுவதையும் கண்டார். சொந்தப் பணத்தில் இருந்து அவர்களுக்கு கொஞ்சம் கடன் கொடுத்தார்.

# அது அவர்கள் லாபம் சம்பாதிக்க உதவியதுடன், ஓரளவு வாழ்க்கை நடத்தவும் உதவியது. கடன் வாங்கியவர்கள் நேர்மையுடன் திருப்பியும் செலுத்தினர். தொடர்ந்து ஏழை மக்களுக்கு குறுங்கடன் (Micro Loan) வழங்கிவந்தார்.

# கிராமீன் வங்கியை 1983-ல் தொடங்கினார். இதன்மூலம் கடன் பெறுபவர்களில் 97% பேர் பெண்கள். தரப்பட்ட கடனில் 97% தொகை முறைப்படி திருப்பியும் செலுத்தப்பட்டன. உலக அளவில் வங்கித் துறையில் இது மகத்தான சாதனை. கிராமீன் வங்கி மூலம் கல்விக் கடன், வீட்டுக் கடன், மீன்பிடி, விவசாயம், கைத்தறி தொழில்களுக்கு கடன் வழங்கப்படுகிறது.

# ஏழைகள் முன்னேற்றத்துக்குப் பாடுபட்டதற்காக முகம்மது யூனுஸுக்கும், இவரது கிராமீன் வங்கிக்கும் சேர்த்து சமாதானத்துக்கான நோபல் பரிசு 2006-ல் வழங்கப்பட்டது. இதில் கிடைத்த தொகையை ஏழைகள் ஊட்டச்சத்து திட்டத்துக்கும், கண் மருத்துவமனை அமைக்கவும் வழங்கினார்.

# வங்கதேச அதிபர் விருது, ரமன் மகசேசே விருது, மனிதாபிமானச் சேவைப் பதக்கம், உலக உணவுப் பரிசு, சிட்னி அமைதிப் பரிசு, காந்தி அமைதிப் பரிசு, அன்னை தெரசா விருது என 50-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

# சிறிய அளவிலான கடன் வழங்குவதன்மூலம் ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும்’ என்பதை அடிப்படையாகக் கொண்ட கிராமீன் வங்கி, குறுங்கடன் வங்கிகளின் முன்னோடியாகும். கிராமப்புற, படிக்காத பெண்களுக்கு நம்பிக்கையூட்டி, அவர்களை தொழில் தொடங்கவைத்து சொந்தக் காலில் நிற்கச் செய்வதில் இதன் பங்களிப்பு மகத்தானது.

# முகம்மது யூனுஸின் குறுங்கடன் திட்டம் உலக அளவில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. வறுமை ஒழிப்புக்கு சிறந்த வழியை உருவாக்கியவர் என்று யூனுஸை உலக பொருளாதார நிபுணர்கள் பாராட்டுகின்றனர்.

# பின்தங்கிய நாடுகளில் உள்ளவர்கள், ஏழை மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து சமூக, பொருளாதாரத்தில் அவர்களது நிலை உயர முகம்மது யூனுஸ் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்.



- ராஜலட்சுமி சிவலிங்கம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x