

தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியத் திட்டம், கணவனால் கைவிடப்பட்ட - ஆதரவற்ற பெண்கள் ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி விதவைகள் ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. தேசிய ஓய்வூதியத் திட்டங்கள் மத்திய அரசிடமிருந்து குறிப்பிட்ட பங்குத் தொகை பெற்றும், மற்ற திட்டங்கள் 100 சதவீதம் தமிழக அரசின் பங்களிப்புடனும் செயல்படுத்தப்படுகின்றன.
இந்த திட்டங்களின் கீழ் வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் 2011-ம் ஆண்டு மே மாதம் முதல், ரூ.500-ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சமூக பாதுகாப்புத் திட்டங்கள் தகுதியான பயனாளிகளை மட்டுமே சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் சில வரையறைகள், நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. அந்த வரையறைக்குள் வரும் மூத்த குடிமக்கள் அனைவரும் தக்க சான்றுகள், ஆவணங்களைக் காட்டி மேற்கண்ட உதவித் தொகைகளைப் பெறலாம்.
முதலில் ஆதரவற்ற முதியோர் ஓய்வூதியத் திட்டம் குறித்துப் பார்க்கலாம். இதை சுருக்கமாக ‘ஓ.ஏ.பி.’ என்பார்கள். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டுமானால் விண்ணப்பதாரரின் வயது 65 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். எந்த விதமான வருமானமும் இருக்கக் கூடாது. பிச்சை எடுக்கக் கூடாது. 18 வயதுக்கு மேற்பட்ட மகன் அல்லது பேரன் (மகன் வழி) ஆதரவு இருக்கக் கூடாது. சம்பாதிக்க இயலாத நிலையில் இருக்க வேண்டும். கூரை அல்லது ஓட்டு வீடு தவிர வேறு சொத்து எதுவும் இருக்கக் கூடாது.
அடுத்து, ஆதரவற்ற விதவை ஓய்வூதியத் திட்டம். இதைப் பெற வயது வரம்பு கிடையாது. மறுமணம் செய்திருக்கக் கூடாது. வருமானம் இல்லாத வயது வந்த மகன் இருந்தாலும் ஓய்வூதியம் பெறலாம். பிச்சை எடுக்கக் கூடாது. வருமான ஆதாரங்கள் எதுவும் இருக்கக் கூடாது. ரூ.5 ஆயிரத்துக்கு மேல் சொத்து இருக்கக் கூடாது.
அடுத்தது, கணவனால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற மனைவிக்கான ஓய்வூதியத் திட்டம். இதில் பயன்பெற குறைந்தபட்சம் 30 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். திருமணம் முறைப்படி நடந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பிரிந்து வாழ்பவராக இருக்க வேண்டும். நிரந்தர முகவரி தேவை. விண்ணப்பதாரர் வருமானம் ஏதுமின்றி இருந்தால், வயதுவந்த மகன்கள் இருந்தாலும்கூட ஓய்வூதியம் பெறத் தகுதி உண்டு. வருமான ஆதாரம் இருக்கக் கூடாது. ரூ.5 ஆயிரத்துக்கு மேல் சொத்து இருக்கக் கூடாது.
சரி, இவற்றைப் பெறுவதற்கான நடைமுறைகள் என்ன?
(மீண்டும் நாளை சந்திப்போம்)