Last Updated : 15 Jun, 2015 03:20 PM

 

Published : 15 Jun 2015 03:20 PM
Last Updated : 15 Jun 2015 03:20 PM

ஆவலை வீசுவோம் 6 - ஆதிகால கையேடு டி.எம்.ஓ.இசட்!

டி.எம்.ஓ.இசட் - இணையத்தின் ஆரம்ப காலத்தில் பரவலாக வழக்கத்தில் இருந்த இணையதளங்களை வகைப்படுத்தி பட்டியலிடும் கையேடு. அல்கோரிதம் ஆதிக்கம் வந்துவிட்ட நிலையில், மனிதர்களாக பார்த்துப் பார்த்து இணையதளங்களை தேர்வு செய்வதன் சிறப்பை உணர்த்தும் தேடியந்திரம்.

டி.எம்.ஓ.இசட் (DMOZ) கொஞ்சம் பழைய தேடியந்திரம். கூகுள் போல் விஸ்தாரமான தேடல் அனுபவத்தையோ அல்லது கூகுளுடன் மல்லு கட்டும் தேடியந்திரங்கள் அளிக்கும் குறிப்பிட்ட வகையான தேடல் தன்மையையோ அளிக்க கூடியதல்ல.

இதுவும் ஒரு சாதனையே!

உண்மையில் டி.எம்.ஓ.இசட் இணைய கையேடு (web directory). அதாவது, இணையதளங்களின் வகைப்படுததப்பட்ட பட்டியல். யாஹூவின் ஆரம்ப கால வடிவம். இணைய கையேடுகளின் காலம் முடிந்துவிட்டதாக கருதப்படும் நிலையில், இது தொடர்ந்து செயல்பாட்டில் இருப்பதே ஒரு சாதனைதான்.

பயன்பாட்டில் நோக்கில் இதை பெரிதாக பரிந்துரைக்க முடியாது. ஆனால், டி.எம்.ஓ.இசட் பற்றி நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் இணையத்தில் நீண்ட காலமாக நீடித்து நிற்கும் இணைய கையேடாக இருப்பதால் மட்டும் அல்ல; மனித மேற்பார்வையால் பராமரிக்கப்பட்டு வருவதாலும்தான்!

செவ்வாய் கிரகம் போன்றவற்றில் வேற்றுகிரகவாசிகள் இருந்து அவர்கள் பூமிக்கு குடிபெயர்ந்து ஆதிக்கம் செலுத்த துவங்கிவிட்டால் மனிதர்களாக இருப்பது எப்படி முக்கியமானதாக இருக்குமோ அப்படி, அல்கோரிதம் ஆதிக்கம் செலுத்தும் காலத்தால், மனித எடிட்டர்கள் பார்த்து பார்த்து இணையதளங்களை பட்டியலிடும் கையேடாக இருப்பது பெரிய விஷயம்தான். அதிலும் மனித மேற்பார்வையிலான தேடல் என்ற முழக்கங்கள் எல்லாம் மண்ணை கவ்வி, அல்கோரிதமே சரணம் என்பதே டிஜிட்டல் நிதர்சனம் எனும் நிலையில் டி.எம்.ஓ.இசட் இணையத்தில் மிஞ்சி நிற்கும் மைல்கற்களில் ஒன்று.

கடந்த நூற்றாண்டின் இறுதியிலும், புத்தாயிரமாண்டின் துவக்கத்திலும் இணையத்தை பயன்படுத்தியவர்கள் டி.எம்.ஓ.இசட் தளத்தை பார்த்தாலே அந்த கால நினைவுகளில் மூழ்கிவிடுவார்கள். 2014 இறுதியில் மூடப்பட்டுவிட்ட, அதற்கு பல ஆண்டுகள் முன் பரவலாக பயன்படுத்தப்பட்ட யாஹூ டைரக்டரியை நினைவுபடுத்தும் வகையில் இதன் முகப்பு பக்கம் அமைந்திருக்கிறது.

முகப்பு பக்கத்தில் நடுவே மொத்தம் மூன்று வரிசைகள். ஒவ்வொரு வரிசையிலும் தலைமை வார்த்தைகள் - அதாவது வகைகளை குறிக்கும் சொற்கள். அவற்றின் கீழ் உப தலைப்புகள். கலை, பிஸ்னஸ், கம்ப்யூட்டர், கேம்ஸ், ஹெல்த், ஹோம்... என வரிசையாக இருக்கும் வகைகளில் தேவையானதை தேர்வு செய்த்து கிளிக்கி உள்ளே நுழைந்தால் அந்த வகையில் பட்டியலிடப்பட்டிருக்கும் இணையதளங்களை பார்க்கலாம். பல வகைகளில், துணை பிரிவுகள், அவற்றின் உப வகைகள் என விரிந்துகொண்டே போகும். ஒவ்வொரு பிரிவிலும் பயனுள்ள இணையதளங்களை பார்க்கலாம்.

இணையதள முகவரி, அதற்கான ஒற்றை வரி அறிமுகம் என இருக்கும். பார்த்தவுடன் இணையதளத்தின் தன்மையை பளிச் என புரிந்து கொள்ளலாம். முகப்பு பக்கத்தில் கீழே வந்தால் உலக மொழிகளுக்கான பிரிவையும் பார்க்கலாம். இது தான் டிஎம்.ஒ.எஸ் இணைய கையேடு.

கைகுத்தல் அரிசி இது!

இணையம் கோடிக்கணக்கில் இனப்பெருக்கம் செய்து கொண்டிருக்கும் நிலையில், 40 லட்சத்திற்கும் சற்றே அதிகமான இணையதளங்களை கொண்டிருக்கும் இந்த கையேடு அலட்சியத்தை அளிக்கலாம். ஆனால், இவை எல்லாமே இந்த கையேட்டின் பின்னே உள்ள மனித எடிட்டர்களால் பார்த்து பார்த்து தேர்வு செய்து சேர்க்கப்பட்ட தளம். கூகுள் கொண்டு வந்து கொட்டும் தேடல் முடிவுகளில் பார்க்க கூடிய குப்பை தளங்களையும், இணைய பதர்களையும் இதில் பார்க்க முடியாது. கைகுத்தல் அரிசி போல எல்லாமே கவனமாக தேர்வு செய்யப்பட்டவை.

இரண்டு விதங்களில் இதில் தேடலாம். வகைகளை தேர்வு செய்து அங்கிருந்து துணைத் தலைப்புகளை படித்து, தளங்களின் பட்டியலை பார்த்து தேவையான தளத்தை தேடிப்பிடிக்கலாம். இல்லை, முகப்பு பக்கத்தில் மேலே உள்ள தேடல் கட்டத்தில் தேடும் தலைப்புக்கான குறிச்சொல்லை டைப் செய்தால், அந்தச் சொல்லுக்கு பொருத்தமான தளங்கள் இந்தத் தளத்தில் இருந்து பட்டியலிடப்படும்.

கூகுள் போன்ற தேடியந்திரங்களில் இருந்து டைப் செய்து லட்சகணக்கில் முடிவுகளை பெற்று, அதில் முதல் சில பக்கங்களை மட்டும் மேய்வதில் இருந்து இந்தத் தேடல் முற்றிலும் மாறுபட்டது. ஆனால் யார் கண்டது, அருமையான இணைய முத்துக்களை காணலாம்.

பயன்பாட்டு நோக்கில் இந்தத் தளம் உங்களை கவரவில்லை என்றால் கொஞ்சம் வரலாற்று நோக்கிலான தகவலை தெரிந்து கொள்ளலாம்.

தேடல் என்றாலே கூகுள் என்றாகிவிட்டதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் இன்னும் கூட, டி.எம்.ஒ.எஸ் தளத்தில் இணையதளத்தை சமர்பிக்க துடிக்கும் வெப்மாஸ்டர்கள் இருக்கின்றனர் தெரியுமா? கேள்வி - பதில் இணையதளமான குவோராவில் சென்று இந்தத் தளத்தின் பெயரை டைப் செய்து பாருங்கள்... டி.எம்.ஓ.இசட் தளத்தில் இணையதளத்தை சேர்ப்பது எப்படி? எனது தளத்தை சமர்பித்து பல மாதங்கள் ஆகியும் பதிலே இல்லையே என்பது போல பலர் கேள்வி கேட்டு கதறியிருப்பதை பார்க்கலாம். இன்னும் சில டி.எம்.ஒ.எஸ் தளம் இன்னும் செயல்படுகிறதா? என்று கேட்டிருப்பதையும் பார்க்கலாம் - அந்தக் கேள்விக்கு பின்னால் பார்த்தாலும், இணையதளம் சமர்பிக்கப்பட்டு பட்டியலிடப்படாத கரிசனமே இருக்கும். அந்த அளவுக்கு டி.எம்.ஒ.எஸ் தளத்தில் இடம்பெறுவதற்கு கிராக்கி இருக்கிறது.

ஆச்சர்யம்தான் இல்லையா? இதற்கு காரணம் நீண்ட காலத்திற்கு கூகுள் தனது இணைய கையேட்டிற்கான தரவு தளமாக இந்த தளத்தை கருதியதும், இதில் பட்டியலிடப்பட்டிருந்தால் கூகுள் தள தரவரிசையில் கன்னியமான மதிப்பெண் கிடைக்கும் என்பதாலும் தான். ஆக பேஜ்ராங்கில் முன்னுக்கு வர வேண்டும் என்றால் டி.எம்.ஒ.எஸ் தளத்தில் பட்டியலிடப்பட்டிருந்தால் செம லிங்க் கிடைத்தது போல் தான்!.

இந்த கையேட்டில் பட்டியலிடப்படும் தளங்கள் எல்லாம் மனித எடிட்டர்களால் கவனமாக தேர்வு செய்யப்படுவதால் இந்த மதிப்பு.

ஆனால், இந்தத் தளத்தில் உள்ள எடிட்டர்கள் பலர் சார்பாக செயல்படுவதாகவும், வேண்டிய தளங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் புகார்கள் இருக்கின்றன. இவற்றையும் குவோரா விவாத சரட்டில் பார்க்கலாம். இதில் எந்த அளவுக்கு உண்மையோ தெரியாது, ஆனால் டி.எம்.ஒ.எஸ் தளத்தில் இணையதளத்தை சமர்பித்துவிட்டு காத்திருக்க வேண்டும். அது ஏற்கப்பட சில நாட்கள் ஆகலாம். பல மாதங்கள் ஆகலாம். காத்திருப்பது மட்டுமே வழி என்கின்றனர்.

நிற்க, செயல்பாட்டு நோக்கிலான புகார்கள் ஒரு புறம் இருக்க, டி.எம்.ஒ.எஸ் கோட்பாடு நோக்கில சிறந்த முயற்சி என்பதில் சந்தேகமில்லை.

இணையத்தின் மிகவும் விரிவான மனித தயாரிப்பிலான கையேடு என பெருமைப்பட்டுக்கொள்ளும் இந்தத் தளம் இணையத்தின் தீர்மானமான கையேடு என்றும் வர்ணித்துக்கொள்கிறது.

இணையம் நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் நிலையில் அல்கோரிதம்களால் தேவைக்கேற்ப பொருத்தமாக தேடித்தர முடியவில்லை என்றும் மனித மேற்பார்வை சார்ந்த தளங்களில் நிதி பற்றாக்குறையால் கண்காணிப்பு முழுமையாக இல்லை என்றும் இதன் அறிமுக பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இணைய குடிமக்களின் உதவியோடு பராமரிக்கப்படும் இணைய குடியரசாக செயல்பட்டு வருதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 90.000-க்கும் மேற்பட்டோர் தன்னார்வ எடிட்டர்களாக இருக்கின்றனர். நீங்களும் இதில் இணையலாம் என முகப்பு பக்கத்தின் கீழே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. - இணையத்தின் மிகப்பெரிய மனிதர்களால் எடிட் செய்யப்படும் கையேட்டை உருவாக்க கைகொடுங்கள் என்று அழைப்பு அமைந்துள்ளது. எடிட்டர்களாக சேரவும், சேர்ந்த பின் எடிட் செய்யவும் கராரன விதிகள் இருக்கின்றன.

இந்த ஆதிகால கையேடு வலைச்சிலந்திகள் மற்றும் கூகுள் சர்வர் பண்ணைகளுக்கு மத்தியில் நீடித்து இருப்பதே குறிப்பிடத்தக்கது. இதன் தோற்றமும் கொஞ்சம் சுவாரஸ்யமானது.

சுவாரசிய வரலாறு

1998-ல் ரிச்சர்ட் ஸ்கெர்ட்னா எனும் தேடியந்திர முன்னோடி பால் ட்ரூயலுன் இணைந்து இந்த இணையதள பட்டியல் சேவையை துவக்கினார். அப்போது இதன் பெயர் Gnuhoo. மேலும் சில இணை நிறுவனர்களும் இருந்தனர். ஓபன் சோர்ஸ் முறையில் துவக்கப்பட்ட இதிலிருந்து மீறுவதாக புகார் வந்ததால், ஜிஎன்யூ அமைப்பு (ஓபன் சோர்ஸ் தந்தை ரிச்சர்ட் ஸ்டால்மன் துவக்கியது) ஆட்சேபம் தெரிவிக்கவே, பெயரை NewHoo என மாற்றினர். இதற்கு யாஹூ எதிர்ப்பு தெரிவித்தது.

இதனிடையே, அப்போது கொடிகட்டிப்பறந்த நெட்ஸ்கேப் நிறுவனம் இதை வாங்கவே ஒபன் டைரக்டரி பிராஜக்ட் என மாறியது. இதுவே DMOZ எனக் குறிப்பிடப்படுகிறது. அதாவது டைரக்டரி மொசில்லா என பொருள். ஓபன் சோர்ஸ் சித்தாந்த்தை குறிக்கும் வகையில் இப்படி பெயர் வைக்கப்பட்ட இந்த கையேடு பின்னர் ஏஒஎல் நிறுவனம் வசமானது. எனினும் தொடர்ந்து தன்னார்வலர்களின் பங்களிப்புடன் ஓபன் சோர்ஸ் சித்தாந்ததை அடியொற்றியே செயல்படுகிறது.

DMOZ தேடியந்திர முகவரி:>http://www.dmoz.org/

குவோரா விவாத முகவரி:>http://www.quora.com/Is-DMOZ-still-alive

விரிவான வரலாற்றுக்கு விக்கிபீடியா பக்கம்:>http://en.wikipedia.org/wiki/DMOZ

தேடியந்திர பயணம் தொடரும்...

சைபர்சிம்மன், இணைய வல்லுநர், தொடர்புக்கு enarasimhan@gmail.com

| முந்தைய அத்தியாயம்:>ஆ'வலை' வீசுவோம் 5 - மெட்டா தேடியந்திரங்கள்: தோழனும் காவலனும்! |

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x