Last Updated : 22 Jun, 2015 08:54 AM

 

Published : 22 Jun 2015 08:54 AM
Last Updated : 22 Jun 2015 08:54 AM

இன்று அன்று | 1633 ஜூன் 22: அறிவியல் தந்தையை சிறையில் அடைத்த மதம்

சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் ஒன்றுதான் பூமி என்பது இன்று பள்ளிக்குழந்தைகளுக்குக் கூட தெரிந்த விஷயம். ஆனால், 400 ஆண்டுகளுக்கு முன் பல நாடுகளின் அரசுகளே இதை அறிந்து வைத்திருக்கவில்லை. பூமிதான் மையத்தில் இருப்பதாகவும், சூரியன் பூமியைச் சுற்றுகிறது எனவும் கத்தோலிக்கத் திருச்சபை நம்பியது. பூமி நிலையானது, அசையும் தன்மை அற்றது என்றும் நம்பியது. நம்ப மறுத்தவர்களைத் தண்டிக்கவும் செய்தது.

இந்த நிலையில் வியாழன் கோளின் நான்கு நிலவுகளைக் கண்டறிந்த பின்னர் பூமியை மையமாகக் கொண்டு கோள்கள் சுற்றவில்லை எனும் முடிவுக்கு வந்தார் இத்தாலியைச் சேர்ந்த கலீலியோ கலீலி. பல்வேறு அறிவியல் ஆய்வு களுக்குப் பிறகு ‘சூரியன்தான் பிரபஞ்சத்தின் மையம்; சூரியனை மையமாக வைத்துதான் பூமி சுற்றுகிறது’ என்று அறிவித்தார். கலீலியோவுக்கு முன்னரே சூரிய மையக் கோட்பாட்டைக் கண்டு பிடித்திருந்தார் கோபர்நிக்கஸ். ஆனால் மத நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கும் கண்டு பிடிப்பாக இருந்ததால் அச்சத்தின் காரணமாக அதை வெளிப்படுத்தாமல் விட்டுவிட்டார்.

கோபர்நிக்கஸின் கோட்பாட்டை மேம்படுத்திப் பிரகடனப்படுத்தத் துணிச்சலாக முடிவெடுத்தார் கலீலியோ. தொலைநோக்கிகளை மேம்படுத்துவதிலும் மிகுந்த கவனம் செலுத்தினார். அதன்மூலம், நிலவில் உள்ள வெடிப்புகள், சூரியனில் உள்ள கரும்புள்ளிகள் எனப் பலவற்றைக் கண்டறிந்தார். குறிப்பாக வியாழன் கோளின் நான்கு நிலவுகளையும் கண்டறிந்தார். ஆகவேதான் தற்போது வியாழன் கோள்கள் கலீலியோவின் நிலவுகள் என்று அழைக்கப்படுகின்றன.

சூரியன்தான் மையம் என கலீலியோ கூறியபோது பிற வானவியலாளர்களே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிறகு இரு நண்பர்கள் பேசிக் கொள்வது போன்ற பாணியில் சூரிய மையக் கொள்கைக்குப் பல ஆதாரங்கள் அளித்து ’டயலாக் கன்செர்னிங் தி டூ சீஃப் வேர்ல்ட் சிஸ்டம்ஸ்’ (Dialogue Concerning the Two Chief World Systems) என்ற புத்தகத்தை வெளியிட்டார் கலீலியோ. இது திருச்சபையின் நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கியதால் கோபமடைந்தார் எட்டாவது போப் அர்பன்.

உடனடியாக கலீலியோ மீது புலன் விசாரணை நடத்தி அவரைக் குற்றவாளி என அறிவித்தது திருச்சபை. இந்தக் கருத்தை வைத்துக்கொள்ளவோ, ஆதரிக்கவோ கற்பிக்கவோ தடை விதிக்கப்பட்டது. தனது கருத்துகளை கலீலியோ திரும்பப் பெற வேண்டும் என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டது. ரோமின் அரசுப் படைகள் மதச் சக்திகளோடு கைகோக்கவே வேறுவழியின்றி 1633 ஜூன் 22 அன்று தன் சூரிய மையக் கொள்கையைத் திரும்பப் பெற்றுக் கொண்டார் கலீலியோ. அதன் பிறகும் சாகும் வரை அவரை வீட்டுச் சிறையில் அடைத்தன மதமும், அரசும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x