

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான தீவிர வாசகர்களைக் கொண்டுள்ள அமெரிக்க எழுத்தாளர் டான் பிரவுன் (Dan brown) பிறந்த தினம் இன்று (ஜூன் 22). அவரைப் பற்றிய அரிய முத்துகள் பத்து :
l அமெரிக்காவில் நியு ஹாம்ப்ஷயர் மாநிலத்தில் உள்ள எக்ஸிடரில் (Exeter) பிறந்தார் (1964). தந்தை கணிதப் பேராசிரியர். அம்மா ஒரு இசைக்கலைஞர்.
l குழந்தைகளின் பிறந்தநாள் மற்றும் விடுமுறை நாட்களில் தந்தை விரிவான புதையல் வேட்டை விளையாட்டுகளை ஆடவைப்பார். டாவின்சி கோட் புத்தகத்தில் வரும் புதையல் வேட்டைக்கு இந்த விளையாட்டுகள்தான் அடிப்படை என்று குறிப்பிட்டுள்ளார். ஸ்குவாஷ் விளையாட்டு வீரர். பெற்றோரைப் போலவே பாடுவதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். ஸிந்த் அனிமல்ஸ் என்ற பெயரில் குழந்தைகள் இசை நாடாவை உருவாக்கினார்.
l பின்னர் சொந்தமாக இசைத்தட்டு நிறுவனத்தை ஆரம்பித்தார். பாடகர்-பாடலாசிரியர், பியானோ கலைஞராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடர ஹாலிவுட்டுக்கு 1991-ல் இடம் பெயர்ந்தார். 1993-ல் ‘டான் பிரவுன்’ என்னும் குறுந்தகட்டை வெளியிட்டார். அடுத்த ஆண்டு, ‘ஏஞ்சல்ஸ் & டெமான்ஸ்’ என்ற தலைப்பில் ஒரு குறுந்தகட்டை வெளியிட்டார்.
l ஓவியர் ஜான் லாங்டன் இதில் உருவாக்கித் தந்த அதே கலையெழுத்து வடிவம்தான் பின்னர் இதே தலைப்பில் இவர் எழுதிய புதினத்திலும் பயன்படுத்தப்பட்டது. மீண்டும் சொந்த ஊருக்கே வந்த இவர், தான் கல்வி கற்ற அதே பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். அந்த சமயத்தில் ‘தி டூம்ஸ்டே கான்ஸ்பிரசி’ என்ற சிட்னிஷெல்டனின் நாவலைப் படித்தார்.
l அதன் பிறகுதான் ஒரு பரபரப்புக் கதை எழுத்தாளராக மாறும் ஆசை இவருக்குள் துளிர்விட்டது. உடனடியாக ‘டிஜிட்டல் ஃபோர்ட்ரஸ்’ என்ற புத்தகத்துக்கான வேலையில் களம் இறங்கினார். 1998-ல் இந்த நாவல் வெளிவந்தது. தொடர்ந்து ‘டிஸப்ஷன் பாயின்ட்’ மற்றும் ‘ஏஞ்சல்ஸ் & டெமான்ஸ்’ ஆகிய புத்தகங்களை எழுதினார். புதினங்களின் கதாபாத்திரங்களுக்கு தனது நிஜ வாழ்வில் இடம்பெறுபவர்களின் பெயர்களையே சூட்டினார்.
l முதல் 3 நாவல்கள் பெரிய அளவில் விற்பனையாகவில்லை. ஆனால் 2003-ல் வெளிவந்த இவரது நான்காவது புத்தகம் ‘தி டாவின்சி கோட்’ விற்பனையில் சாதனை படைத்தது. வெளிவந்த முதல் வாரத்திலேயே நியுயார்க் டைம்ஸ் பத்திரிகையில் சிறப்பாக விற்பனையாகும் புத்தகங்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. உலகம் முழுவதும் 8 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகின.
l இதன் வெற்றி இவரது முந்தைய 3 புத்தகங்களின் விற்பனையையும் அதிகரிக்க வைத்தது. 2004-ல் இவரது 4 புத்தகங்களுமே ஒரே வாரத்தில் நியுயார்க் டைம்ஸ் பட்டியலில் இடம்பிடித்தன. இவரது புதினங்கள் உலகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பணமும் புகழும் குவிந்தன.
l ஆரம்பத்தில் நகைச்சுவை கதைகளையும் எழுதி உள்ளார். இவரது படைப்புகளில் வரலாறு, கிறிஸ்தவம் தொடர்ந்து இடம் பெற்றிருக்கும். ஒரு படைப்பை உருவாக்குவதற்கு ஏறக்குறைய 2 ஆண்டுகள் அதற்கான ஆய்வுகளை மேற்கொள்வார். தொடர்ந்து பல நாவல்கள் வெளிவந்தன.
l காலை 4 மணிக்கு எழுந்தால், எந்த கவனச் சிதறலும் இருக்காது என்பதுடன் தனது எழுதும் திறன் உச்சத்தில் இருக்கும் என்று கூறியுள்ளார். கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தி டாவின்சி கோட் திரைப்படமாக வெளிவந்தது.
l பல நாடுகளில் சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் சந்தித்த இந்தப் படம் உலகம் முழுவதும் 750 மில்லியன் டாலர் வசூலை குவித்தது. தொடர்ந்து எழுதி வரும் டான் பிரவுன், தன் சகோதரருடன் இணைந்து ஏழை மாணவர்களுக்கான பல நலத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்.