Last Updated : 26 Jun, 2015 10:59 AM

 

Published : 26 Jun 2015 10:59 AM
Last Updated : 26 Jun 2015 10:59 AM

பிள்ளை மனம்: ஒரு நிமிடக் கதை

செல்வம், சாரதா தம்பதிகளின் ஒரே மகள் சுகன்யா. பத்தாம் வகுப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து, பள்ளியில் முதல் இடம் பிடித்திருந்தாள்.

செல்வத்துக்கு மிகவும் பெருமையாக இருந்தது. தன் அலு வலக நண்பர்களுக்கெல்லாம் இனிப்புகள் வாங்கிக் கொடுத்து, தனது சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டார். சாரதா தனது அக்கம்பக்கத்து வீடுகளுக்கெல்லாம் சுகன்யாவோடு சேர்ந்து போய் சாக்லேட் கொடுத்து வந்தாள்.

அடுத்த நாள் - சுகன்யாவைப் பார்க்க அவளுடன் படித்த ரூபியும், செளம்யாவும் வீட்டுக்கு வந்திருந்தனர்.

‘‘அங்கிள், சுகன்யாவை பிளஸ் ஒன் எங்கே சேர்க்கப் போறீங்க…?” என்று செல்வத்திடம் கேட்டாள் ரூபி.

‘‘நாமக்கல், இல்லாட்டி ராசிபுரத்தில ஹாஸ்டலோட இருக்கிற மாதிரி ஏதாவது ஒரு ஸ்கூல்ல சேர்க்கலாம்னு இருக்கேன்மா. என்னோட சக்திக்கு மீறிய செலவுதான். ஆனாலும், பிளஸ் டூ மார்க்தானே அவளோட எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகுது? சிரமப்பட்டாவது சேர்த்துடணும்னு பார்க்கிறேன்” என்றார் செல்வம்.

அதைக் கேட்ட சுகன்யா, ‘‘அப்பா அங்கெல்லாம் போயி என்னால படிக்க முடியாது. நான் நம்ம வீட்டில இருந்தே, பக்கத்தில இருக்கிற ஏதாவது ஒரு பள்ளியில படிக்கிறேன். அது அரசுப் பள்ளியா இருந்தாலும் பரவாயில்லை” என்று சொல்லும்போதே அவளது கண்கள் கலங்கிவிட்டன.

‘‘உன்னை அங்கே போயித்தான் படிக்கணும்னு நாங்க கட்டாயப் படுத்தமாட்டோம். உனக்கு எங்கேயிருந்து படிக்கணும்னு விருப் பமோ, அங்கேயிருந்தே நீ படிக்கலாம்” என்று சொல்லி, சுகன்யா வின் தலையை ஆறுதலாய் தடவிக் கொடுத்தாள் சாரதா.

‘‘சரி, நீங்க பேசிக்கிட்டு இருங்க. ஆபிஸுக்கு நேரமாச்சு. நான் கிளம்புறேம்மா…!” என்ற செல்வம் வேகமாய்க் கிளம்பிப் போனார்.

‘‘இருங்க, நான் போயி டீ போட்டு எடுத்துட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு, சாரதா சமையலறைக்குச் சென்றாள்.

சற்றுநேரம் எதுவும் பேசாமல் அமைதியாய் உட்கார்ந்திருந்தனர் மூவரும்.

செளம்யாதான் முதலில் மெளனத்தைக் கலைத்தாள்.

‘‘ஏண்டீ, சுகன்யா. நீயும் எங்களோட ஹாஸ்டல்ல சேர்ந்து படிக்கலாம்ல. ப்ளீஸ்டீ” என்றாள்.

‘‘எங்க அப்பா, அம்மாவுக்கு நான் ஒரே பொண்ணுன்னு உங்களுக்கும் தெரியும். எங்கப்பா கொஞ்சம் கோபக்காரர். அடிக்கடி நான் ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வரும்போதெல்லாம் எங்க அப்பா, அம்மா கோபமா ஏதாவது சண்டை போட்டுக்கிட்டு இருப்பாங்க. நான் வந்ததும் எனக்குத் தெரிஞ்சிடக் கூடாதுன்னு உடனே சண்டைய நிறுத்திட்டு, எதுவுமே நடக்காத மாதிரி அமைதியா சகஜமா பேசிச் சிரிச்சிக்குவாங்க.

என்னாலதான் அவங்களுக்குள்ளே சண்டை பெரிசாகாம போய்க்கிட்டு இருக்கு. இப்ப நானும் வெளியே படிக்கப் போயிட்டேன்னா, அவங்களுக்குள்ளே ஏதாவது சண்டை வந்தா ஆறுதல் சொல்லி, சமாதானப்படுத்தக்கூட ஆளில்லை. அதனாலதான், எங்க அப்பா, அம்மா கூடயிருந்தே நான் படிக்கிறதா முடிவெடுத் துட்டேன்.” உறுதியான குரலில் தெளிவாக சுகன்யா சொல்லி முடிக்கவும், கலங்கிய கண்களை அவசரமாய்த் துடைத்துவிட்டு, டீ கோப்பைகளோடு உள்ளே வந்தாள் அம்மா சாரதா.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x