

1966-ல் லால் பகதூர் சாஸ்திரி மறைந்த பிறகு, காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் பதவியேற்றார் இந்திரா காந்தி. நாட்டின் முதல் பெண் பிரதமர் அவர்தான். 1967-ல் நடைபெற்ற தேர்தலில் 283 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றதன் மூலம் மீண்டும் பிரதமரானார்.
1971-ல் நடந்த அடுத்த தேர்தலின்போது மிகப் பெரிய சக்தியாக அவர் உயர்ந்திருந்தார். அந்தத் தேர்தலில், 350 தொகுதிகளில் வென்று பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது அவர் தலைமையிலான காங்கிரஸ் கட்சி. ரேபரேலி தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ராஜ் நாராயணனை விட ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தார் இந்திரா காந்தி. பெரும்பான்மை இடங்களைப் பெற்றதன் காரணமாக அடக்குமுறை ஆட்சியை அவர் நடத்துவதாக எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டின. உணவுப் பற்றாக்குறை, பணவீக்கம் போன்ற பிரச்சினைகள் வேறு.
இதற்கிடையே 1971 தேர்தலில் அவர் முறைகேட்டில் ஈடுபட்டார் என்று, ராஜ் நாராயணன் வழக்கு தொடர்ந்தார். இந்திரா காந்தியின் தேர்தல் முகவராகப் பணியாற்றிய யஷ்பால் கபூர், மத்திய அரசுத் தொகுப்பு நிதியிலிருந்து சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த அரசு ஊழியராகப் பணியில் இருந்தவர். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, அரசு ஊழியர்கள் தேர்தல் முகவராக ஈடுபடக் கூடாது. எனவே, அந்தத் தேர்தலில் இந்திரா காந்தி வெற்றி பெற்றது செல்லாது எனத் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார் ராஜ் நாராயணன். இந்த வழக்கு விசாரணை முடிந்து 1975 ஜூன் 12-ல் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஜக்மோகன் லால் சின்ஹா தீர்ப்பை அறிவித்தார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123-வது பிரிவு, 7-வது விதியின் அடிப்படையில் இந்திரா வெற்றி பெற்றது செல்லாது என்று தீர்ப்பளித்த நீதிபதி, அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து கடும் குழப்பம் நிலவியது. எனினும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை பதவியில் தொடரப்போவதாக இந்திரா அறிவித்தார். மறு விசாரணை நடக்கும்வரை இந்திரா காந்தி பிரதமராகப் பதவி வகிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. ஆனால், தீர்மானங்களின் மீது வாக்களிக்கும் உரிமை கிடையாது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.
இதைப் பயன்படுத்தி அவரைப் பதவிநீக்கம் செய்ய எதிர்க் கட்சிகள் முயன்றன. இந்த நெருக்கடிகளைச் சமாளிக்கவும் பலத்தை அதிகரித்துக்கொள்ளவும் நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார் இந்திரா காந்தி. இதையடுத்து சுதந்திரம் என்ற வார்த்தை கிட்டத்தட்ட வழக்கொழிந்துபோயிருந்தது. பத்திரிகை சுதந்திரம், அரசை எதிர்க்கும் போராட்டங்கள் என்று எதையும் அன்று நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. இந்தியாவையே இரும்புக் கரம் கொண்டு அடக்கி வைத்திருந்தார் இந்திரா காந்தி.