

இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியும் சமூக ஆர்வலருமான கிரண் பேடி (Kiran Bedi) பிறந்த தினம் இன்று (ஜூன் 9). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் (1949) பிறந்தவர். அப்பா வியாபாரி. சிறந்த டென்னிஸ் விளையாட்டு வீரரும்கூட. சேக்ரட் ஹார்ட் கான்வென்ட்டில் பள்ளிப் படிப்பு, அரசு மகளிர் கல்லூரியில் ஆங்கில இலக்கியம், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம், டெல்லி பல்கலைக்கழகத்தில் எல்எல்பி, டெல்லி ஐஐடியில் பிஹெச்.டி (சமூக விஞ்ஞானம்) என பல பட்டங்கள் பெற்றவர்.
l மாணவப் பருவத்தில் கவிதை ஒப்பித்தல், நாடகம், விவாத மேடை, பேச்சுப் போட்டிகளில் பல பரிசுகளை வென்றுள்ளார். அமிர்தசரஸ் கல்சா மகளிர் கல்லூரியில் விரிவுரையாளராக 2 ஆண்டுகள் பணியாற்றினார்.
l இந்திய காவல் துறையின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியாக 1972-ல் பணியில் சேர்ந்தார். டேராடூன் அடுத்த மசூரியில் காவல் துறை பயிற்சியைத் தொடங்கினார். அந்த பிரிவில் பயிற்சி பெற்ற 80 பேரில் இவர் ஒருவர்தான் பெண்.
l சிறந்த டென்னிஸ் வீராங்கனையும்கூட. டென்னிஸ் போட்டியில் ஆசிய அளவிலும், தேசிய அளவிலும் ஏராளமான பரிசுகள், பதக்கங்களை வென்றுள்ளார்.
l போக்குவரத்து கட்டுப்பாடு அதிகாரியாக இருந்தபோது, விதி மீறி நிறுத்தப்பட்டிருந்த பிரதமர் இந்திரா காந்தியின் காரையே கிரேன் வைத்து அப்புறப்படுத்திய அசாத்திய துணிச்சல் படைத்தவர். இவர் பணிபுரிந்த இடங்களில் குற்றங்கள் குறைந்தன. அதனால், பெண்களின் மரியாதை, அன்பைப் பெற்றார்.
l காவல் துறையினருக்கு பல்வேறு வசதிகளைப் பெற்றுத் தந்தார். ஏராளமான சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். தனக்கு வழங்கப்படும் விருதுகளை சகாக்களோடு பகிர்ந்துகொள்ளும் பரந்த மனம் படைத்தவர்.
l 20 ஆண்டுகளுக்கு மேல் காவல் துறையில் மகத்தான சேவையாற்றியுள்ளார். சில குறுக்கீடுகளால், ‘பூலோக நரகம்’ என்று வர்ணிக்கப்பட்ட திஹார் சிறைக்கு பணிமாற்றம் செய்யப் பட்டார். அந்த சிறைச்சாலையையும் ஒரு தவச்சாலையாக மாற்றி சாதனை படைத்தார்.
l சர்வதேச அளவில் பேரும் புகழும் பெற்றார். ஐ.நா. சபையின் சிவிலியன் போலீஸ் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். 1979-ல் காவல் துறை வீரப்பதக்கம், போதைப் பொருள் தடுப்பு பணிகளுக்கான நார்வே நாட்டு விருது, பிலிப்பைன்ஸ் நாட்டின் மகசேசே உள்ளிட்ட ஏராளமான விருதுகள், பட்டங்கள், கவுரவங்கள், பரிசுகளைப் பெற்றுள்ளார்.
l போதைப் பொருள் தடுப்பு மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மேம்பாடுகளுக்காக இந்தியா விஷன், நவஜோதி ஆகிய அமைப்புகளை நிறுவியுள்ளார். பல நூல்கள், ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். ‘‘இளமையில் எதற்கும் சமரசம் செய்துகொள்ளாத பண்பையும், மனசாட்சிக்கு எதிரான அநீதியை எதிர்த்துப் போராடவும் கற்றுக்கொண்டேன். அதை இன்றுவரை கடைபிடிக்கிறேன்’’ என்பார்.
l இவரது வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு பல மொழி களில் திரைப்படங்கள், ஆவணப் படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அரசியல், ஊழல் ஒழிப்பு, சமூக மேம்பாடு ஆகிய களங்களில் இன்றும் அதே மிடுக்குடனும் சுறுசுறுப்புடனும் இயங்கி வருகிறார்.