

அமெரிக்க தடகள வீராங்கனையும், உலகின் வேகமான பெண் என்று 1960-களில் வர்ணிக்கப்பட்டவருமான வில்மா குளோடியன் ருடால்ஃப் (Wilma Glodean Rudolph) பிறந்த தினம் இன்று (ஜூன் 23). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l அமெரிக்காவின் டென்னஸி மாநிலம் செயின்ட் பெத்லஹேமில், கறுப்பினக் குடும்பத்தில் 22 பேரில் 20-வது குழந்தையாக குறைமாதத்தில் (1940) பிறந்தார். தந்தை ரயில்வே தொழிலாளி. அம்மா வீட்டு வேலை செய்பவர்.
l போலியோவால் பாதிக்கப்பட்டு 4 வயதில் நடக்க முடியாமல் போனது. குடும்ப வறுமை காரணமாக தரமான சிகிச்சைகூட கிடைக்கவில்லை. குழந்தை நடக்காது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர். நம்பிக்கை இழக்காத தாய், தன் குழந்தையை நடக்கவைத்தே தீருவது என்று முடிவு கட்டினார். வெகு தொலைவில் இருந்த ஒரு ஊரில் தெரப்பி சிகிச்சைக்கு சிறுமியை வாராவாரம் அழைத்துச் சென்றார்.
l வில்மாவின் கால்களுக்கு தினமும் மசாஜ் சிகிச்சை அளிக்கும் பணியில் அம்மாவும் அத்தனை குழந்தைகளும் முழுமூச்சாக ஈடுபட்டனர். அண்ணன்களும் அக்காக்களும் தங்கள் குட்டித் தங்கைக்கு தினமும் 4 முறை மசாஜ் செய்தனர்.
l நான்கே ஆண்டுகளில், காலில் ‘பிரேஸ்’ கவசம் அணிந்துகொண்டு நடக்க ஆரம்பித்தாள். பிறகு பிரத்தியேக காலணி அணிந்து, விடாமல் பயிற்சி செய்தாள். கூடைப்பந்து வீரர்களான தன் சகோதர, சகோதரிகளுடன் சேர்ந்து தினமும் கூடைப்பந்து விளையாடினாள். 12 வயதில் எந்த செயற்கை சாதனமும் இல்லாமல் நடக்க மட்டுமல்ல.. ஓடவே செய்தாள்.
l ஓட்டப் பயிற்சி மேற்கொள்ளும்படி அவரை உற்சாகப்படுத்தினார் ஒரு தடகளப் பயிற்சியாளர். மிகச் சிறப்பாக ஓடியவர், உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது, 1956-ல் மெல்பர்ன் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மகளிர் 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
l டென்னஸி பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1960-ல் ரோம் ஒலிம்பிக்கில் கலந்துகொண்டார். அப்போது அவருக்கு திருமணமாகி, குழந்தையும் இருந்தது.
l 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டத்தில் 2 தங்கம் வென்றார். 200 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனை படைத்தார். 400 மீட்டர் தொடர் ஓட்டத்தின்போது, கணுக்காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. வலியைப் பொருட்படுத்தாமல் ஓடி தன் அணியை வெற்றிபெறச் செய்து, 3-வது தங்கமும் வென்றார். ஒலிம்பிக்கில் 3 தங்கம் வென்ற முதல் அமெரிக்க வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
l 22 வயதில் ஓய்வு பெற்றவர், பயிற்சியாளராக இருந்து பல தடகள வீராங்கனைகளுக்கு பயிற்சி அளித்தார். தான் பயின்ற பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றினார். தன் பெயரில் அறக்கட்டளை தொடங்கி, குழந்தைகள் மேம்பாட்டுக்கு உதவிகளை வழங்கினார்.
l கறுப்பின மக்களுக்கான சிவில் உரிமைகள், மகளிர் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தார். ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். இவரைப் பற்றி பல புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன.
l கருப்பு முத்து (Black pearl) என்று அழைக்கப்பட்டவரும் மகளிர் தடகள போட்டிகளில் இன்றளவும் முன்னுதாரணமாக பேசப்படுபவருமான வில்மா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 54 வயதில் (1994) மறைந்தார்.