Published : 01 Jun 2015 10:31 AM
Last Updated : 01 Jun 2015 10:31 AM

மர்லின் மன்றோ 10

ஹாலிவுட் உலகின் முடிசூடா ராணியாகத் திகழ்ந்த மர்லின் மன்றோ (Marilyn Monroe) பிறந்த தினம் இன்று (ஜூன் 1). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் (1926) பிறந்தவர். இயற்பெயர், நார்மா ஜெனி மார்டென்சன். சிறு வயதிலேயே அம்மா மனச் சிதைவுக்கு உள்ளாகி காப்பகத்தில் சேர்க் கப்பட்டதால், இளமை பருவத்தில் வறுமையில் வாடினார் மர்லின்.

l ஆதரவற்றோர் இல்லத் திலும், பிறகு குழந்தை இல்லாத பல தம்பதியரிடமும் வளர்ந்தார். 16 வயதில் செய்துகொண்ட திருமணமும் இவருக்கு நல்ல வாழ்க்கையைத் தரவில்லை. 1944-ல் டேவிட் கொனோவர் என்ற புகைப்படக் கலைஞர் யாங்க் என்ற பத்திரிகைக்காக இவரை புகைப்படம் எடுத்தார். கவர்ந்திழுக்கும் இவரது அழகை முதன்முதலாக வெளி உலகுக்கு கொண்டுவந்தது அவர்தான்.

l விளம்பரங்களில் நடிக்கத் தொடங்கியவர், வெற்றிகரமான மாடலாக திகழ்ந்தார். திரைப்படத்தில் நடிக்கும் ஆசை பிறந்தது. தொடர்ந்து முயற்சி செய்தார். 1946-ல் தனது பெயரை மர்லின் மன்றோ என்று மாற்றிக்கொண்டார். 1947-ல் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

l ஆரம்பத்தில் சிறு வேடங்களிலேயே தோன்றினார். 1950-ல் வெளிவந்த ‘தி அஸ்பால்ட் ஜங்கிள், ‘ஆல் அபவுட் ஈவ்’ படங்கள் இவருக்குப் புகழைத் தேடித் தந்தன. ‘டு நாட் பாதர் டு நாக்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். பணம், புகழ், செல்வாக்கு குவிந்தது.

l நகைச்சுவைக் கதாபாத்திரங்களிலும் இவரது திறமை அபாரமாக வெளிப்பட்டது. அதன் பிறகு ஏராளமான படங்களில் நடித்தார். இவரது நடை, உடையழகு மிகவும் பிரபலம். தங்க நிற முடி, புன்னகை பூத்த முகம், தங்கச் சிலை போன்ற உடல் என்று பலராலும் வர்ணிக்கப்பட்டார்.

l அபரிமிதமான அழகும் பார்த்தவுடன் மயக்கும் தோற்றமும் கொண்டிருந்தார். இவரது ஒரு புகைப்படம் ஒன்றே முக்கால் கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.

l காற்றில் தனது ஆடை பறக்காமல் இவர் பிடித்துக்கொள்ளும் காட்சி பிரபலமானது. அது 1955-ல் வெளியான ‘தி செவன் இயர் இட்ச்’ என்ற படத்தில் வருவதாகும். அதுபோன்ற உலோகச் சிலையை 26 அடி உயரம், 15 டன் எடையில் செவார்ட் ஜான்சன் என்ற சிற்பி வடித்தார். அது, மர்லின் பிறந்த ஊர் அருகே வைக்கப்பட்டுள்ளது.

l பல்லாண்டு காலம் புகழுடன் வாழ்ந்தவர்களுக்கு கிடைக்கும் பெயரையும் புகழையும் மிகவும் குறுகிய கால வாழ்விலேயே இவர் அடைந்தார். கோல்டன் குளோப் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வென்றுள்ளார்.

l ஒரு நடிகையாக மட்டுமின்றி, பாடகி, இயக்குநர் என்று பன்முகத் திறன் பெற்றிருந்தார்.

l உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்த இவர் 36 வயதில் (1962) திடீரென்று தற்கொலை செய்துகொண்டு ரசிகர்களை அதிர்ச்சியில் உறையவைத்தார். மறைந்து 50 ஆண்டுகள் ஆன பிறகும் அவரது புகழ் இன்னும் மங்கவில்லை. அமெரிக்க - ஐரோப்பிய சினிமாவின் அமரநட்சத்திரம் என்று இன்றளவும் புகழப்படுகிறார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x