Last Updated : 24 Jun, 2015 06:42 PM

 

Published : 24 Jun 2015 06:42 PM
Last Updated : 24 Jun 2015 06:42 PM

மான்டேஜ் மனசு 4 - பிரேம அத்தியாயங்கள் ஓய்வதில்லை!

அகிலன் செல்போனில் அழைத்தான்.

ஹலோ என்றதும், ஒரு குட் நியூஸ் என்று குழந்தைக்கே உரிய குதூகலத்தோடு சொன்னான்.

''எதிர்பார்த்த மாதிரி வேலை கிடைச்சிடுச்சா அகிலா?''

''இல்லை அண்ணாத்த. வீட்ல ஓகே சொல்லிட்டாங்க. எனக்கும், திவ்யாவுக்கும் ஒரு வருஷத்துல கல்யாணம்.''

''சூப்பர் டா. அஞ்சு வருஷம் போராடி ஜெயிச்சுட்டே.''

''திவ்யா ஹேப்பி அண்ணாத்த. 'சீக்கிரம் வேலை தேடு. ஆறு மாசத்துல நிச்சயதார்த்தம் பண்ணிக்கலாம்'னு சொல்றா. ரெண்டு மூணு இடத்துல வேலைக்கு சொல்லியிருக்கேன். எப்படியும் இந்த மாசமே சேர்ந்திடுவேன்.''

''சந்தோஷமா இருக்குடா. ட்ரீட் கிடையாதா?''

''ஊருக்கு வாங்க. பார்த்துக்கலாம்'' என்று போனை கட் செய்தான். அவன் முகம் முழுக்க புன்னகை பரவியிருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.

*

'பிரேமம்' மலையாள சினிமா பார்த்துவிட்டு அறைக்கு வந்து மான்டேஜ் மனசை அலைபாய விட்டபோது, சட்டென நினைவுக்கு வந்த அகிலன் உடனான சமீபத்திய செல்போன் உரையாடல் அனுபவம்தான் இந்த அத்தியாயத்தின் ஆரம்பப் பகுதி.

'பிரேமம்' படம் பார்த்துக்கொண்டிருந்தபோதே எனக்கு அகிலன் முகம் தான் மனதுக்குள் வந்துபோனது. அகிலன் கதைதான் 'பிரேமம்' என்றில்லை. ஆனால், கிட்டத்தட்ட அதுதான்.

'ஆட்டோகிராப்' மாதிரி தமிழ் சினிமா பாணியில் உருவான மலையாள சினிமா 'பிரேமம்.'

அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் நிவின் பௌலி, அனுபமா பரமேஷ்வரன், சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடித்துள்ளனர்.

பிளஸ் 2 படிக்கும் மேரிக்காக வயது வித்தியாசமே இல்லாமல் நிறைய பேர் வரிசை கட்டி நின்று காத்திருகிறார்கள். அலுவா நதிக்காரை மேரியால் அழகாகிறது. சைக்கிள், பைக் என்று எல்லா விதத்திலும் ஒரு கூட்டமே மேரியை விரட்டுகிறது.

நிவின் பௌலி மலையாளத்தில் தப்பு தப்பாய் ஒரு காதல் கடிதம் எழுதி மேரிக்கு கொடுக்க நினைக்கிறார். மேரியின் அப்பாவுக்கு பயந்தே மற்ற ஆண்கள் சிதறி ஓடுகிறார்கள்.

ஒரு கட்டத்தில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, காதலைச் சொல்லப் போகும் நிவின் பௌலியிடம் தன் காதலனை அறிமுகப்படுத்துகிறார் மேரி.

அழுகை, சோகத்துடன் அந்த காதல் தோல்வியைக் கடக்கிறார் நிவின் பௌலி.

கல்லூரி இறுதியாண்டு படிக்கும்போது நிவின் பௌலி ஜூனியர்களை ரேகிங் செய்கிறார். அப்படி ஒரு பெண்ணை மடக்கி. என்ன கோர்ஸ் என்று கேட்க, ''நான் மலர். கெஸ்ட் லெக்சரர்'' என்கிறார்.

''பிரின்சிபாலிடம் போட்டுக் கொடுக்காதீங்க'' என்கிறார் நிவின்.

கிளாஸ் எடுக்கும் மலரை சைட் அடிக்கிறார். மலருக்கும் நிவின் பௌலியைப் பிடித்துப் போகிறது.

மல்லிகைப்பூ வாங்கித் தரச் சொல்கிறார் மலர். நிவின் வாங்கித்தரும் மல்லிகையுடன் கோயிலுக்கு செல்கிறாள். நிவின் அண்ட் கோவுக்கு டான்ஸ் சொல்லித் தருகிறார். கல்ச்சுரலில் நிவின் டீம் அசத்தி அப்ளாஸ் வாங்குகிறார்கள்.

எதிர்பாராதவிதமாக, மலருக்கு விபத்து நிகழ்கிறது. நடந்த எல்லாவற்றையும் மலர் மறந்துவிடுகிறார். மலருக்கும், அவரது கஸினுக்கும் கல்யாணம் நடக்கிறது.

மலரை மறக்க முடியாமல் நிவின் பௌலி தவிக்கிறார். அதற்குப் பிறகு காஃபி அண்ட் கேக் கஃபே முதலாளியாகிறார் நிவின் பௌலி. பிறந்த நாள் கேக் வாங்க வருகிறார் ஒரு பெண்.

இரண்டாவது சந்திப்பில் ''என்னை அடையாளம் தெரிகிறதா'' என்கிறார். ''இல்லை'' என்கிறார் நிவின் பௌலி.

''நான் செலின்'' என்றதும் சின்ன சங்கடத்துடன் சிரிக்கிறார் நிவின் பௌலி. மேரியின் தங்கையாக சிறுமியாக இருந்தவர் கல்லூரி படித்து முடித்து 22 வயது பெண்ணாக வளர்ந்து நிற்கிறார்.

அடுத்த சந்திப்பில், ''கல்யாணம் செய்துகொள்ளலாமா? ''என்று நிவின் கேட்கிறார்.

''எனக்கு இந்த வாரம் நிச்சயதார்த்தம்'' என்கிறார் செலின்.

கோபத்தில் அந்த இடத்தை விட்டு போகிறார் நிவின்.

அந்த நிச்சயதார்த்தம் நின்றுபோகிறது. நிவின் பௌலிக்கும், செலினுக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு மலர் வருகிறார். பழைய நினைவுகள் அவருக்கு திரும்ப வந்துவிடுகின்றன. ஆனால், அதை நிவினுக்கு தெரியப்படுத்தவில்லை.

கலங்கிய கண்களுடன் மலரை எதிர்கொள்கிறார் நிவின். நிவின் - செலின் திருமணம் இனிதே நடக்கிறது.

மலையாள சினிமாவில் மிகப்பெரிய ஹிட் சினிமா 'பிரேமம்'. வசூல் ரீதியில் சக்கை போடு போடுகிறது. மலையாளத்திலும் பெரிய பட்ஜெட் படங்கள் வரும் என்ற நம்பிக்கையை 'பிரேமம்' விதைத்திருக்கிறது.

மலையாள அழகுடன் கூடிய இயற்கை, இசை, காட்சிகள், காதல் தருணங்கள் , கதாபாத்திர வடிவமைப்புகள் இனிமையான அனுபவத்தைத் தருகின்றன.

கன்னத்தில் பருக்களுடன் மலர் டீச்சராக வரும் சாய் பல்லவியும், தேன்கூட்டு முடி மேரியாக வரும் அனுபமா பரமேஷ்வரியும் மனதில் நிறைகிறார்கள். நிவின் பௌலியின் ரியாக்‌ஷன்களுக்கு அப்ளாஸ் அள்ளுகிறது.

*

அகிலனின் மூன்று அத்தியாயங்களை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும்.

பள்ளிப் பருவம் முடியும் தருவாயில் ஹேமாவை காதலித்தான். அகிலன் வீட்டு வழியாகதான் ஹேமா டியூஷன் செல்வாள். அந்த வயதில் எதையும் பேசவோ, சொல்லவோ தோணவில்லை இருவருக்கும். ஆனால், ஹேமாவையே அவன் சுற்றிச் சுற்றி வந்தான்.

இந்தி டியூஷன் செல்லும் ஹேமாவுக்கு பின்னாலேயே அகிலன் செல்வான். டியூஷன் முடிந்து வீட்டுக்கு வரும்போதும் அதே போல பின்தொடர்வான். ஒருவரை ஒருவர் பார்ப்பார்கள். சிரித்துக்கொள்வார்கள். அவ்வளவுதான்.

அந்த வயதில் அகிலன் காதலிக்கிறான் என்றதும், நண்பர்கள் அகிலனை கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். ஹேமாவைப் பார்த்ததும் அகிலன் பெயர் சொல்லி கலாய்க்க ஆரம்பித்தார்கள்.

ஒரு நாள் ஹேமா தன் தங்கையோடு பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்தாள். அகிலன் நண்பர்களோடு தெருமுனையில் பேசிக்கொண்டிருந்தான்.

ஹேமா உடன் வருவது யார்? என்று அகிலனைக் கேட்டு நண்பர்கள் நச்சரித்தனர்.

''அவ தங்கச்சி டா'' என்றான் அப்பாவியாய்.

''மச்சினிச்சின்னு சொல்லு'' என்றதும் ஆமாம் என்று தலையாட்டினான்.

உடனே, மச்சினிச்சி வர்ற நேரம் மண்மணக்குது பாடலைப் பாடி கலாய்க்க, ஹேமா செருப்பைக் காட்டுவிட்டு கோபத்துடன் சென்றுவிட்டாள்.

மறுநாள் அகிலன் அதேபோல செருப்பைக் காட்ட, ஹேமா அழுதாள். அதோடு அந்தக் காதலுக்கு மூடு விழா நடந்துவிட்டது. அதற்காக அகிலன் ரொம்பவே வருத்தப்பட்டிருக்கிறான்.

*

மூன்று வருடங்கள் கழித்து அகிலனுக்கு அடுத்த காதல் முளைத்தது.

அவன் அப்பாவின் வழி உறவில் ஒரு பெண்மணி வீட்டுக்கு வந்திருந்தார். அகிலன் அம்மா ''இவன் தான் என் பையன்'' என்று அறிமுகப்படுத்தினாள்.

பார்வையால் அங்குலம் அங்குலமாய் அளவெடுத்த அந்த பெண்மணி சில நிமிடங்களில், ''என்ன மருமகனே'' என்று அழைத்ததும் அகிலனுக்கு இருப்புகொள்ளவில்லை. அதிர்ச்சியோடும் ஆச்சர்யத்தோடும் தயங்கியபடியே ''சொல்லுங்க அத்தை'' என்றான்.

''என்ன படிக்கிற?''

''காலேஜ் ஃபர்ஸ்ட் இயர்.''

''என் பொண்ணு கீதா உன்னை மாதிரியே கலையா இருப்பா. புத்திசாலி'' என்று கீதா புராணம் பாடிக்கொண்டிருந்தார்.

அத்தை எதற்கு தேவையில்லாமல் கீதா பற்றியே பேசிக்கொண்டிருக்கிறாள் என்று அகிலனுக்குப் புரிந்துவிட்டது. அப்போ மருமகன் ஆகிட்டமாதிரிதான் என்று நினைத்துக்கொண்டான்.

அடுத்த மாசம் சேகர் வீட்டு கிரஹப்பிரவேசம். நாங்க குடும்பத்தோட வர்றோம். நீங்களும் மருமகனோட வந்திடுங்க என்று அகிலனின் அப்பாவிடம் சொல்லிவிட்டு போனார்.

மருமகன் என்று அழைத்தது, மகள் பற்றி ஹிஸ்டரி வரலாறு சொன்னது, அடுத்த மாசம் சந்திக்கலாம் என்று சொன்னது எல்லாம் அகிலனை ஏதோ செய்தது.

கீதா எப்படி இருப்பாள்? என்று கற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டான்.

அந்த கிரஹப்பிரவேச நாளுக்காக அகிலன் காத்துக்கொண்டிருந்தான். அந்த நாளும் வந்தது. ஆர்வக்கோளாறில் விடியற்காலை மூணு மணிக்கே சைக்கிளில் கிளம்பி சேகர் மாமா வீட்டுக்கு புறப்பட்டான்.

சேகர் மாமா வீட்டைச் சார்ந்தவர்கள் விளக்கு எடுத்து கோயிலுக்கு வந்துகொண்டிருந்தனர்.

கூட்டமாய் இருக்கும் பெண்களில் யார் அந்த கீதா என்று அகிலனின் பார்வையில் துழாவினான். விடியற்காலை நான்கு மணி இருட்டிலும், சின்னதாய் தெற்றுப்பல் தெரிய, பட்டுப்பாவாடை சட்டையில் ஜொலித்த அந்தப் பெண் தான் கீதா என்பதை தெரிந்துகொண்டதும், வீட்டுக்கு வந்துவிட்டான்.

மாப்பிள்ளை கணக்காய் டிரஸ் செய்துகொண்டு பெற்றோருடன் சேகர் மாமா வீட்டுக்குச் சென்றான். சாப்பிட்ட பிறகு, மாடியில் உட்கார்ந்துகொண்டு கீதாவையே கவனித்துக்கொண்டிருந்தான்.

வீட்டுக்குள் நுழைந்த கீதா சட்டென்று மாடிக்கு வந்தாள். அதை அகிலன் எதிர்பார்க்கவேயில்லை.

''எப்படி இருக்கீங்க அத்தான்'' என்றாள் கீதா.

அகிலனுக்கு சந்தோஷத்தில் தூக்கிவாரிப்போட்டது. நம்மை விட வேகமா இருக்காளே என்று நினைத்தவனாய் பேச ஆரம்பித்தான்.

''என்னை எப்படி தெரியும்?''

''அம்மா சொன்னாங்க. உங்களைப் பார்க்கணும்னுதான் இங்கே வந்தேன். உங்களை அத்தான்னு கூப்பிடவா? மாமான்னு கூப்பிடவா?''

''நீ எப்படி கூப்பிட்டாலும் பிடிக்கும்''

போன் நம்பர் பரிமாற்றம் நிகழ்ந்தது.

திருவள்ளூரில் இருக்கும் அகிலன் திருவாரூரில் இருக்கும் கீதாவுக்காக உருக ஆரம்பித்தான்.

கீதா பின்னர் சேகர் மாமா வீட்டுக்கு வந்தாள். அகிலனை தினம் தினம் பார்க்கலாம் என்பதற்காகவே இரண்டு மாதங்கள் அங்கேயே தங்கி கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்க ஆரம்பித்தாள்.

ஒரு நாள் அகிலன் தன் வீட்டுக்கு கீதாவை அழைத்துச் சென்றான். வீட்டைச் சுற்றிப் பார்த்த கீதா, உடனே போகலாம். போகலாம். வேலை இருக்கு என்று அவசரப்படுத்தினான்.

அந்த வீடு, வசதி பார்த்ததும் கீதாவின் முகம் சுருங்கிப்போனது.

கீதாவின் மனநிலையை அகிலன் அறியாதவன் அல்ல.

''என்னாச்சு கீதா''

''உங்களுக்கும் எனக்கும் செட்டாகாது''

''ஏன்?''

''ஸ்டேட்டஸ். பணம்.''

''அதான் முக்கியமா? நான் சம்பாதிக்கமாட்டானா?''

கீதா அமைதியாக இருந்தாள்.

''என்னைப் பிடிச்சிருக்கா இல்லையா?''

''விருப்பம் இருக்கு. ஆனா, என்னால முழுசா சம்மதம் சொல்ல முடியலை.''

''இவ்ளோ நாள் பழகினதுக்கு என்ன அர்த்தம்?''

''பிடிச்சிருக்கு. அது வயசுக்கோளாறு. அதை வெச்சுகிட்டு மட்டும் வாழ முடியாது.''

''கடைசியா என்ன சொல்ற?''

''நமக்கு செட்டாகாது. ஒத்துப்போகாததை ஏன் தொடரணும்?''

அத்தோடு அகிலன் - கீதா காதல் முடிவுக்கு வந்தது.

*

மூன்று வருடங்கள் கழித்து திவ்யாவை சந்தித்தான் அகிலன்.

அகிலனும், திவ்யாவும் காதலிக்க ஆரம்பித்து ஐந்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. இந்தக் காதல் தான் இப்போது கல்யாணத்தில் முடியப்போகிறது. சொல்லவரும் செய்தி இதுவல்ல.

கீதா இப்போது டாக்டர். அவள் தங்கை சௌந்தர்யா ஃபேஸ்புக்கில் அகிலனுக்கு ஃப்ரெண்ட் ரெக்வஸ்ட் கொடுத்திருந்தாள்.

அக்செப்ட் செய்த உடனே ''ஹலோ அத்தான்'' என்று பேச ஆரம்பித்தாள்.

அக்காவுக்கு கல்யாணம். அடுத்து எனக்குதான். நீங்க என்ன பண்றீங்க? என்று சாட் செய்கிறாள்.

பதில் ஏதும் சொல்லாமல், இந்த விளையாட்டை ரசித்தபடியே திவ்யாவிடம் நடந்தை சொல்லி மகிழ்கிறான் அகிலன்.

சௌந்தர்யா என்ன ஆகப் போகிறாள்? அகிலன் என்ன செய்யப் போகிறான்?

பொறுத்திருந்து பார்க்கலாம்.

'பிரேமம்' நிவின், அகிலன் அனுபவங்களைக் கடந்த, அல்லது அந்த அனுபவங்களை நட்பு - உறவுகள் மூலம் உணர்ந்த உங்களைப் போல நானும் வெயிட்டிங்.

மான்டேஜ் மனசு இன்னும் சுழலும்...

க.நாகப்பன் - தொடர்புக்கு nagappan.k@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x