

"இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், உற்சாகத்தையும், நம்பிக்கையையும், நல்ல மனமாற்றத்தையும் உணர்ந்தீர்களானால், அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசு!"
கணேசனின் வலைதளத்துக்குள் நுழைந்தவுடன் கண்ணில் படுகிற வாக்கியம் இது. கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்து, அங்கேயே வசித்தாலும், இவரின் பூர்வீகம் கர்நாடக மாநிலத்தில் உள்ள அத்தூர் என்னும் கிராமம். கோவையில் தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்க்கும் இவர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தொடர்ந்து எழுதிவருகிறார்.
ஒரு விஷயத்தை அறிவுப்பூர்வமாக அணுகுபவர்கள் பலர்; உணர்வுப்பூர்வமாக அணுகுபவர்களும் உண்டு. இரு கோணங்களிலும் அதன் சிக்கல்களை அவிழ்ப்பவர்கள் சிலரே. அதில் முக்கியமானவர் கணேசன்.
பல்வேறு பத்திரிகைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ள கணேசன், நிலாச்சாரல் இணைய சஞ்சிகையில் நீ நான் தாமிரபரணி, மனிதரில் எத்தனை நிறங்கள்!, அமானுஷ்யன் ஆகிய மூன்று நாவல்களை எழுதி இருக்கிறார்.
ஆன்மிகம் குறித்த தேடல்களை, தனக்கே உரித்தான நடையில் புரியவைக்க முயற்சிக்கும் இவர் பிரசாதம், தோல்வி என்பது இடைவேளை, பிரமிடுகள்- தேசத்தில் ஞானத்தேடல், ஆழ் மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்து படிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி?, அறிவார்ந்த ஆன்மிகம்!, அமானுஷ்யன் மற்றும் இங்கே நிம்மதி ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
தன்னம்பிக்கை குறித்த இவரின் கட்டுரைகள், எந்தப் பல்கலைக்கழகத்தாலும், சொல்லித்தர முடியாத பாடங்கள். வாழ்ந்து மட்டுமே படிக்க முடிகிற வாழ்க்கைப் பாடங்களை தனது பார்வையில் விளக்கியிருக்கிறார்.
கர்நாடக சங்கீதத்தால், எல்லோரையும் கட்டிப்போட்டு சங்கீத உலகின் மும்மூர்த்திகளாய் விளங்கிய சியாமா சாஸ்திரி, தியாகராஜர் மற்றும் முத்துசாமி திட்சீதர் ஆகியோரின் இசை மற்றும் வாழ்க்கைப் பயணங்களை அழகுறத் தொகுத்திருக்கிறார்.
வழக்கொழிந்து போய்க் கொண்டிருக்கும் செறிவான கருத்துகளை உள்ளடக்கிய தமிழ்ப் பழமொழிகள் பலவற்றைத் தொகுத்து அதைத் தன் வலைப்பூவில் பகிர்ந்திருக்கிறார். | வாசிக்க - >அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள் |
''உண்மையில் போரடிப்பதற்கு முக்கியக் காரணம் மனிதனின் அகத்தில்தான் இருக்கிறதே ஒழிய புறத்தில் இல்லை; புரிதல், கவனம், சுவாரசியம், பங்கு பெறுதல் ஆகியவை இல்லாத போது ஒருவனுக்கு போரடிக்கிறது!'' என்று சொல்கிற கணேசனின் கட்டுரை போரடிக்கிறதா என்று பாருங்களேன். | வாசிக்க - '>போரடிக்காமல் இருக்க வழிகள் |
சைவர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகளில் ஒன்றாகச் சொல்லப்படுகிற ருத்திராட்சம் அணிவதன் பலன்களை மருத்துவ மற்றும் உளவியல் ரீதியாக ஆராய்ந்து ருத்திராட்சத்தின் இயற்பியல் பண்புகள் இவரின் கீழ்க்கண்ட இணைப்பில் விளக்கப்பட்டிருக்கிறது. | வாசிக்க ->ருத்ராட்சம் அணிவதன் பலன்கள் |
அமானுஷ்யம், ஆன்மீகம் போன்றவற்றைத் தன் விறுவிறுப்பான நடையில் கலந்து தன் வாசகர்களை இன்னொரு உலகத்துக்குள் இழுத்துச் செல்பவை கணேசனின் எழுத்துகள். வலைதளத்தில் தொடராக எழுதி இணைய வாசகர்களிடையே வரவேற்பைப் பெற்று நூலானது இவரின் 'பரம(ன்) இரகசியம்' நூல். இப்போது 'புத்தம் சரணம் கச்சாமி' என்ற பெயரில் இணையத் தொடர் ஒன்றை எழுதிவருகிறார்.
கீதை காட்டிய நல்வழிகளை, அருளிய உபதேசங்களை எல்லாம் 'கீதை காட்டும் பாதை' என்னும் தொடராக எழுதுகிறார்.
நம் பெரும்பாலானோரின் நேரத்தை விழுங்கும் செல்பேசி மற்றும் இணையத்தின், உளவியல் ரீதியான விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரை 'சாபமாகும் வரங்கள்' இவரின் தனி மனித அக்கறையைக் காட்டுகிறது.
நாவல்கள் மட்டுமல்லாது, சிறுகதை எழுதுவதிலும் வல்லவர். உண்மை கசப்பாய் இருந்தாலும், அன்புக்கு முன்னால் எதுவுமே இல்லை என்பதை இவரின் சிறுகதை பறைசாற்றுகிறது. | வாசிக்க - >சுடும் உண்மை; சுடாத அன்பு! |
கணேசனின் வலைதள முகவரி: >http://enganeshan.blogspot.in/
முந்தைய அத்தியாயம்:>நெட்டெழுத்து: இணையத்தில் வழிகாட்டும் தமிழக ஆசிரியர்!
| நீங்கள் வாசித்து வரும் நல்லவலைப்பதிவு, ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பரிந்துரைக்க ramaniprabhadevi.s@thehindutamil.co.in என்ற மின்னஞ்சலில் இணைப்புகளை அனுப்பலாமே! |