Last Updated : 18 May, 2015 07:10 PM

 

Published : 18 May 2015 07:10 PM
Last Updated : 18 May 2015 07:10 PM

ஆவலை வீசுவோம் 4- கூகுளாண்டவரும் 3 சிறு தெய்வங்களும்

தேடியந்திரம் என்று சொன்னவுடன் பெரும்பாலானோருக்கு கூகுள்தான் நினைவுக்கு வரும். கூகுளின் செல்வாக்கும், வீச்சும், தாக்கமும் அப்படி!

கூகுள் வெறும் முன்னணி தேடியந்திரம் மட்டும் அல்ல; அது மாபெரும் இணைய சாம்ராஜ்ஜியம்.

தூய தேடியந்திரமாக அறிமுகமாகி அதன் காரணமாகவே ஜெயித்த கூகுள், தேடியந்திரம் சார்ந்த மாபெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியமாக பல துறைகளில் கிளை பரப்பியிருக்கிறது.

தேடியந்திர உலகில் கூகுளின் வளர்ச்சியும் எழுச்சியும் தனிக்கதை. அது பல அத்தியாயயங்களை கொண்டது. கூகுள் தேடல் சேவைக்குள் மறைந்திருக்கும் தேடல் வசதிகள் போலவே கூகுள் எந்த எந்தத் துறைகளில் எல்லாம் ஈடுபட்டிருக்கிறது என்பது பற்றியே கூட தனியாக விரிவாக எழுதலாம்.

ஆனால், தேடியந்திர உலகில் கூகுளின் இடத்தை புரிந்துகொள்ள, அது முன்னணி தேடியந்திரமாக உருவானதற்கான முக்கிய அம்சங்களை மட்டும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

கூகுள் தன் வருகைக்கு முன் தோன்றிய தேடியந்திரங்களை எல்லாம் பின்னுக்குத்தள்ளியதுடன், அவற்றில் பலவற்றை மறக்கவும் செய்தது. கூகுளுடன் போட்டியிட்டு உருவான எண்ணற்ற தேடியந்திரங்கள் இணையவாசிகளை தங்கள் பக்கம் ஈர்க்க முடியாமல் காணாமல் போயிருக்கின்றன. இவற்றில் சில இன்னும் தாக்குப் பிடித்து தங்களுக்கான இடத்தை தேடிக்கொண்டிருக்கின்றன. பல தேடியந்திரங்கள் என் வழி தனி வழி என்று தனி தேடல் கோட்பாட்டுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேடியந்திரங்கள் இருக்கும் போது, தேடல் என்று சொன்னால் கூகுள் என்னும் நிலை எப்படி வந்தது? இந்த கேள்விக்கு பதில் தீவிர ஆய்வு மற்றும் அலசலுக்கு உரியது என்றாலும், எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால், கூகுள் சரியான நேரத்தில் சரியான சேவையாக அறிமுகமானது என்று சொல்ல வேண்டும்.

1998-ல் கூகுள் அறிமுகமானதுபோது தேடியந்திர அலை அடித்து ஓய்ந்திருந்தது. வலை வழிகாட்டியாக அறிமுகமான யாஹூ வலைவாசலாக விரிவடைந்து இணையத்தின் நுழைவு வாயிலாக உருவாகி இருந்தது. அப்போது இருந்த எல்லா தேடியந்திரங்களும் வலைவாசலாக முயன்று கொண்டிருந்தன. அதாவது இணையத்தில் எல்லோருக்கும் எல்லாவற்றையும் அளிக்க முயற்சி செய்தன.

அவற்றில் தேடல் என்பது ஒரு உப சேவை மட்டுமே! அது மட்டும் அல்ல பல வலைவாசல்கள் பிற தேடிய்ந்திர சேவைகளை தேடலுக்காக பயன்படுத்திக்கொள்ளவும் செய்தன.

தனித்தேடியந்திரம் என்பது லாபகரமானது அல்ல எனும் கருத்தும் பரவலாக இருந்த காலகட்டத்தில் தான் கூகுள் தூய தேடல் சேவையாக அறிமுகமானது. அது தேடலில் மட்டுமே கவனம் செலுத்தியது. இணையத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கும் சரி, புதிதாக இணையத்தின் பக்கம் வந்து தகவல்களை தேட முற்பட்டவர்களூக்கும் சரி, அறிமுகமான காலத்தில் கூகுள் கொடுத்த அனுபவம் அவர்களை சிலிர்க்கை வைத்தது.

கூகுளின் துணிச்சல்

கூகுளில் செய்திகள் கிடையாது. புகைப்படங்கள் கிடையாது. விளையாட்டு, ஜோதிடம் என எந்த பகுதியும் இல்லை. விளம்பரங்களும் கிடையாது. தேடல் கட்டத்துடன் அது வரவேற்றது. தேவையான குறிச்சொல்லை அடித்து தேடினால் உடனே முடிவுகளை பட்டியலிட்டு கொடுத்தது.

இதுவே இனிமையான அனுபவமாக இருந்தது என்றால், கூகுள் முன்வைத்த முடிவுகளும் அநேகமாக தேடப்படும் குறிச்சொல்லுக்கு பொருத்தமானதாக இருந்தது. கும்பிட போன தெய்வத்தை கும்பிட போன இடத்திலேயே பார்க்க முடிந்த உணர்வு.

அதுவரையான தேடியந்திரங்கள் முடிவுகளை பட்டியலிட பின்பற்றிய உத்திகளைவிட கூகுள் கடைப்பிடித்த இணைப்புகளின் தரத்தின் அடிப்படையில் இணையதளங்களை பட்டியலிட்ட விதம் இணையவாசிகளை தேடலில் ஈடுபட்ட ஒவ்வொரு முறையும் திருப்தியில் ஆழ்த்தியது.

ஆனால், கூகுள் தனது சேவையில் திருப்தி கொள்ளாமல் அதனை மேலும் மேம்படுத்த முயன்று கொண்டே இருந்தது. சின்ன சின்ன நுட்பங்களை தேடலில் புகுத்துவது, தேடலுக்கான நேரத்தை மேலும் ஒரு கண்ணிமைக்கும் நேரம் துரிதமாக்குவது என தன்னை இன்னும் பட்டை தீட்டிக்கொண்டே இருந்தது. இவற்றுக்கு மத்தியில் நேர்த்திக்கடன் போலவே தனது முகப்பு பக்கத்தை மிக மிக எளிமையாகவே வைத்திருந்தது.

வலைவாசல்கள் இணையவாசிகளை தங்களிடமே தங்கியிருக்க வேண்டும் என எதிர்பார்த்தன. கூகுள் சந்தோஷமாக அவர்கள் கேட்டதை காட்டி இணைப்புகள் வழியே அனுப்பி வைத்தது. மீண்டும் தேடலுக்கு வந்தால் போதும் என நினைத்தது. இணையவாசிகள் அப்படித்தான் தேடி வந்தனர்.

இதனிடையே புத்தாயிரமாண்டில் இணைய உலகில் டாட்.காம் குமிழ் வெடித்துச் சிதறியது. இந்தப் புயலில் வலைவாசல்களும் கணிசமாகவே பாதிக்கப்பட்டன.

யாஹூவும் எம்.எஸ்.என்.-னும்

ஆக, இனி தேடியந்திரங்களில் வெற்றி சாத்தியமில்லை என கருதப்பட்ட காலத்தில் அறிமுகமாகி சிறந்த தேடல் அனுபவத்தை அளித்து கூகுள் தன்னை நிலைநிறுத்திக்கொண்டது. போட்டிக்கு புதிய தேடியந்திரங்கள் வந்தாலும் தேடல் என்றால் நினைவுக்கு வரும் வகையில் தனது பெயரை பதிய வைத்துவிட்டது.

இந்த அடித்தளத்தின் மீது வெற்றிக்கோட்டை கட்டுவது எளிதானது. டாட்காம் புயலில் யாஹூ தாக்குப்பிடித்து நின்றாலும் கூகுளின் அசுர வளர்ச்சி அதன் செல்வாக்கை பாதிக்கவே செய்தது. இணையத்தில் எது தேவை என்றாலும் யாஹூவுக்குள் முதலில் எட்டிப்பார்க்கும் பழக்கம் குறைந்தது விட்டது.

இத்தனைக்கும் ஆரம்பத்தில் யாஹூ தேடல் வசதிக்காக கூகுள் தேடலை பயன்படுத்திக்கொண்டது. பின்னர் கூகுளுடனான ஒப்பந்த்தை ரத்து செய்தது. அல்டாவிஸ்டா உள்ளிட்ட பல தேடியந்திரங்களை வாங்கிப்போட்டது. இருந்தும் தேடியந்திர பரப்பில் கூகுளின் இடத்தை அதனால் பிடிக்கவே முடியவில்லை.

தேடியந்திர பரப்பை கோட்டைவிட்ட மைக்ரோசாப்டும் தாமதமாகவே விழித்துக்கொண்டது. அதன் வலைவாசல் சேவையான எம்.எஸ்.என் பிற தேடியந்திரங்களை பயன்படுத்திய நிலையில் எம்.எஸ்.என் லைவ் சேவையை அறிமுகம் செய்தது. ஆனால் பல ஆண்டுகள் கழித்து 2009-ல் மைக்ரோசாப்ட் தனது தேடல் வசதியை சீரமைத்து பிங் தேடியந்திரத்தை அறிமுகம் செய்த போது தான் பொருட்படுத்தக்கூடிய தேடல் சேவை அதனிடம் இருந்தது. இதற்குள் இணைய உலகம் கூகுளுக்கு பழகிவிட்டது.

இன்று தேடியந்திரம் என்றால் கூகுள். தேடியந்திரங்கள் என்று சொல்லும் போது கூகுளுடன் போட்டித் தேடியந்திரங்களாக யாஹூ மற்றும் பிங் ஆகியவையும் சேர்த்துக்கொள்ள்ளப்படும் வழக்கம் இருக்கிறது.

இவை மூன்றுமே பொது தேடல் வகையின் கீழ் வரும் தேடியந்திரங்கள். தேடியந்திரங்களுக்கான இலக்கணமாக சொல்லப்படும் இணையத்தில் உலாவி இணையதளங்களை அட்டவையிட்டு, குறிச்சொல்லுக்கு ஏற்ப தேடித்தருவது, அதற்கென தனி வழிமுறையை (அல்கோரிதம்) கொண்டிருப்பது ஆகிய மூன்று முக்கிய அம்சங்களையும் கொண்டிருக்கின்றன.

ஆச்சரியம் அளிக்கும் ஆஸ்க் டாட் காம்

இவற்றோடு ஆஸ்க்.காம் தேடியந்திரத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். கேள்வி பதில் தேடியந்திரமாக அறிமுகமான இது முழு தேடியந்திர பரப்பில் இருந்து விலகி விட்டது. இப்போது அது தனி தேடல் வசதியை அளிப்பதில்லை. ஆனாலும் தேடியந்திர வரலாற்றில் அதற்கு தனி இடம் உண்டு.

ஆஸ்க்ஜீவ்ஸ் என்ற பெயரில் 1997-ல் அறிமுகமான இந்த தேடியந்திரம் குறிச்சொல் அடிப்படையில் தேடாமல், மனதில் உள்ள கேள்விகளுக்கு ஏற்ப பதிலை தரும் தேடல் சேவையை வழங்கியது. மனிதர்கள் பேசுவதை புரிந்து கொண்டு பதில் அளிப்பது போல கேள்விகளுக்கு ஏற்ப பதில் அளிக்கும் இந்த முறை கோட்பாடு ரீதியாக அற்புதமாக இருந்தாலும் நடைமுறையில் இதற்கான தொழில்நுட்ப சவால்களை ஆஸ்க்ஜீவ்ஸால் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியவில்லை. ஆனால் இப்படி இணையவாசிகளின் எதிர்பார்ப்பை கேள்வி மூலம் புரிந்து கொண்டு தேவையான பதிலை நெத்தியடியாக அளிக்க கூடிய அம்சமே தேடியந்திரங்களுக்கான எதிர்கால இலக்காக கொள்ளப்படுகிறது.

தேடியந்திரங்கள் ஏன் லட்சக்கணக்கில் பக்கங்களை கொண்டு வந்து கொட்ட வேண்டும். என்ன எதிர்ப்பார்க்கிறோமோ அந்த ஒற்றை பதிலை மட்டும் அளித்தால் எப்படி இருக்கும்?

இந்த கனவை நிஜமாக்கும் ஆய்வுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த திசையில் முதல் படி என்பதால் ஆஸ்க்.காமை நினைவில் கொள்ள வேண்டும்.

அது மட்டும் அல்லாமல், இன்று இணைய உலகில் ஏராளமாக உருவாகி இருக்கும் கேள்வி பதில் தேடியந்திரங்களுக்கும் ஆஸ்க் தான் முன்னோடி.

ஆஸ்க் தனது அடையாளமான ஜிவ்ஸ் பெயரை இழந்து பின்னர் பல கைகள் மாறினாலும் இன்னமும் இணைய உலகில் தாக்குப்பிடித்து நிற்கிறது. தேடல் சேவையை நிறுத்திக்கொண்டாலும் கேள்விகள் மூலம் தனது தரவு பட்டியலில் இருந்து பதில் அளித்து வருகிறது.

பல பதங்களுக்கு ஆஸ்க்.காம் தளத்தில் கேள்விகள் மூலம் சிறந்த முடிவுகளை பெறலாம்.

இணையத் தேடல் உலகில் கூகுள் வரம் தரும் தெய்வம் என்றால், ஏனைய மூன்றும் சிறு தெய்வங்கள் எனலாம். இந்த நான்கு தேடியந்திரங்கள் தவிர முக்கிய மாற்று தேடியந்திரங்கள், சர்வதேச தேடியந்திரங்கள், சிறப்பு தேடியந்திரங்கள், குறுந்தேடியதிரங்கள் மற்றும் முக்கிய தேடல் கோட்பாடுகள், தேடியந்திர சிக்கல்கள், தேடல் அரசியல், தனியுரிமை பிரச்சனை பற்றி எல்லாம் இனி பார்க்கலாம்.

சைபர்சிம்மன், இணைய வல்லுநர், தொடர்புக்கு enarasimhan@gmail.com

| முந்தைய அத்தியாயம்:>ஆ'வலை' வீசுவோம் 3 - தேடியந்திரங்களின் சுருக்கமான வரலாறு |

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x