Published : 02 May 2015 12:16 pm

Updated : 02 May 2015 12:16 pm

 

Published : 02 May 2015 12:16 PM
Last Updated : 02 May 2015 12:16 PM

ஜெயகாந்தனோடு பல்லாண்டு 29- ஜெயகாந்தனின் ஆசான் ஜெயமோகன்!

29

பாரதியார் யாரை எல்லாம் புகழ்ந்து பாடியிருக்கிறார் என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். அவ்வாறே, ஜெயகாந்தன் யாரையாவது புகழ்ந்து எழுதுவது ஒருபுறம் இருக்கட்டும், புகழ்ந்து பேசுவது கூட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

அவரைப் பேட்டி கண்டவர்கள் யாவரும் தமிழில் அவருக்குப் பிடித்த எழுத்தாளர் யார் என்பதை எப்போதும் தவறாமல் கேட்டனர். புதுமைப்பித்தனை முதலில் கூறித் தப்பித்துக்கொள்வார். சமகால எழுத்தாளர்களில் யாரைப் பிடிக்கும் என்று அவர்கள் துருவித் துருவிக் கேட்டபோதெல்லாம் கடைசி யாக அவர் சொன்ன ஒரே பெயர் சுந்தர ராமசாமி!


சுந்தர ராமசாமிக்கும் இவர் எழுத்தைப் பற்றி ஒரு மாற்று அபிப்ராயம் இருந்த போதிலும், ஜெயகாந்தனை அவர் மிகவும் மதித்தார். அவரது, ‘குழந்தை கள் ஆண்கள் பெண்கள்’ நாவலை ஜெயகாந்தன் வெளியிட வேண் டும் என்று விரும்பி அவ்வாறே செய்தார்.

ஒருமுறை ஜெயகாந்தன் நாகர் கோயிலுக்குப் போனபோது, அவரோடு சேர்ந்து போக எனக்கு வாய்க்கவில்லை. அது மட்டுமல்ல; தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களுக்கும் அவரோடு சென்ற நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் கால் வைக்கும் வாய்ப்பு மட்டும் கிடைக்கவில்லை.

வேறொரு நண்பர் ஜெயகாந்தனோடு சென்றார். அவர் திரும்பி வந்து, நாஞ்சில் நாட்டு நீர்வளம் முதற்கொண்டு, சுந்தர ராமசாமியும் ஜெயகாந்தனும் ஓர் இரவு முழுவதும் பேசிக்கொண்டிருந்தது வரை கூறினார். என்ன பேசினார் என்பது அவருக்குத் தெரியவில்லை. அப்போது நான் நாகர்கோயில் செல்லும் வாய்ப்பைத் தவறவிட்டதற்கு மிகவும் வருந்தினேன்.

நான் அப்போது அங்கே இருந் திருந்தால் அந்த இரட்டையரின் உரை யாடலில் இருந்து ஏதேனும் அர்த்தமும், ஆழமும், அழகும் நிறைந்த சிலவற்றை உருவி எடுத்திருப்பேன்.

ஜெயகாந்தன் யாரையுமே பாராட்ட மாட்டார் என்று வாசகர்கள் மத்தியிலும் அதைவிட அதிகமாக எழுத்தாளர்கள் மத்தியிலும் ஒரு பெரிய குறையே இருந்தது.

திடீரென்று ஒரு நாள், ‘‘ஜெயமோகன் எனது ஆசான்!’’ என்று ஜெயகாந்தன் பேசியதாக செய்தி வெளிவந்தது. எனது நெருங்கிய நண்பர்கள் உட்பட பல பேரும் ‘‘என்னப்பா, இப்படி சொல்லிட்டாரு?’’ என்று முகம் சுளித் தனர். என்னுள் மட்டும், அவர் ஏதோ அழகாகச் சொல்லியிருக்கிறார் என்பது புரிந்த மாதிரி இருந்தது.

சில நாட்கள் கழித்து நான் சென்னை சென்றபோது இந்த விஷயத்தைப் பற்றி நானும் ஜெயகாந்தனும் பேசி னோம். ஜெயகாந்தன் மிகவும் சங்கோஜமாக ஓர் எளிய மனிதரைப் போல பேசினார்.

‘‘ஏம்பா! நான் யாரையும் பாராட்டவே மாட்டேன்னு பழி சொல்றாங்க. யாரை யாவது பாராட்டிவிட்டாலோ இப்படியா பாராட்டுவது என்று அலறுகிறார்கள்… இதற்கு நான் என்ன செய்யட்டும்?’’ என்று கேட்டார்.

‘‘ஜெயமோகன் எனது ஆசான்னு சொன்னதிலே என்ன தப்பு? நமக்குத் தெரியாத ஒன்றை நமக்குச் சொல்லிக் கொடுப்பவர் ஆசான்தானே? உதா ரணமா, எனக்கு சமஸ்கிருதத்திலோ, மலையாளத்திலோ ஏதாவது சந்தேகம் வந்தால் அவரைத்தான் கேட்பேன். அப்போ அவர் எனக்கு ஆசான்தானே?’’

அந்தச் சர்ச்சையை ஜெயமோகன், ‘‘அவரது பெருந்தன்மை அவரை அவ்வாறு சொல்ல வைத்தது!’’ என்று சுபமாக முடித்தார்.

அப்புறம் ஜெயகாந்தனும் நானும் ஜெயமோகனைப் பற்றி அடிக்கடி பேசுவோம்.

’’அவரது ‘ஏழாம் உலகம்’ நீ படிச் சிருக்கியா?’’ என்று கேட்டார். ‘‘இல்லை…’’ என்றேன் நான். அந்த மாதிரியெல்லாம் நிஜமா நடக்குமான்னு தோணுது!’’ என்றார்.

சுந்தர ராமசாமியின் மறைவுக்குப் பிறகு, ‘சுந்தர ராமசாமி நினைவின் நதியில்’ என்கிற ஜெயமோகனின் நூல் வெளியாயிற்று. ஜெயகாந்தன்தான் நூலை வெளியிட்டார். அந்த நிகழ்ச்சிக்கும் நானும் ஜெயகாந்தனோடு போயிருந்தேன்.

அந்த விழா முடிந்து ஜெயகாந்தனின் வீடு திரும்பினோம். ஜெயகாந்தனுக்குத் தந்த பிரதி என்னிடம் இருந்தது. புகழ்பெற்ற அந்த மொட்டை மாடிக் கீற்றுக் கொட்டகையில், என் எதிரே ஜெயகாந்தனும் அவரது மகன் ஜெய சிம்மனும் உட்கார்ந்திருக்க, நான் என் ஆர்வ மிகுதியால் ஜெயமோகன் எழுதிய சில பக்கங்களை வாசித்துக் காட்டத் தொடங்கினேன்.

அது, கன்னியாகுமரியில் இருந்த மாயி என்கிற, ஆச்சர்யப்படத்தக்க ஓர் அம்மையாரைப் பற்றி அவர் எழுதுவதாக இருந்தது. மாயியைப் பற்றிய கருதுகோள்களில்தான் சுந்தர ராமசாமியும் ஜெயமோகனும் முரண் பட்டனர்.

‘‘மாயியை, ஒரு சானடோரியத்தில் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்’’ என்பார் சுந்தர ராமசாமி.

‘‘சரி, கொண்டு சென்று சேர்த்து விடுவோம். அவர் குணமாகி வீடு வந்து காலை நீட்டி உட்கார்ந்துகொண்டு அப்புறம் என்ன செய்வது?’’ என்று ஜெயமோகன் சுந்தர ராமசாமியைக் கேட்பார். இந்த நிகழ்ச்சிகளின் வரிகளை நான் படித்தபோதெல்லாம், குலுங்கக் குலுங்கச் சிரித்து மிகவும் ரசித்த ஜெயகாந்தன், ‘‘இந்த ஒரு பகுதி மட்டுமே (அந்த மாயியின் பகுதி) ஒரு பிக்‌ஷன் (Fiction) போல் இருக்கிறது!’’ என்றார்.

அதற்கப்புறம் சுந்தர ராமசாமியை யும் ஜெயமோகனையும் இணைத்துப் பார்ப்பது எங்களுக்குப் பழக்கமாகி விட்டது.

சுந்தர ராமசாமியின் மேலான வாசகர்கள் என்னை மன்னிக்குமாறு கேட்டுக்கொண்டு நான் ஒரு தகவலைப் பதிவு செய்ய விரும்புகிறேன். நான் ஒருநாள் ஜெயகாந்தனோடு பேசிக் கொண்டிருந்தபோது, ஜெயமோகனின் ‘லங்கா தகனம்’ குறுநாவலைப் பற்றிக் குறிப்பிட்டேன்.

கலைஞன், கருப்பொருள், அதன் மீதான அவன் காதல் குறித்தது அந்தக் கதை என்று சொல்லி, அதன் பின் சொன்னேன்.

‘‘சுந்தர ராமசாமியை விட ஜெய மோகனின் எழுத்து ரஸமாயிருக்கிறது ஜே.கே!’’ என்றேன்.

ஜெயகாந்தான் அதை ஆமோதிக் கவும் இல்லை; மறுக்கவும் இல்லை. கொஞ்ச நேரம் மவுனமாக இருந்தவர், மேலே நிமிர்ந்து பார்த்து, ‘‘நீ சொல்வதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது!’’ என்றார்.

இதற்கிடையில் சிலர், ஜெய மோகனை இந்துத்வா கும்பலில் தள்ளி விடப் பார்த்தனர். அவர்களெல்லாம் ஜெயமோகனின் ‘இன்றைய காந்தி’யைப் படிக்க வேண்டும். பன்முகத் தன்மை வாய்ந்த இந்தியாவை அவர் எவ்வாறெல்லாம் தேர்ந்தெடுக்கிறார் என்பது தெரிய வரும்.

தேசப் பிதாவின் மீது அள்ள இறைக்கப்பட்ட அவதூறு சேற்றை எல்லாம், ஆதாரங்கள் என்கிறா ஆகாய கங்கையினால் கழுவிச் சுத்தப்படுத்திய தேச மைந்தன் அவர் என்றெல்லாம் நான் ஜெயகாந்தனிடம் சொன்னேன்.

ஜெயகாந்தனே ஒரு முறை ஜெயமோகனிடம் அவரது ‘இன்றைய காந்தி’யைப் புகழ்ந்து கூறியதாகக் கேள்விபட்டேன். அவர் கூறிய வார்த்தை களை ஜெயமோகனே ஊர்ஜிதப்படுத்து வதுதான் சரியாக இருக்கும்.

என்னிடம் ஜெயகாந்தன், ‘‘இன்றைய காந்தி படித்தேன். நன்றாகத்தான் இருக்கிறது!’’ என்று மட்டும் சொன்னார்.

அவ்வளவு துல்லியமான அளவு உடையது அவரது ஒவ்வொரு பாராட்டும். ஒரு பாராட்டுரையில் அது அளவு கடந்து வழிந்து ஒழுகினால், அது அவருடைய வார்த்தைகள் அல்ல என்பதற்கு அடையாளம்!

- தொடர்வோம்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: pisakuppusamy1943@gmail.com


தொடர்ஜெயகாந்தனோடு பல்லாண்டுபி.ச.குப்புசாமிசனிக்கிழமை சரிதை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x