

ராட்னி மார்க்ஸ். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வான் இயற்பியலாளர். 1968-ல் பிறந்த அவர் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் படித்தார். நியூ சவுத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். தென் துருவத்தில் நிறுவப்பட்ட ஆய்வுக் கூடத்தில் 1997 முதல் 1998 வரையில் பணியாற்றினார். ஸ்மித்சோனியன் வான் இயற்பியல் விண்நோக்ககத்தில் பணியில் சேர்வதற்கு முன்னால் சிகாகோ பல்கலைக்கழகத்தின் விண் நோக்கி, தொலையுணர்வு நோக்கத் திலும் பணிபுரிந்தார். பிறகு, தென் துருவத்தில் ஆராய்ச்சிக் குழு வினருடன் சேர்ந்துகொண்டார்.
அண்டார்டிகாவின் ஆய்வுக் கூடமும், அனைவரும் தங்கி இளைப் பாறும் தளமும் இரு வெவ்வேறு பிரிவு களாகக் கட்டப்பட்டிருந்தன. ஆய்வுக் கூடத்தில் பராமரிப்பு நிபுணராகப் பணி யாற்றிய சோன்ஜா வோல்டருடன் சேர்ந்து பணியாற்றினார் ராட்னி மார்க்ஸ். 11.05.2000 அன்று விண்நோக்கத் திலிருந்து தாங்கள் தங்கியிருந்த தளத்துக்குச் செல்லும் வழியில் அவருக்குத் திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. 36 மணி நேர இடைவெளிக்குள் நிலைமை மோசமாகிக்கொண்டே வந்தது. தளத்தில் இருந்த டாக்டர் அவரை 3 முறை சோதிக்க நேர்ந்தது. அவருக்கு என்ன ஆனது, அவருக்கு என்ன சிகிச்சை செய்வது என்று தளத்திலிருந்து செயற்கைக் கோள் வழியாக அமெரிக்காவில் இருந்த டாக்டர்களிடமும் ஆலோசனை கேட்கப் பட்டது. ஆனால், அடுத்த நாளே மார்க்ஸ் இறந்துவிட்டார். அப்போது அவரைக் கவனித்துக்கொண்டவர் டாக்டர் ராபர்ட் தாம்சன்.
மார்க்ஸ் துருவப் பகுதி குளிர் தாங்காமல் இறந்தாரா, அல்லது உணவாலோ மருந்தாலோ இறந்தாரா என்ற கேள்விகள் எழுந்தன. பிரேதப் பரிசோதனை செய்யும் வசதி அந்த முகாமில் இல்லாததால், காரணத்தை உடனே அறியமுடியவில்லை. ஆனால், அதற்குள் பத்திரிகைகள் அதைக் கொலை என்றே முடிவுசெய்து, ‘தென் துருவத்தில் முதல் கொலை’ என்று தலைப்பிட்டன.
ஒருவழியாக அவர் இறந்த 6 மாதங்களுக்குப் பிறகு, நியூசிலாந்தில் உள்ள கிரைஸ்ட் சர்ச்சுக்கு உடல் அனுப்பிவைக்கப்பட்டது. மெத்தனால் காரணமாக உயிரிழந்தார் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கை தெரி வித்தது அதிர்ச்சியாக இருந்தது. மெத்தனாலை யாராவது உடலில் செலுத்தியிருப்பார்களா, அவரே செலுத்திக்கொண்டாரா, ஒரு ஆய் வாளருக்கு ஏன் இப்படி நேர வேண்டும் என்ற கேள்விகள் மீண்டும் எழுந்தன.
அந்த முகாமில் ராட்னி மார்க்ஸ் தவிர, மேலும் 49 பேர் இருந்தனர். அவர்களைப் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டன. நியூசிலாந்து போலீஸ் அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு அவர்களிடமிருந்து பதில்களைப் பெற முடியவில்லை. குளிரைத் தாங்க மெத்தனாலை உடலில் செலுத்திக் கொண்டாரா, அப்படி நம்ப வைத்து யாராவது அவருக்கு அதை ஊசிமூலம் உள் செலுத்தினார்களா என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டன. அங்கிருந் தவர்கள் அனைவருமே மெத்தப் படித்த வர்கள், சமூகத்தின் உயர் நிலையில் இருப்பவர்கள் என்பதால், மார்க்ஸின் மரணம் பற்றிய மர்ம முடிச்சு இன்று வரை அவிழவேயில்லை. மர்மம் என்று சொல்லக் காரணம், அவருக்கு முகாமில் சிகிச்சை அளித்த டாக்டர் 2006 முதல் காணவில்லை!