

காலச் சக்கரத்தை
எப்போதும்
முன்னோக்கியே இழுக்கும்
உழைப்பின் கைகளை
யாரால் கட்டிவிட முடியும்?
வற்றிப்போன குரலெனினும்
உயர்ந்தெழும்
பாட்டாளிக் குரலொலியை
எந்தக் கயிற்றால்
சுருக்கிட முடியும்?
பற்றியெரியும் பசி நெருப்பை
வயிற்றோடு அணைத்தபடி,
வறண்ட வயலை
துருப்பிடித்த கலப்பையின்
கொழுமுனை கொண்டு
கீறிக் கொண்டிருக்கும்
விவசாயியின் வாழ்வில்
எப்போது துளிர்க்கப் போகின்றன
சில பச்சையங்களேனும்?
யாரோ பயிரிட்ட நிலம்,
யாரோ தோண்டிய ஊற்று,
யாரோ போட்ட சாலை…
ஆனாலும்
நாம்தான் உண்கிறோம்,
நாம்தான் குடிக்கிறோம்,
நாம்தான் நடை போடுகிறோம்.
காட்டைக் கழனியாக்கியவன்,
கடனுக்கு அஞ்சி
காலனிடம் தஞ்சமடைவதா..?
அவன் விதைத்த விதையால்
கால மரத்தில்
கனிந்து சிவக்கும்
வெற்றிக்கனியை
யாராரோ சுவைக்கிறார்கள்…
அவனைத் தவிர.
கசந்தே கிடக்கும்
உழுதவன் வாழ்வு
விழுந்தே கிடக்கிறது.
அதைச் சற்றேனும் எழுப்பிட,
ஏதாவது செய்ய வைப்பதே
இந்த மேதினச் செய்தி.
’மேதினி’ச் சிறக்கவே
’மே தினம்’ போற்றுவோம்!