

ஆங்கிலத் திரைப்படங்களின் ரசிகரா நீங்கள்? ஆல்பிரெட் ஹிட்ச்காக், ஸ்டான்லி குப்ரிக், மார்ட்டின் ஸ்கார்சஸி போன்ற இயக்குநர்களின் புகழ்பெற்ற திரைப்படங்களின் டைட்டில்களில் சால் பாஸ் எனும் பெயரைப் பார்த்திருப்பீர்கள். டைட்டில் காட்சிகளில் வரும் தனது அனிமேஷன் திறமை மூலம் ரசிகர்களை அசத்திய மகா கலைஞர் அவர்.
திரைப்படங்களின் சுவரொட்டிகளையும் வடிவமைத்திருக்கும் அவர் புகழ் பெற்ற வர்த்தக நிறுவனங்களின் இலச்சினைகளையும் வடிவமைத்தவர். அமெரிக்காவின் நியூயார்க் நகரின் ப்ராங்ஸ் பகுதியில் 1920 மே 8-ல் பிறந்தவர் சால் பாஸ். அவரது பெற்றோர் கிழக்கு ஐரோப்பியாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய யூதர்கள். 1940-களில் ஹாலிவுட் படங்களின் பத்திரிகை விளம்பரங்களை வடிவமைக்கும் பணியுடன் தனது திரை
வாழ்வைத் தொடங்கினார். லாஸ்லோ பெனிடெக் இயக்கிய ‘டெத் ஆஃப் எ சேல்ஸ்மேன்’ (1951) மற்றும் ஓட்டோ பிரெமிங்கர் இயக்கிய ‘தி மூன் இஸ் ப்ளூ’ (1953) போன்ற திரைப்படங்களில் சிறப்பாகப் பணிபுரிந்தார். அவரது திறமையைக் கண்டு வியந்த பிரெமிங்கர் ‘கார்மென் ஜோன்ஸ்’ (1954) திரைப்படத்தின் சுவரொட்டியை வடிவமைக்குமாறு கேட்டுக்கொண்டார். அசத்தலான அவரது வடிவமைப்பைப் பார்த்தவுடன் படத்தின் டைட்டில் காட்சியையும் வடிவமைக்குமாறு சால் பாஸை அவர் கேட்டுக்கொண்டார்.
படத்தின் தொடக்க (டைட்டில்) காட்சிகள் மற்றும் இறுதி (டைட்டில்) காட்சிகள் படத்தின் சாரத்தை மேன்மைப்படுத்தக் கூடியவை என்பதை உணர்ந்த முதல் திரைக்கலைஞர் அவர்.
ஓட்டோ பிரெமிங்கர் இயக்கிய ‘தி மேன் வித் தி கோல்டன் ஆர்ம்’ (1955) படம், போதை மருந்து பழக்கத்துக்கு அடிமையான ஜாஸ் இசைக் கலைஞரைப் பற்றியது. அந்தக் காலகட்டத்தில் அதெல்லாம் சர்ச்சைக்குரிய கதைக் களன்கள். எனவே, டைட்டில் காட்சியை வடிவமைப்பதில் கூடுதல் கவனம் எடுத்துக்கொண்டார். கருப்புப் பின்னணியில் வெள்ளை நிறத்தில் கை மற்றும் சில சட்டகங்கள் தோன்றி மறைவதுபோல் வடிவமைத்து அவற்றின் நடுவில் பெயர்கள் தோன்றுமாறு வடிவமைத்திருந்தார்.
இந்த முயற்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருந்தது. ஹிட்ச்காக் இயக்கிய ‘நார்த் பை நார்த்வெஸ்ட்’ (1959), ‘வெர்ட்டிகோ’ (1958), ‘சைக்கோ’ (1960) போன்ற படங்களின் டைட்டில் காட்சிகளையும் தனது படைப்பாற்றல் மூலம் பிரமாதமாக வடிவமைத்தார் சால் பாஸ். ஸ்டான்லி குப்ரிக் இயக்கிய ‘தி ஷைனிங்’ (1980), மார்ட்டின் ஸ்கார்சஸி இயக்கிய ‘குட் ஃபெல்லாஸ்’ (1990), ‘கேஸினோ’ (1995) போன்றவை அவர் போஸ்டர் வடிவமைத்த புகழ்பெற்ற திரைப்படங்கள். புகழ்பெற்ற குறும் படங்களையும் இயக்கியிருக்கும் இவர், 1996 ஏப்ரல் 25-ல் காலமானார்.
- சரித்திரன்.