

படித்து பட்டம் பெற்று தனியார் துறையில் உயர் பதவியில் இருக்கும் நண்பர் அவர். ஒருநாள் அவரது வீட்டுக்குச் சென்றிருந்தபோது அவரது மனைவி, ‘‘பெரிய வேலையில் இருந்து என்ன பிரயோஜனம்? ஒரு ரேஷன் கார்டு எடுக்கக்கூட வழியில்லை’’ என்று அலுத்துக்கொண்டார். நண்பரிடம் கேட்டால், ‘‘புரோக்கரிடம் பணம் கொடுத்துள்ளேன். விரைவில் வந்துவிடும்’’ என்றார்.
உண்மைதான். பிறப்புச் சான்றிதழ், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவற்றைப் பெறுவதற்கான வழிமுறைகள் இன்று அநேகம் பேருக்குத் தெரிவதில்லை. பள்ளிகள் திறக்கும் நேரத்தில் சாதிச் சான்றிதழுக்காக அலைபாயும் பெற்றோர்களைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது.
அரசு அலுவலகங்களுக்குச் சென்றால் அலுவலர்களின் அறையைவிட மரத்தடியில் உட்கார்ந்திருக்கும் இடைத்தரகர்களிடம்தான் கூட்டம் அதிகம் இருக்கிறது.
இது வெறும் அறியாமையின் குறியீடு மட்டுமல்ல; ஊழலின் தொடக்கமும் இதுவே. முறைப்படி விண்ணப்பம் பூர்த்தி செய்வது, உரிய அவகாசம் காத்திருப்பது என குறைந்தபட்சமாக மெனக்கிடுவதற்குக்கூட பொறுமை இருப்பதில்லை. தரகரிடம் கூடுதல் பணம் கொடுத்தாவது இருந்த இடத்திலிருந்தே வேலையை முடிக்கவே பலரும் விரும்புகிறார்கள். இதை நூல் பிடித்துப்போனால் இடைத்தரகரில் தொடங்கும் ஊழல், அதிகார மட்டத்தின் உச்சம் வரை பாய்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
அப்புறம் பொத்தாம் பொதுவாக அதிகாரிகளையும் அரசுகளையும் மட்டும் சபித்து என்ன பலன்? அரசு இயந்திரம் நேர்மையாக இருக்க வேண்டும் என்றும் விரும்புகிற நாம் அந்த இயந்திரம் நமக்கு மட்டும் வளையவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? மாற்றம் வேண்டும் என்று விரும்பும் நாம் அதை நம்மில் இருந்தே தொடங்குவோமே.
இத்தனைக்கும், எல்லாவற்றுக்கும் எளிய நடைமுறைகளைத்தான் அரசு வகுத்துள்ளது. குடும்ப அட்டை தொடங்கி ஓட்டுநர் உரிமம்வரை பெறுவதற்கு உங்களுக்கு தகுதி இருக்கும்பட்சத்தில், அதற்கு நீங்கள் விண்ணப்பித்த குறிப்பிட்ட நாட்களுக்குள் அவற்றை அதிகாரிகள் உங்களுக்கு தந்தாக வேண்டும் என்று அரசு காலக்கெடுவும் நிர்ணயித்துள்ளது. தவிர, இவற்றைப் பெறுவது நம் உரிமை.
வாருங்கள் நம் உரிமைகளை அறிந்துகொள்வோம்.
இது படித்து, புரட்டிவிட்டுப் போகும் பகுதி அல்ல; வெட்டி, ஒட்டி வைத்துக்கொண்டால் நிச்சயம் உதவும் பகுதி!