Last Updated : 27 May, 2015 10:44 AM

 

Published : 27 May 2015 10:44 AM
Last Updated : 27 May 2015 10:44 AM

ஒரு நிமிடக் கதை: கடவுளே துணை!

“டேய் கணேசா, கோயில்ல என்னடா ஒரே கூட்டமா இருக்கு?” என்று கடைப் பையனை விசாரித்தார் பிளக்ஸ் பேனர் கடை வைத்திருந்த சிதம்பரம்.

“அது ஒன்னுமில்லண்ணே, இந்த ரோட்ல அடிக்கடி விபத்துகள் நடக்குதுல்ல. அதுல இறந்தவங்க ஆவி ரூபத்துல திரியறதா ஒரு வதந்தி! அதனாலதான் அந்தக் கோயில்ல அவ்ளோ கூட்டம்” நமுட்டுச் சிரிப்புடன் பதில் சொன்னான் கணேசன். அவனது பதிலைக் கேட்ட சிதம்பரமும் சிரித்தார்.

சிதம்பரத்துக்கு இன்னொரு ஆச்சரியமும் சேர்ந்து வந்தது. அண்ணாமலை அவரது கடையை நோக்கி வந்துகொண்டிருந்தார்.

ஒரே தெருவில் வசித்தாலும் சிதம்பரம் வைத்திருந்த கடைக்கு அண்ணாமலை அதிகம் வருவதில்லை. இதற்கு முன் கடையின் திறப்பு விழாவுக்கு மட்டும் ஒரு முறை வந்திருந்தார்.

“வாங்க அண்ணாமலை சார்! என்ன இந்தப் பக்கம்?” என்று ஆச்சரியம் விலகாமல் கேட்டார் சிதம்பரம்.

“அது ஒண்ணுமில்ல.. நமக்கு நாலு சாமி படம் வேணும். அதான் வாங்கிட்டுப் போலாம்னு வந்தேன்” என்றார்.

“எந்த மாதிரிப் படங்கள் வேணும்னு சொன்னா அதுக்குத் தகுந்த மாதிரி ப்ரிண்ட் போட்டுத் தந்திடலாம்.”

“நீங்க கேட்கறது புரிய லையே?” என்றார் அண்ணாமலை.

“அதாவது சார், நீங்க பூஜை ரூம்ல வச்சி கும்பிடற மாதிரி படங்கள்னா அது போட்டோ பிரேம் போடற கடையிலயே கிடைக்கும். அதை விட கொஞ்சம் பெரிய சைஸ் படங்கள் கூட அங்கேயே வாங்கிடலாம். ஆனா அதுக்கும் மேல பெரிய சைஸ்னாதான் இங்கே நாங்க பிரிண்ட் போட்டுத் தருவோம். உங்களுக்கு எந்த சைஸ்ல வேணும்னு சொல்லுங்க சார்” என்று தெளிவாய் விளக்கினார் சிதம்பரம்.

“ஓ.... அப்படியா? எனக்கு ஒவ்வொரு படமும் ஆறடி உயரத் துக்கு இருந்தாப் போதும்னு நினைக்கிறேன்”

“சரி சார், நீங்க போங்க. இன்னைக்கு சாயங்காலமா நானே ரெடி பண்ணி நம்ம கடைப் பையன்கிட்டே கொடுத்து அனுப்பிட றேன்.”

“பணம் எவ்வளவு ஆகும்னு சொன்னா கொடுத்திட்டுப் போயிடு வேன்’’ என்ற அண் ணாமலையை இடைமறித்த சிதம்பரம், “உங்களை மாதிரி தெரிஞ்சவங்க கிட்ட நான் என்ன பெரிசா கேட்டுடப் போறேன்? நீங்க கொடுக்கறத கொடுத்துட்டுப் போங்க சார்” என்றார்.

அன்று மாலையே நான்கு கடவுள்களின் ஆறடி உயரப் படங்களை பிரிண்ட் போட்டு கடைப் பையனிடம் கொடுத்து அனுப்பினார் சிதம்பரம். ஆனாலும் சிதம்பரத் தின் மனதுக்குள் ஒரு கேள்வி அரித்துகொண்டே இருந்தது. ‘இந்தப் படங்களை அவர் எதற்காக வாங்கியிருப்பார்? ஒருவேளை அண்ணாமலைக்கும் பேய்கள் மீது நம்பிக்கை வந்துவிட்டதோ?’’ என்று யோசித்தார்.

மறுநாள் காலையில் வழக்கம் போல் கடைக்குக் கிளம்பினார் சிதம்பரம். அண்ணாமலையின் வீட்டருகே வந்தபோது சிதம்ப ரத்துக்கு அதிர்ச்சி. அண்ணாமலை யின் வீட்டுச் சுவரில் இடைவெளி விட்டு கடவுள் படங்கள் ஒட்டப் பட்டிருந்தன. இடைவெளிகளில் ‘சிறுநீர் கழிக்காதே!’ என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

படங்களைத் தேடி எடுத்து பிரிண்ட் போட்டுக்கொடுத்த போது கம்பீரம் குறையாமல் இருந்த கடவுள்கள் இப்போது பரிதாபமாய் காணப்பட்டார் கள். சிதம்பரத்தைப் பார்த்த அண்ணா மலை, “நானும் என்னன்னவோ பண்ணிப் பார்த்துட்டேன். ஒருத்தனும் நிறுத்தலை. இனிமே ஒரு பய இங்க போவானா?” என்றார் கம்பீரமாய்!

அந்த வார்த்தைகளைக் கேட்ட சிதம்பரத்துக்கு முதன்முதலாக தன் தொழில் மீது வெறுப்பு உண்டானது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x