

பல தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் எழுதி வெளிநாட்டினருக்கும் அறிமுகப்படுத்திய மாபெரும் தமிழ் அறிஞர் மு.சி.பூர்ணலிங்கம் (M.S.Purnalingam) பிறந்த தினம் இன்று (மே 25). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l திருநெல்வேலி மாவட்டம் முனீர்பள்ளம் என்ற ஊரில் (1866) பிறந்தார். பள்ளிப் படிப்பை முடித்தவுடன் பரமக்குடி நீதிமன்றத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். பின்னர் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் மேற்படிப்பை முடித்தார்.
l பாளையங்கோட்டை இந்துக் கல்லூரி, சென்னை கிறிஸ்தவக் கல்லூரி, கோயம்புத்தூர் புனித மைக்கேல் கல்லூரி, மதுரை அமெரிக்கன் கல்லூரி, திருச்சி எஸ்பிஜி (பிஷப் ஹீபர்) கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார். மிகுந்த தமிழ்ப் பற்றுடன் வாழ்ந்து, தமிழுக்குப் பெரும் தொண்டாற்றியவர்.
l சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பணியாற்றியபோது ‘ஞான போதினி’ என்ற அறிவியல் இதழ், ‘ஜஸ்டிஸ்’ எனும் ஆங்கில இதழ், ‘ஆந்திரப் பிரகாசிகா’என்ற தெலுங்கு இதழை நடத்தினார். திருச்சியில் இருந்து 1923-ல் வெளியான ‘தமிழர்’ இதழிலும் இவரது கட்டுரைகள் வந்தன.
l மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, பரிதிமாற்கலைஞர், கோவை சிவக்கவி, சுப்பிரமணிய முதலியார் ஆகியோரின் நட்பைப் பெற்றவர்.
l தமிழில் 18 நூல்கள், ஆங்கிலத்தில் 32 நூல்கள் மற்றும் சட்ட நூல்களை எழுதியுள்ளார். சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், குழந்தை இலக்கியம், ஆய்வுக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகளையும் எழுதியுள்ளார். ஏராளமான சொற்பொழிவுகள் ஆற்றினார்.
l திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். திருக்குறள் குறித்து திறனாய்வு நூலும் வெளியிட்டார். ‘தமிழ் இந்தியா’ என்ற ஆங்கில நூலில் தமிழ் மொழியின் தொன்மை, தமிழின் உயர்ந்த அறிவியல் சிந்தனைகள், பண்பாடு ஆகியவற்றை வரலாற்று ஆதாரங்களோடு சுட்டிக் காட்டினார். நாடு முழுவதும் திராவிட நாகரிகமே இருந்தது என்று இதில் கூறியுள்ளார்.
l முதுகலை தமிழ் பயிலும் மாணவர்களுக்காக தமிழ் இலக்கிய வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதினார். மாணிக்கவாசகர் முதல் பட்டினத்தார் வரை உள்ள சமயச் சான்றோர் வரலாறு மற்றும் அவர்களது தத்துவங்களை ‘பத்துத் தமிழ் முனிவர்கள்’ என்ற நூலில் விளக்கியுள்ளார்.
l முற்றிலும் புதிய கண்ணோட்டத்தில் இவர் எழுதிய ‘ராவணப் பெரியோன்’ உள்ளிட்ட ஏராளமான திறனாய்வு நூல்கள் மிகவும் புகழ்பெற்றவை. ஒரு நூலின் அணிந்துரை எவற்றை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்பதற்கு, இவர் எழுதிய அணிந்துரைகள் சான்றாக விளங்குகின்றன.
l ஆசிரியர் பணியில் இருந்து 1926-ல் ஓய்வுபெற்று முனீர்பள்ளம் திரும்பிய பிறகு, பல இடங்களில் இலக்கியச் சொற்பொழிவுகள் ஆற்றினார். இவரது நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. குமரியாடல், பட்டம், தமிழ்க் கலை பாடம், இந்திய வரலாற்று ஆராய்ச்சி உள்ளிட்ட ஏராளமான கட்டுரைகளை தமிழர் இதழில் எழுதியுள்ளார்.
l பன்மொழித் திறன் கொண்ட இவர் மொழிபெயர்ப்புகள், ஆய்வுக் கட்டுரைகள், நாட்டார் கதை இலக்கியம் என பல்வேறு துறையில் தடம் பதித்தவர். 20-ம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியத்துக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய மு.சி.பூர்ணலிங்கம் பிள்ளை 81 வயதில் (1947) மறைந்தார்.