

உலகிலேயே விண்வெளியில் நடந்த முதல் மனிதரும், 17-வது விண்வெளி வீரரும் ரஷ்ய விமானப் படையின் பைலட்டுமான அலெக்ஸி லியோனோவ் (Alexey Leonov) பிறந்த தினம் இன்று (மே 30). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l சைபீரியாவில் அல்தை (Altai) என்ற பகுதியில் லிஸ்த்வியன்கா (Listvyanka) (சோவியத் ஒன்றியம்) என்ற ஊரில் பிறந்தவர் (1934). சிறு வயதிலேயே கலைகள் மற்றும் விமானம் ஓட்டுவதில் ஆர்வம் காட்டினார். ரீகா (Riga) என்ற இடத்தில் சோவியத் ஏர்ஃபோர்ஸ் அகாதமி ஆஃப் ஆர்ட்ஸ் என்ற கல்வி நிறுவனத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
l அதன் பிறகு பைலட்டுகளுக்கான தனியார் பயிற்சிப் பள்ளியில் பயின்றார். விளையாட்டிலும் ஆர்வம் கொண்டிருந்தார். 1957-ல் உயர்நிலை விமானப்படை கல்லூரியிலும் பின்னர் 1968-ல் விமானப் படை பொறியியல் அகாடமியிலும் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றார்.
l 1981-ல் தொழில்நுட்ப அறிவியல் பட்டமும் பெற்றார். இவர் ஒரு திறமையான ஓவியக் கலைஞரும்கூட.1960-ல் விண்வெளி வீரர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரஷ்ய விமானப் படையைச் சேர்ந்த 20 பைலட்டுகளில் இவரும் ஒருவர். விண்வெளியில் நடப்பது எளிதான காரியம் அல்ல. கால் பாதத்தைத் தாங்கும் தளம் அங்கு கிடையாது.
l வோஸ்நாட்-2 என்ற விண்கலம் விண்வெளிக்கு ஏவப்பட்டது. அதில் இவரும் அதன் பைலட்டாக பாவெல் பையயோவ் (Pavel Belyayev) என்பவரும் பயணம் செய்தனர். 1965, மார்ச் 18-ம் தேதி அலெக்ஸி விண்வெளியில் நடந்தார். இது விண்வெளி வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்பட்டது. இது மனித வரலாற்றின் மகத்தான சாதனைகளில் ஒன்றாகவும் உலகின் மிக முக்கிய நிகழ்ச்சியாகவும் கருதப்படுகிறது.
l விண்வெளியில் 12 நிமிடங்கள் 9 நொடிகள் நேரம் நடந்தார். மொத்தம் 12 மீட்டர் தூரம் நடந்தார். அங்கு சில உடற்பயிற்சிகளையும் செய்தார். விண்வெளியில் நடக்க வேண்டும் என்பதற்காகவே 18 மாதங்கள் பயிற்சி எடுத்திருந்தார். விண்வெளியில் நடந்துவிட்டு கலத்துக்குத் திரும்பும் சமயத்தில் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டது.
l இவர் அணிந்திருந்த விண்வெளி ஆடை பூமியில் பயிற்சி பெற்றபோது இருந்ததுபோல் அல்லாமல் முற்றிலும் மாறுபட்ட முறையில் செயல்பட்டது. ஆனால், இவர் தன் சமயோசித புத்தியால் சிக்கலைச் சமாளித்து மீண்டும் விண்கலத்துக்கு வந்து சேர்ந்தார். 1968-ல் சோயுஸ் விண்வெளி ஓடத்தின் கமாண்டராகத் தேர்வு செய்யப்பட்டார்.
l சோயுஸ்-19 என்ற விண்வெளி ஓடத்தில் இரண்டாவது முறையும் விண்வெளி சென்றார். 6 நாட்கள் அங்கு இருந்துவிட்டு பூமி திரும்பினார். சிறந்த ஓவியரான இவர், விண்வெளியில் இருந்த சமயத்தில் கலர் பென்சில்களால் பூமியைப் படங்களாக வரைந்தார்.
l விண்வெளி சாகசங்களுக்குப் பிறகு ஒரு வங்கியில் துணைத் தலைவராகப் பணிபுரிந்தார். “விண்வெளியிலிருந்து பார்க்கும்போது, உலகம் மிகவும் சிறியதாக, தனிமையானதாகத் தெரிந்தது. கச்சிதமான உருண்டை வடிவில் காணப்பட்டது” என்று குறிப்பிட்டார்.
l சோவியத் நாட்டின் ஹீரோ விருதை இரண்டு முறையும், லெனின் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகள், பட்டங்களையும் வென்றுள்ளார். உள்நாட்டில் மட்டுமல்லாமல் பல நாடுகளில் பல்வேறு பரிசுகளையும், பதக்கங்களையும் பெற்றுள்ளார்.
l பல நாடுகள் இவருக்கு கவுரவக் குடியுரிமை வழங்கின. இவர் விண்வெளியில் நடந்து 50 வருடங்கள் ஆகிவிட்டது. தற்போது 80 வயதைக் கடந்துவிட்டபோதும் இன்றும் அதே மிடுக்குடன் தனது பதக்கங்களை அணிந்தவாறுதான் காணப்படுகிறார்.