Published : 08 May 2015 10:14 AM
Last Updated : 08 May 2015 10:14 AM

சுவாமி சின்மயானந்தா 10

உலகம் முழுவதும் ஆன்மிக வேதாந்தக் கருத்துகளைப் பரப்பிய சுவாமி சின்மயானந்தா (Swami Chinmayananda) பிறந்த தினம் இன்று (மே 8). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l கேரளாவின் எர்ணாகுளத்தில் (1916) பிறந்தார். இயற்பெயர் பாலகிருஷ்ணன் மேனன். தந்தை, புகழ்பெற்ற நீதிபதி. கொச்சி, திருச்சூரில் பள்ளிப் படிப்பை முடித்தார். எர்ணாகுளம் மஹாராஜா கல்லூரியில் எஃப்.ஏ. (ஃபெலோஆஃப் ஆர்ட்ஸ்), திருச்சூர் செயின்ட் தாமஸ் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார்.

l லக்னோ பல்கலைக்கழகத்தில் இலக்கியம், சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஊடகவியலும் பயின்றார். அரசியல், பொருளாதாரத்தில் பல சீர்திருத்தங்களை செய்யமுடியும் என்ற நம்பிக்கையில் ஊடகத் துறையில் பணியாற்றினார்.

l 1942-ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்றார். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இவர் உட்பட பல கைதிகளுக்கு விஷக் காய்ச்சல் ஏற்பட்டது. அவர்களை சிறை நிர்வாகம் கவனிக்காமல் வீதியில் வீசியது. ஒரு பெண்மணி பார்த்து மருத்துவமனையில் சேர்த்ததால் உடல்நலம் தேறினார்.

l பின்னர் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையில் பணியாற்றினார். ஒருமுறை ரிஷிகேஷ் சென்றபோது சுவாமி சிவானந்தரை சந்தித்தார். அது இவரது வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டார். ஆன்மிகப் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினார்.

l சுவாமி சிவானந்தர் 1949-ல் இவருக்கு தீட்சை அளித்து ‘சுவாமி சின்மயானந்தா’ என்று பெயர் சூட்டினார். இமயமலையில் இருந்த சுவாமி தபோவன மகராஜிடம் இவரை அனுப்பினார். அவரிடம் 8 ஆண்டுகள் கடுமையான ஆன்மிகப் பயிற்சிகளுடன் தத்துவமும் பயின்றார்.

l இவரது ஆழ்ந்த ஞானம் பற்றி அறிந்த சிவானந்தர், கீதை கமிட்டி தொடங்குமாறு கூறினார். வேதாந்த கருத்துகளை உலகெங்கும் பரப்ப குருவின் ஆசியுடன் புறப்பட்டார். உலகம் முழுவதும் ஆன்மிகச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.

l பண்டைய வேத, புராணங்கள், இதிகாசங்கள் குறிப்பாக பகவத்கீதையை முழுவதுமாக அறிந்தவர் என்று போற்றப்பட்டார். கடினமான ஆன்மிக விஷயங்கள், தத்துவங்களைக்கூட எளிமையாக எடுத்துக் கூறியதால் அவரது உரையைக் கேட்க ஏராளமானோர் கூடினர். 1953-ல் ‘சின்மயா மிஷன்’ ஆசிரமத்தைத் தொடங்கினார். இந்த மையங்கள் தற்போது உலகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளன.

l உபநிடதங்கள், வேதங்கள், பகவத்கீதைக்கான இவரது விளக்க உரைகள் பிரசித்தி பெற்றவை. ஏறக்குறைய 95 நூல்கள் வெளிவந்துள்ளன. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இவரது நூல்கள் தமிழ், இந்தி, மலையாளம், மராத்தி, தெலுங்கு, பிரெஞ்சு உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

l இந்திய தத்துவத்துக்கான வருகைதரு பேராசிரியராக அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளின் பல்கலைக்கழகங்களில் பணியாற்றினார். உலகம் முழுவதும் ஆசிரமங்கள், பள்ளிகள், மருத்துவமனைகளை தொடங்கினார். கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ‘சின்மயா’ என்ற அமைப்பை உருவாக்கினார்.

l அத்வைத வேதாந்த ஞானம், பகவத்கீதை, உபநிடதங்கள் ஆகியவற்றை உபதேசித்தவர். 40 ஆண்டுகளுக்கு மேலாக சமூகப் பணியாற்றியவர். இந்தியாவின் குறிப்பிடத்தக்க ஆன்மிகத் தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படும் சுவாமி சின்மயானந்தா 77 வயதில் (1993) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x