Published : 22 May 2015 10:12 AM
Last Updated : 22 May 2015 10:12 AM

ராஜா ராம் மோகன் ராய் 10

இந்தியாவில் சாதி, மத, சமூக சீர்திருத்தத்தை ஏற்படுத்தியவரும், பிரம்ம சமாஜத்தை நிறுவியவருமான ராஜா ராம் மோகன் ராய் (Raja Ram Mohan Roy) பிறந்த தினம் இன்று (மே 22). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l வங்காளத்தின் ஹூக்ளி மாவட்டம் ராதாநகர் கிராமத்தில் (1772) பிறந்தார். உயர் கல்விக்காக பாட்னா சென்றவர், 15 வயதுக்குள் ஆங்கிலம், பிரெஞ்ச், லத்தீன், ஹீப்ரூ, கிரேக்கம், சமஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிகளைக் கற்றார். வேத, சாஸ்திரங்கள், உபநிடதங்களையும் ஆழ்ந்து கற்றார். சிலை வழிபாடு, சடங்குகள், சாதிவெறி, மதவெறி, பழமைவாதங்களுக்கு எதிராக செயல்பட்டார். இதனால், தந்தையுடன் கருத்து வேறுபாடு எழுந்தது.

l கொல்கத்தாவில் வட்டிக் கடையில் வேலை செய்தார். பின்னர் 5 ஆண்டுகள் கிழக்கிந்திய கம்பெனியின் வருவாய்த் துறையில் பணியாற்றினார். ஆங்கில நாகரிகம் பிடித்திருந்ததால், இங்கிலாந்துக்கு பலமுறை சென்று வந்தார்.

l சமூக ஏற்றத் தாழ்வுகள், முறைகேடுகளைக் கண்டு வெகுண்டார். சாதி, மத, சமூகத்தில் சீர்திருத்தம் கொண்டுவரும் முயற்சியாக கொல்கத்தாவில் 1815-ல் ஆத்மிக சபையை உருவாக்கினார்.

l இதன்மூலம், அனைத்து மக்களும் சாதி, மத வித்தியாசமின்றி ஒன்றாக இணைந்து ஒரே இறைவனை வழிபட வழிவகுத்தார். பெண் உரிமை, பெண் கல்வி, விதவை மறுமணம், பெண் சொத்துரிமைக்காக பாடுபட்டார். உடன்கட்டை ஏறுதல், பலதார மணம் போன்றவற்றுக்கு எதிராக தீவிரமாகப் போராடினார்.

l வேதாந்த சாஸ்திரங்களின் சாரத்தை 1819-ல் ஆங்கிலத்திலும், வங்காள மொழியிலும் எழுதி வெளியிட்டார். உபநிடதங்களை மொழிபெயர்த்தார். இயேசுவின் போதனைகளைத் திறனாய்வு செய்து, ‘இயேசுவின் கொள்கைகள் அமைதிக்கும் ஆனந்தத்துக்கும் வழிகாட்டி’ என்ற நூலை 1820-ல் வெளியிட்டார்.

l ஆங்கிலம், இந்து, பெர்ஷியன், வங்காள மொழிகளில் பல கட்டுரைகளை எழுதினார். ஆங்கில முறைக் கல்வி போதிக்கும் பள்ளியை 1822-ல் நிறுவினார். மேற்கத்திய - இந்திய கற்றல் முறை இணைந்த பாடத்திட்டம் கொண்ட வேதாந்த கல்லூரியை 1826-ல் நிறுவினார். இந்தியாவின் முதல் சமூக, மத சீர்திருத்த இயக்கமான பிரம்ம சமாஜத்தை நிறுவினார். சாதி அமைப்பு, குழந்தைத் திருமணம், சிசுக்கொலை, தீண்டாமை, பெண்கள் முக்காடு அணியும் முறைக்கு எதிராக குரல் எழுப்பினார்.

l கோயில்களில் உயிர் பலி போன்ற சடங்குகளை நிறுத்துமாறு அறிவுறுத்தினார். மனிதர்களிடையே தர்மம், நீதி, கடவுள் பக்தி, கருணை, நல்லொழுக்கம், மத நல்லிணக்கம் ஆகிய உணர்வுகளைத் தூண்டினார்.

l உடன்கட்டை ஏறும் (சதி) பழக்கத்துக்கு எதிராக வெகுகாலம் போராடினார். அதன் பயனாக, 1833-ல் வில்லியம் பெண்டிங் கொண்டுவந்த சட்டத்தால், அது ஒழிக்கப்பட்டது.

l மாபெரும் கல்வியாளர், சிந்தனையாளராகவும் திகழ்ந்தார். மேற்கத்திய மருத்துவம், தொழில்நுட்பத்திலும் சிறந்து விளங்கினார். தற்போது உலகம் முழுவதும் வலியுறுத்தப்படும் பெண்ணுரிமைக்காக 200 ஆண்டுகளுக்கு முன்பே போராடியவர்.

l மோசமான பழக்கங்கள், சடங்குகளை ஒழித்து சமூக சீர்திருத்தத்துக்காக போராடியவரும், இந்திய மறுமலர்ச்சியின் தந்தை என்று போற்றப்படுபவருமான ராஜா ராம் மோகன் ராய் 61 வயதில் (1833) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x