நடனமும் நானும்- இயக்குநர் சசிகுமார்

நடனமும் நானும்- இயக்குநர் சசிகுமார்
Updated on
2 min read

ஓவியர் நடனம் மறைந்த செய்தியை 12 மணி நேரத்துக்குப் பிறகே அறிந்தேன். செய்தித் தொடர்புகளும் எஸ்.எம்.எஸ். தொடங்கி இணையம் வரையிலான வசதிகளும் பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில், ஓவியத் துறையில் கவனிக்கத்தக்க ஒருவரின் மரணம் மிக எளிதாகப் புறந்தள்ளப்பட்டதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

எனக்கு 12 மணி நேரத்துக்குப் பிறகாவது தெரிய வந்த செய்தி, இன்னும் பலருக்குத் தெரியாமல் இருப்பது உச்சபட்ச வேதனை.

நடனம், அவ்வளவு இயல்பான மனிதர். வயதாக ஆக குழந்தையின் மனநிலை பெருகும் என்பார்களே... அதை நடனத்தின் பேச்சிலும் சிலிர்ப்பிலும் அறிந்திருக்கிறேன். கடலூர் மாவட்டத்தைத் துடைத்து வீசிய தானே புயல்தான் நடனம் அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தது.

தானே கொடுமையின் வேதனை அறிந்து கடலூர் பகுதிகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு, வாழ்வாதாரத்தைத் தொலைத்துவிட்டு அல்லாடும் விவசாயிகளின் நிலையை நினைத்து நான் தவித்திருந்த நேரம். அப்போது விகடன் பத்திரிகை ஓவியக் கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்து, தானே நிவாரணத்துக்காக முயற்சி எடுத்தது. நிறைய ஓவியர்களின் வரைபடங்களைச் சிறு புத்தகத்தில் தயாரித்து பலருக்கும் அனுப்பியிருந்தார்கள். அந்தப் புத்தகத்தைப் புரட்டிய சில நிமிடங்களிலேயே அதிலிருந்த நடனம் அவர்களின் ஓவியத்தைத் தேர்வு செய்து முன்பதிவு செய்தேன்.

நான் அந்த ஓவியத்தை நேரடியாக வாங்கச் சென்றபோது தகவல் தெரிந்து எனக்காக முன்கூட்டியே அங்கே காத்திருந்தார் நடனம். கைகுலுக்கி நன்றி சொன்னார். நல்ல விலை என்பதாலோ, சினிமாக்காரன் ஒருவன் வாங்குகிறான் என்றோ அவர் சிலிர்க்கவில்லை. “வெற்றியின் அடையாளமாக, டீம் வொர்க்கின் வெளிப்பாடாக இருக்கிற இந்த ஓவியத்தைச் சரியாகத் தேர்ந்தெடுத்து இருக்கீங்க. ஓவியத்தின் நோக்கத்தை உடனே அறிகிற நுணுக்கம்தான் நல்ல ரசிகர்களின் வெளிப்பாடு” என்றார் பெருமிதமாக.

அடுத்த சில தினங்களில் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அவருடைய ஓவிய அலுவலகத்துக்கு அழைத்திருந்தார். மிகப் பெரிய அளவுக்கு, நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய அவருடைய ஓவியங்களை ஒவ்வொன்றாகக் காட்டினார். சிறுகுழந்தையாகச் சிலிர்த்தார். ஒவ்வொரு வரைவுக்குமான மெனக்கெடலைச் சொன்னார். ‘இது ஒரு வீட்டுக்கு...’, ‘இது ஒரு பிரமாண்ட ஹோட்டலுக்கு’ என்றார். சற்றே கடக்கும் ஓவியங்களுக்குப் பின்னால் இருக்கும் உயிர்க்கடின முயற்சிகளை நான் அறிந்த கணம் அது.

‘முதல்வன்’ படத்தில் அர்ஜுனின் அப்பாவாக நடித்திருந்தார் நடனம். இயல்பு மாறாத அந்த நடிப்பு மிகச் சிறப்பானது. “அப்புறம் ஏன் சார் தொடர்ந்து நடிக்கலை?” என்றேன். “உங்க படத்தில் நடிக்கிறேன் சசி” என்றார் அதே சிரிப்புடன்.

“கண்காட்சியில் வாங்கிய உங்கள் ஓவியத்தை என் அலுவலகத்தில் என் நேர்ப்பார்வையில் படும்படி எனக்கு எதிரே வைத்திருக்கிறேன் சார்” என்றேன். “எல்லோரையும் சேர்த்து ஜெயிக்கும் எண்ணத்தை அந்த ஓவியம் உங்களுக்குள் உண்டாக்கிக்கொண்டே இருக்கும் சசி” என்றார்.

‘தாரைத் தப்பட்டை’ படப்பிடிப்புக்காக நான் தஞ்சாவூர் போயிருந்தேன். அப்போது, சென்னையில் என் அலுவலகம் வளசரவாக்கத்துக்கு மாறியது. “பழைய அலுவலகத்தில் இருந்த மாதிரியே இங்கேயும் உங்களோட ஓவியம்தான் சார் இருக்கணும்” என்றேன். புது முகவரி தேடி வந்துவிட்டார்.

நடை தளர்ந்த நிலையிலும், நுழைவாயில் அருகே ஒரு இடத்தைத் தேர்வு செய்து ‘சசியின் முகத்தை வைத்தே நான் ஒரு ஓவியம் வரைந்து கொடுக்கிறேன். அதனை இங்கே வையுங்கள்” எனச் சொல்லி இருக்கிறார். அவர் சொன்ன இடத்தில் வெள்ளை அடித்து வைத்துவிட்டு, மற்ற இடங்களைத் தயார் செய்தோம்.

இடையிடையே நான் அவருக்கு போன் செய்தபோது பதிலே இல்லை. ‘ஓவிய வேலையாக இருப்பார்’ என்றெண்ணி அவர் அழைப்புக்காகக் காத்திருந்தேன். மதுரையில் இருந்தபோது அவர் எண்ணிலிருந்து கால் வந்திருந்தது. திரும்பத் தொடர்பு எடுத்தேன். “என்ன சார், என்னோட படத்துல நடிக்க எப்போ கூப்பிட்டாலும் ரெடின்னு சொன்னீங்க. ஆனா, போன்கூட அட்டென்ட் பண்ணாம இருந்துட்டீங்களே...” எனக் கேட்கத் தயாராகி, “என்ன சார்...” என்றேன். சட்டென இடைமறித்த குரல், “சார், நான் நடனம் இல்ல. அவரோட ஃபிரெண்ட். சார் காலையில் தவறிட்டார். அவரோட செல்லில் உங்க நம்பர் இருந்தது. அதான் தகவல் சொன்னேன்” என்றார்.

காலம், சில அபூர்வங்களைச் சர்வ சாதாரணமாக நம்மிடமிருந்து பிரித்துவிடுகிறது. இவர் ஏன் என்னிடம் பழகணும், ஏன் இப்படி சொல்லாமல் கொள்ளாமல் விலகணும்... என பல நினைவுகளும் படுத்தி எடுத்தன. வாழும்போது ஒருவருடைய அருமை நமக்குத் தெரியாது. ஆனால், நடனம் அவர்கள் சாகும்போதுகூட அவர் அருமையை நாம் உணரத் தவறிவிட்டோம் என்றே தோன்றுகிறது. மியூரல் ஆர்ட்டில் அவர் எத்தகைய நேர்த்தியாளர்.

இரண்டு நாட்கள் கழித்து அதே எண்ணைத் தொடர்பு கொண்டேன். சாரின் மனைவி பேசினார். என்னைப் பற்றிச் சொன்னேன். “உங்களைப் பத்தி சொல்லிக்கிட்டே இருப்பார் தம்பி. போன ஏப்ரல் மாசம் அவருக்கு அவார்டு கொடுத்தாங்க. ‘உங்க ஃப்ரெண்ட் சசி வரலையா’ன்னு கிண்டலா கேட்டேன்.

‘ஷூட்டிங்கில் கையில் அடிபட்டு காயமாகி இருக்கிறப்ப சசியை எப்படி கூப்பிட முடியும்’னு சொன்னார். சொந்தப் பிள்ளை மாதிரிதான் உங்களைப் பார்ப்பார். ‘சுந்தரபாண்டியன்’ அவருக்கு ரொம்பப் பிடிச்ச படம். ரோட்ல போறப்ப உங்க போஸ்டர் பார்த்தாகூட, கண், காது, மூக்குன்னு ஒரு ஓவியர் மனநிலையிலேயே சிலாகிப்பார்.” என்றார்.

வீட்டில் நானும் நடனம் சாரும் சேர்ந்திருக்கும் புகைப்படம் இருப்பதாகச் சொன்னார் நடனத்தின் மனைவி. என் அலுவலகத்தில் அவர் ஓவியத்துக்காக வெள்ளை அடிக்கப்பட்டு இருக்கும் சுவர் அப்படியே இருக்கிறது. வெறுமையில் நிரம்பி இருக்கிறது நடனத்தின் மிகச் சிறந்த ஓவியம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in