

கலை சார்ந்து இயங்குபவர்கள் பலர். சமூகம் மீதான அக்கறையோடு களப்பணி மேற்கொள்பவர்கள் அனேகம். அறிவியல், தொழில்நுட்ப அறிவு கொண்டவர்கள் வேறோரு தளத்தில் இயங்குகின்றனர். இலக்கிய ஆர்வம் கொண்டவர்கள் சிலர். ஆனால் மேற்சொன்ன அனைத்துத் தளங்களிலும் ஆர்வமாய் இயங்கி வருபவர்கள் வெகு சிலரே. அதில் முக்கியமானவர் நீச்சல்காரன்.
அறியாமையென்னும் பெருங்கடலைக் கடக்கும் ஒரு விடலை. ட்விட்டர் தானியங்கியின் கொத்தனார். இதுதான் நீச்சல்காரனின் சுய அறிமுகம்.
தன்னார்வலப் பங்களிப்பாக விக்கிப்பீடியாவில் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். கணிப்பொறி சார்ந்த சந்தேகங்கள், விளக்கங்கள், தகவல்களை விளக்கும் "மானிட்டர் உலகம்" என்ற புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்.
"புதிய பதிவர்கள் ட்விட்டர் தளத்தில் நல்ல கீச்சுகளை எழுதினாலும் பெருவாரியான கவனிப்புக் கிடைப்பதில்லை. அதே நேரம் நல்ல வாசகருக்கு நல்ல கீச்சுகளைப் படிக்கும் வாய்ப்பும் கிடைப்பதில்லை. அதற்குச் சிறு தீர்வாக தானியங்கி ஒன்றை கூகிள் ஆப்ஸ் ஸ்கிரிப்ட் கொண்டு வடிவமைத்திருக்கிறேன்" என்று கூறும் நீச்சல்காரன், அதை நிர்வகித்தும் வருகிறார்.
இத்தானியங்கி ஏறக்குறைய பெரும்பாலான தமிழ்க் கீச்சுகளைப் படித்து, சுய தரமதிப்பீட்டில் பிரபலமான கீச்சுகளை மறுகீச்சு செய்கிறது. அதிகப் பயனர்கள் விரும்பும் கீச்சுகளை எடுத்து செயற்கை நுண்ணறிவு மூலம் நல்ல கீச்சைத் தீர்மானிக்கிறது. பார்க்க| >ட்விட்டர் தானியங்கி |
திண்ணை, வல்லமை, சொல்வனம், சிறகு, அதீதம், தமிழோவியம், வார்ப்பு, கீற்று, தமிழ் இந்து, முத்து கமலம் போன்ற இணைய இதழ்களில் எழுதியிருக்கிறார்.
இவரின் சமூகம் சார்ந்த பதிவுகள் "முத்துக்குளியல்" என்னும் தலைப்பில் வெளிவருகின்றன. இன்றைய அரசியல் வாழ்க்கையில் எம்.பி.க்களின் அனுகூலங்கள் என்னென்ன என்று கூறுபவர், விளம்பரங்களுக்கு நாம் விலை போகும் மாயை பற்றியும் எழுதுகிறார். வாசிக்க | >விளம்பரங்களுக்கு விலை போகிறோம் |
இவரின் கதை, கவிதை போன்ற படைப்புகளை, "மணல்வீடு" என்னும் பெயரில் கட்டிவரும் நீச்சல்காரன்,
"கற்பூரத்தை சர்க்கரை என
நிரூபிக்கச் சொன்ன பொய்கள்தான்
அதை காற்றிலே கரைத்துவிட்டது"
என்று சலனக்குறிப்புகளும் எழுதுகிறார். வாசிக்க | >சலனக் குறிப்புகள் |
வளர்ந்துவரும் தமிழ் இணைய உலகில், தன் தகவல்களோடு "எதிர்நீச்சல்" போட்டுக்கொண்டே "இன்டர்நெட்டின் ரகசியங்கள்" என்னும் இணைய தொடரை எழுதிவருகிறார்.
இதுமட்டுமல்லாமல் சின்னச்சின்னதாய் சுவாரசியம் நிறைந்த குறுஞ்செயலிகளை உருவாக்கியிருக்கிறார் நீச்சல்காரன்.
'>கோலசுரபி' என்னும் கோலம் வரைய உதவும் செயலி, '>மென்கோலம்' என்னும் மெய்நிகர் பல்குறியீட்டுத் தமிழ் எழுதி, '>ஆடுபுலி ஆட்டம்' ஆட உதவும் செயலி ஆகியவற்றை உருவாக்கி இருக்கிறார்.
காகிதத்தில் நாம் எழுதி விளையாடும் குறுக்கெழுத்துப் போட்டியின் பாதிப்பில் உருவான '>புதிர்ப்பட்டறை' தமிழ்ச்சொற்புதிர் செயலி, நாம் எழுதிய பதிவுகளின் திருட்டைத் தவிர்க்க உதவும் 'பூட்டுப்பட்டறை செயலி' மற்றும் பல குறுஞ்செயலிகளை உருவாக்கியுள்ளார்.
ஆக, எண்ணத்தின் விளைச்சலாகவும், எழுத்துக்களின் விளைச்சலாகவும் திகழும் நீச்சல்காரன் வலைதளம் தகவல், விளையாட்டு, தொழில்நுட்பம், இணையம், இலக்கியத் திரட்டுகளை உள்ளடக்கிய களஞ்சியம்.
நீச்சல்காரனின் வலைதள முகவரி: >http://www.neechalkaran.com/
முந்தைய அத்தியாயம்- >நெட்டெழுத்து: இணையத் தமிழில் தன்னம்பிக்கைப் பாடங்கள்
| நீங்கள் வாசித்து வரும் நல்ல வலைப்பதிவு, ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களைப் பரிந்துரைக்க ramaniprabhadevi.s@thehindutamil.co.in என்ற மின்னஞ்சலுக்கு இணைப்புகளை அனுப்பலாமே! |