Published : 13 May 2015 08:15 PM
Last Updated : 13 May 2015 08:15 PM

யூடியூப் பகிர்வு: கதறவைக்கும் தெருநாய் பிழைப்பு!

"சை, என்னடா இது, எப்பப் பார்த்தாலும் நாய்ப்பொழப்பாவே இருக்கு!" என்று அடிக்கடி புலம்புவரா நீங்கள்? என்ன காரணத்தால் இந்த வார்த்தைப் பிரயோகம் புழக்கத்துக்கு வந்திருக்கும் என்று ஒரு முறையாவது யோசித்திருப்பீர்களா?

போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் படித்தவர்களே வேலை இல்லாமல் திண்டாடும் போது, விலங்குகளின் நிலைமை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதிலும் வீட்டு விலங்குகளின் நிலை இன்னமும் மோசம். காடுகளில் வாழ்ந்து தன் அன்றாடத் தேவைகளை அங்கேயே பூர்த்தி செய்துகொள்ளும் மற்ற விலங்குகளைப் போலில்லை இவற்றின் நிலைமை.

முக்கியமாய் நாய்கள். வீட்டு நாய்கள், வளர்க்கப்பட்ட வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டும், தெருநாய்கள் அங்கேயே பிறந்து, வளர்ந்து, பிரசவித்து, வாழ்ந்து, அடிபட்டு இறந்தும் போவது பழகிப்போய் விட்டது.

நீங்கள் ஒரு நாளாவது தெருவில் வாழும் வாழ்க்கையைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா? வேண்டாம் கற்பனையாவது செய்திருக்கிறீர்களா? சிறுவர்களில் தொடங்கி வண்டிகள், குடிகாரர்கள், பொது மக்கள், போலீஸ்காரர், ஏன் சக நாய்களே, ஒரு தெருநாயை என்னவெல்லாம் செய்கிறார்கள்?

சூரியன் உதயமாவதில் இருந்து மறையும் வரைக்குமான ஒற்றை நாளிலேயே உணவுக்கும், வாழ்வுக்குமாய் இந்த நாய் படும்பாட்டைப் பாருங்கள். மும்பையை மையமாகக் கொண்ட சர்வதேச பிராணிகள் நல மற்றும் தத்தெடுப்பு வாரியத்தால் உருவாக்கப்பட்ட இக்காணொளியைப் பார்த்தால் கண்ணில் படும் நாய்களையெல்லாம் கல்லால் அடிக்கத் தோன்றாது; கையில் எடுத்து வாரியணைக்கத் தோன்றும்.