

# சென்னை திருவல்லிக்கேணியில் (1935) பிறந்தார். இயற்பெயர் ரங்கராஜன். ஸ்ரீரங்கத்தில் தாத்தா - பாட்டியிடம் வளர்ந்தார். ஸ்ரீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்த பிறகு, திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலில் பட்டம் பெற்றார்.
# குரோம்பேட்டை எம்.ஐ.டி.யில் பி.இ. (மின்னணுவியல்) பயின்றார். விமானப் போக்குவரத்துத் துறையில் 14 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், பெங்களூர் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் ரேடார் ஆய்வுப் பிரிவு உட்பட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். அதன் பொது மேலாளராக உயர்ந்தார்.
# இவரது முதல் கதை 1953-ல் சிவாஜி என்ற பத்திரிகையில் வெளிவந்தது. 1962-ல் ‘இடது ஓரத்தில்’ என்ற சிறுகதை குமுதம் இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. குமுதம் ரா.கி.ரங்கராஜனுடன் பெயர் குழப்பத்தை தவிர்க்க, தன் மனைவி சுஜாதாவின் பெயரில் எழுதினார். கணையாழி இதழில் கடைசிப் பக்கங்கள் என்ற தொடரை ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்ற பெயரில் எழுதினார்.
# இலக்கியம், நாட்டார் வழக்காறு, தமிழ்ச் செவ்விலக்கியம், துப்பறியும் கதைகள், அறிவியல் கதைகள், சிறுகதை, புதினம், குறும் புதினம், நாடகம், திரைப்படம், கணிப்பொறியியல், இசை என பல துறைகளிலும் முத்திரை பதித்தார். காயத்ரி, கரையெல்லாம் செண்பகப்பூ, ப்ரியா உள்ளிட்ட இவரது பல நாவல்களைத் தழுவி திரைப்படங்கள் வந்துள்ளன.
# அறிவியல், தொழில்நுட்பத் தமிழுக்கு இவரது பங்களிப்பு முக்கியமானது. ஜூனியர் விகடனில் ‘ஏன் எதற்கு எப்படி?’ என்ற பெயரில் வெளிவந்த இவரது கேள்வி-பதில் பகுதி மிகவும் பிரசித்தம். வாசகர்களின் சிக்கலான அறிவியல் கேள்விகளுக்கு நகைச்சுவையுடன் எளிமையாக பதில் கூறுவார். மூளையின் செயல்பாடு குறித்து இவர் எழுதிய ‘தலைமைச் செயலகம்’ மிகச் சிறந்த அறிவியல் நூல்.
# பாட்டியுடன் ஸ்ரீரங்கத்தில் கழித்த இளமைக் கால நினைவுகளை ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்’ என்ற தலைப்பில் சுவாரஸ்யமாகப் பதிவுசெய்தார். ‘கற்றதும் பெற்றதும்’, ‘கடவுள் இருக்கிறாரா’ ஆகிய கட்டுரைத் தொகுப்புகளும் பிரபலமானவை. பல கவிதைகள் எழுதியுள்ளார்.
# இவரது அறிவியல் புனைகதைகளான ‘என் இனிய இயந்திரா’, ‘மீண்டும் ஜீனோ’ ஆகியவை பெரும் வரவேற்பைப் பெற்றன. ரோஜா, இந்தியன், முதல்வன், ஆய்த எழுத்து உட்பட பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.
# அறிவியலை ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களிடம் கொண்டுசென்றதற்காக தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் 1993-ல் இவருக்கு விருது வழங்கி கவுரவித்தது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை உருவாக்கியதில் முக்கியப் பங்காற்றினார். அதற்காக இவருக்கு ‘வாஸ்விக்’ விருது வழங்கப்பட்டது. எழுத்துப் பணிக்காக ‘கலைமாமணி’ விருது பெற்றார்.
# நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்கள், 250 சிறுகதைகள், 10 அறிவியல் நூல்கள், 10 நாடகங்கள், கவிதை நூல் ஆகியவற்றைப் படைத்துள்ளார்.
# எழுத்துலக ஜாம்பவான் என்று புகழப்பட்ட ‘சுஜாதா’ ரங்கராஜன் 73 வயதில் (2008) மறைந்தார்.
- ராஜலட்சுமி சிவலிங்கம்