

பிரெஞ்சு இயற்பியலாளரும், கதிரியக்கக் கண்டுபிடிப்புகளின் முன்னோடிகளில் ஒருவருமான பியரி கியூரி (Pierre Curie) பிறந்த தினம் இன்று (மே 15). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l பாரிஸில் பிறந்தவர் (1859). தந்தை பொதுநல மருத்துவர். வீட்டிலேயே அப்பாவிடம் ஆரம்பக் கல்வி பயின்றார். 16 வயதில் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 18 வயதில் அமெரிக்காவில் முதுகலைப் பட்டத்துக்கு நிகரான பட்டம் பெற்றார்.
l 21-வது வயதில் தன் சகோதரருடன் இணைந்து அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இருவரும் அழுத்த மின் விளைவைக் (Piezo Electric Effect) கண்டறிந்தனர்.
l சார்பொன் (Sorbonne) கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். பிறகு அக்கல்லூரியின் இயற்பியல் ஆய்வுக்கூடத் தலைவராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். பியூசோ மின் குவார்ட்ஸ் மின்னோட்டமானியை உருவாக்கினர். மைக்ரோபோன், குவார்ட்ஸ் கடிகாரங்கள், மின் கருவிகள் பலவற்றிலும் இத்தத்துவம் பயன்பட்டது.
l முனைவர் பட்டம் பெறும் முன் காந்த குணங்களைக் கண்டறிவதற்காக இவர் டார்சன் பேலன்ஸ் (Torsion Balance) ஒன்றை உருவாக்கினார். முனைவர் பட்டத்துக்காக காந்தத்தால் தீவிரமாக பாதிக்கப்படும், ஓரளவு பாதிக்கப்படும் மற்றும் பாதிக்கப்படாத பொருள்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார். காந்தப் பொருள்கள் வெப்பத்தால் அடையும் மாற்றம் பற்றி இவர் கண்டறிந்த விதிமுறை ‘கியூரி விதி’ என்று குறிப்பிடப்படுகிறது.
l வெப்ப நிலை அதிகமாகும்போது இரும்புக் காந்தப் பொருள்கள் காந்தத்தன்மையை இழந்துவிடுகின்றன என்பதையும் இவர் கண்டறிந்தார். இந்த வெப்ப நிலை கியூரி பாயின்ட் எனப்படுகிறது. தன் மனைவி மேரி கியூரியுடன் இணைந்து ரேடியம் மற்றும் பொலோனியம் தனிமங்களைப் பிரித்தெடுப்பதில் வெற்றி கண்டனர். கதிரியக்கம் (Radioactivity) என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியது இவர்கள்தாம்.
l இருவரும் கதிரியக்கத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளையும் ஆய்வு செய்து அறிவித்தனர். கதிரியக்கத்தைக் கண்டறிந்தமைக்காக 1903-ல் ஹென்றி பெக்கெரல், மேரி கியூரியுடன் சேர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார்.
l மேரியின் முனைவர் பட்டத்துக்குரிய ஆய்வுகளுக்கு இவர் வடிவமைத்த படிக மின் அழுத்தமானி பயன்பட்டது. பியரியும் அவருடைய மாணவரும் அணுக்கரு ஆற்றல் குறித்த முதல் கண்டுபிடிப்பை வெளியிட்டனர். கதிரியக்கத் தன்மையுடைய பொருள்களிலிருந்து கதிரியக்கம் வெளியேறுவதையும் முதன் முதலில் கண்டறிந்தனர்.
l காந்தப் புலங்களைப் பயன்படுத்தி இவ்வாறு வெளியேறிய துகள்களில் சில நேர் மின்தன்மை உடையன என்றும் சில எதிர் மின்தன்மை உடையன என்றும், சில நடுநிலைத்தன்மை உடையன என்பதையும் கண்டறிந்தனர். இவையே ஆல்பா கதிர்கள், பீட்டா கதிர்கள், காமா கதிர்கள் என்று குறிப்பிடப்பட்டன.
l கதிரியக்கத்தை அளக்கப் பயன்படும் அலகு ‘கியூரி அலகு’ என்று குறிப்பிடப்பட்டது. இவர்களின் மூத்த மகளும் அவரது கணவரும்கூட நோபல் பரிசு வென்றவர்கள். இவரது குடும்பம் நோபல் பரிசுக் குடும்பம் என்று புகழ்பெற்றது. கதிரியக்கக் கண்டுபிடிப்பு களின் முன்னோடிகளுள் ஒருவர் என்று இவர் புகழ்பெற்றார்.
l மனிதகுல மேம்பாட்டுக்கான பல உன்னதமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவருமான பியரி கியூரி, 1906-ம் ஆண்டில் 47-வது வயதில் சாலை விபத்தில் மரணமடைந்தார். கியூரி தம்பதியினரைப் பெருமைபடுத்தும் விதமாகப் பல அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன.