Last Updated : 31 Mar, 2015 06:43 PM

 

Published : 31 Mar 2015 06:43 PM
Last Updated : 31 Mar 2015 06:43 PM

ட்வீட்டாம்லேட்: தீபிகாவின் விருப்பங்களும் எதிர்வினை தெறிப்புகளும்!

பிரபல பாலிவுட் நடிகை தீபிகோ படுகோனை முன்வைத்து முற்போக்கான பெண்ணிய சிந்தனை எனக் கருதப்படும் வாசகங்களைத் தாங்கிய வண்ணம் உருவாக்கப்பட்டிருக்கிறது 'எனது விருப்பம்' (My choice) குறும்படம்.

2 நிமிடங்களே கொண்ட அந்தக் குறும்படத்தில் பல்வேறு துறைகளில் சாதித்து புதுமை படைத்த பெண்கள் தங்களது விருப்பம் என்ன, எதில் இருக்கிறது... எதில் இல்லை என்பதை வெளிப்படுத்துகின்றனர்.

பெண் என்பவள், அவள் அணியும் உடை - அவளது உடல்வாகை பொறுத்து முடிவு செய்யப்பட வேண்டியவள் இல்லை. அவளது திருமண பந்தத்தை முடிவு செய்யும் உரிமை, அவளது ஒட்டுமொத்த விருப்பம், உடல் சார்ந்த உறவை முடிவு செய்வது, அதிலிருந்து எப்போது வேண்டுமானாலும் வெளியேறும் உரிமை, உறவு சார்ந்த விருப்பத்தை தீர்மானிப்பது, யாரையும் சாராமல் சொந்தக் காலில் நிற்பது உள்ளிட்ட பல கண்ணோட்டங்களில் சமகால பெண்ணியத்தின் தேவையைச் சொல்வதாக அமைந்திருக்கிறது அந்த குறும்படம்.

ஒரு நடிகைக்கு என்பதற்கு அப்பாற்பட்டு, தீபிகா இதற்கு முன்பும்கூட தனது உரிமை குறித்து தைரியமாகவும் பகிரங்கமாகவும் தீபிகா பேசியிருக்கிறார்.

இப்போது, மீண்டும் ஒருமுறை அனல் தெறிக்கும் கருத்துக்களுடன் தீபிகாவை முன்னிறுத்தி வெளியாகி இருக்கும் 'மை சாய்ஸ்' குறும்படம், அதே பெயருடனான ஹேஷ்டேக் உடன் #MyChoice என, ட்விட்டரில் விவாதப் பொருள் ஆகியிருக்கிறது.

ஹொமி அதாஜானியா இயக்கத்தில் பெண்கள் ஃபேஷன் இதழ்களில் ஒன்றான 'தி வோக்' வெளியிட்டுள்ள இந்தக் குறும்படத்தில் உள்ள முக்கிய அம்சங்களை மேற்கோள்காட்டி, ட்விட்டரில் மணிக்கு நூற்றுக்கணக்கான குறும்பதிவுகள் கொட்டடுப்பட்டு வருகின்றன.

'ட்வீட்டாம்லேட்' எனும் இந்தப் புதிய தொடரின் முதல் ட்விட்டர் பேசுபொருளாகவும் அமைந்திருக்கிறது இந்த விவகாரம்.

தீபிகோ படுகோனை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோவில், அவரைத் தாண்டி பல தரப்ப்பட்ட துறைகளில் சாதித்த பெண்கள் தங்களது விருப்பம் என்ன என்பதை வெளிப்படுத்துகின்றனர். ஆனால், இந்த முயற்சியில் கொண்டிருக்கும் முற்போக்கான பெண்ணிய வாசகங்களை சிலர் ஏற்றுக் கொண்டாலும், சமூக வலைதளங்களில் பலர் இதனை எதிர்க்கவே செய்கின்றனர். முக்கியமாக இளைஞர்கள்.

பெண்ணியம் அல்லது பெண் உரிமை என்ற கோட்பாட்டில் கல்வி உரிமை, சம வாய்ப்புகள் போல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டிய இந்த நேரத்தில், உதாரணமாக திருமண பந்தத்தைத் தாண்டிய உறவு போன்ற விஷயங்களை முன்னிறுத்தி தீபிகா அண்ட் கோ பெண்ணியம் பேசியிருப்பதை கடுமையாக எதிர்க்கின்றனர்.

ட்விட்டர், யூடியூப், ஃபேஸ்புக் என சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினர் மாற்றுக் கருத்துக்களை இந்த விவகாரத்தில் தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...

பிர்மி போடோ ( @Phirmi_Bodo): திருமணம் ஆகாமலே நான் குழந்தை பெறப் போகிறேன். ஏனென்றால் அது 'எனது விருப்பம்' என்று நான் கூறினால், என்னை வீட்டை விட்டு துரத்தி அடிப்பார் என் அம்மா. ஏனென்றால் அது அவரது 'உரிமை'.

சைத்தான் கோப்தி (‏@shaitaankhopdi): தீபிகா பெண்ணியவாதியாக இருக்க நினைக்கவில்லை. பிரபலமாக இருக்கவே அவ்வப்போது இப்படி பேசுகிறார்.

அய்மா (‏@_AimA): ஆண் ஏமாற்றினால், அவரை மனிதத் தன்மை அற்ற மிருகம் என்பீர்கள். அதையே பெண் செய்தால், பெண் உரிமை என்று புகழ்வீர்களா? எவ்வளவு வேண்டுமானாலும் தவறு செய்யுங்கள். ஆனால் அதனை நியாயப்படுத்த நினைக்காதீர்கள்.

ப்ரியங்கா (‏@Priyalives): பெண்களே! மை சாய்ஸ் வீடியோவை பொறுத்தவரை நாம் ஆண்களின் பக்கம் தான் பேச வேண்டும். இந்த வீடியோ முற்றிலும் நியாயமற்ற அளவிலும் ஒருதலைபட்சமாகவும் உள்ளது.

சுவாமி (Swami ‏@mohitraj): மன்னியுங்கள் தீபிகா!

காதல் மற்றும் காமம்

நம்பிக்கை மற்றும் சுயநலம்

பாசாங்கு மற்றும் உண்மை

முட்டாள்தனம் மற்றும் சுதந்திரம். இவை அனைத்துக்கும் வித்தியாசம் தெரியாத கருத்து மட்டுமே இந்த வீடியோவில் உள்ளது.

எக்தா ஷேத் (‏@EktaCutie): ஒரு விஷயத்தில் கருத்து, சிந்தனை, முடிவு அல்லது யதார்த்தம் அனைத்தையும் வெளியிட உரிமை உள்ளது. அவர் விருப்பத்தை தெரிவித்திருப்பது அவரது உரிமை.

கவுரவ் (@DeepikaP_Lover): தீபிகா மீதான வெறுப்புணர்வு இங்கு அதிகமாகி கொண்டிருக்கிறது. இந்த வீடியோவுக்கு வரும் பின்னூட்டங்களிலுருந்து பெண்களுக்கு இவர்கள் தரும் மரியாதை விளங்கிவிட்டது.

மதுமிதா: 'விருப்பம்' இந்த வார்த்தைக்கான அர்த்தத்தை புரிந்துகொள்ளுங்கள்... 'விருப்பம்' என்று இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ள அனைத்துமே புதிய சட்டம் ஒன்றும் இல்லை. அந்த சட்டத்தை 'தி வோக்', தீபிகா அல்லது அதாஜானியா விதிக்கவில்லை, செய்யக் கூறி திணிக்கவில்லை. இது வெறும் விருப்பமே தவிர இதனை கண்மூடித்தனமாக பின்பற்றத் தேவையில்லை. யாரையும் நீங்கள் யூகிக்க வேண்டாம் என்பதே வீடியோவில் சொல்லப்பட்டிருக்கிறது.

தெளிவான கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களுக்கு மட்டுமே இது புரியும். இதையும் நீங்கள் புரிந்துகொள்ள மறுத்தாலோ அல்லது யூகித்து கொண்டே இருந்தாலும் அது உங்களது 'விருப்பம்'.

சபிஸ்தா கான்: பெண்களின் உரிமை குறித்த இந்த வீடியோ பாராட்டப்பட வேண்டியது. திருமணத்துக்கு பின்னர், ஆண் வேறு பெண்ணை தேடிச் சென்றால் தவறாக குறிப்பிடாதச் சமூகம் பெண்ணை கட்டுப்படுத்த முயற்சிப்பது சரியான வாதம் இல்லை. ஆனாலும் இந்த வீடியோவில் கூறப்படும் 'என் விருப்பம்' சார்ந்த தன்மை சற்று மேலோட்டமாகவும் பாசாங்காகவுமே கூறப்பட்டுள்ளது.

அக்‌ஷர் எச்.பி. : அது அவரது உரிமை. அவரது விருப்பம். இதில் தவறு எதுவும் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x