

இரண்டாம் உலகப் போரில் மேற்கொள்ளப்பட்ட தந்திரங்களில் ஒன்று இது. ஜெர்மனியின் நாஜிப் படைகள் முகாமிட்டிருக்கும் சிசிலியைத் தாக்கிக் கைப்பற்ற பிரிட்டன் தலைமையிலான நேச நாடுகள் திட்டமிட்டன.
சிசிலியிலிருந்து நாஜிப் படைகளை வெளியேற்ற வேண்டும் என்பது திட்டம். இதற்காக, கற்பனைசெய்து பார்க்க முடியாத அளவுக்கு விரிவான தந்திரத்தைக் கையாண்டார் பிரிட்டன் ராணுவ உளவுத் துறை அதிகாரி எவான் எட்வர்டு மாண்டேகு. அவருடன் இணைந்து இந்தத் திட்டத்தை நிறைவேற்றியவர் சார்லஸ் சால்மாண்டலி.
இறந்த உடல் ஒன்றுக்கு பிரிட்டன் ராணுவ அதிகாரியைப் போல் உடை அணிவித்து, கையில் ஒரு பிரீஃப்கேஸையும் சங்கிலியால் பிணைத்துவைத்து ஸ்பெயின் அருகே கடலில் மிதக்க விடுவது என்று திட்டமிடப்பட்டது.
கிரேக்கத்தையும், இத்தாலிக்குச் சொந்தமான தீவான சார்டினியாவையும் தாக்க நேச நாடுகள் திட்டமிட்டிருப்பது தொடர்பான ஆவணங்கள் பிரீப்கேஸில் வேண்டுமென்றே வைக்கப்பட்டன. இதைப் படிக்கும் நாஜிக்கள் இதை உண்மையென்று நம்பி, சிசிலியை விட்டு வெளியேறி கிரேக்கத்திலும் சார்டினியாவிலும் முகாமிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
திட்டமிட்டபடி 1943 ஏப்ரல் 30-ல் கடற்படை அதிகாரி `மேஜர் மார்ட்டின்’ என்ற பெயருடன் பிரிட்டன் ராணுவ உடை அணிந்த உடல் ஒன்று ஸ்பெயின் கடற்கரையோரம் கடலில் மிதக்க விடப்பட்டது. எதிர்பார்த்ததுபோல், நாஜிப் படைகள் அந்த உடலைக் ‘கைப்பற்றின’.
உடனடியாகத் தகவல் மேலிடத்துக்கு அனுப்பப்பட்டது. நேச நாடுகளைச் சமாளிக்க கிரேக்கம் மற்றும் சார்டினியாவில் படைகளைக் குவிக்க நாஜிப் படையினர் முடிவெடுத்தனர். சிசிலியிலிருந்து கணிசமான படைகள் வெளியேறத் தொடங்கின.
இரண்டு மாதங்கள் காத்திருந்த நேச நாடுகளின் படைகள் ஜூலை மாதம் சிசிலியை ஊடுருவின. ‘ஆபரேஷன் மின்ஸ்மீட்’ என்று அழைக்கப்படும் இந்தத் தந்திர நடவடிக்கை, இரண்டாம் உலகப் போர் வரலாற்றில் வெற்றிகரமாக நிறைவேறிய தந்திரம்.
இந்தச் சம்பவத்தை ‘தி மேன் ஹூ நெவர் வாஸ்’ எனும் பெயரில் 1953-ல் புத்தகமாக எழுதினார் எட்வர்டு மாண்டேகு. 3 ஆண்டுகள் கழித்து இதே பெயரில் வெளியான திரைப்படம் 1956-ன் கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
சரி, ‘மேஜர் மார்ட்டி’னாக நடித்த உடல் யாருடையது? கிளின்ட்வர் மைக்கேல் எனும் அநாதைப் பிணத்தைப் பயன் படுத்திக்கொண்டது பிரிட்டன் உளவுத் துறை.