கடற்கரையில் அலைகள் ஓயாமல் ஓடிக்கொண்டே இருக்கின்றன. ஒருவர் ''சிநேகிதி, புன்னகை எங்கே, நெஞ்சு கொண்ட கனவுகள் எங்கே" பாடலைப் பாடுகிறார். | குறும்பட இணைப்பு கீழே |
அதிகாலையில் அடித்த அலாரத்தை அணைத்த குடும்பத் தலைவி ஒருவர் சிரமப்பட்டு எழுந்திருக்கிறார். தன் மேலே கையை போட்டு உறங்கிக் கொண்டிருந்த பெண் குழந்தை சிணுங்க, அலுங்காமல் கையை கீழே எடுத்து வைப்பவர் குளித்து முடித்து துளசிச் செடியை வணங்குகிறாள்.
வழக்கமாகிப் போன வீட்டு வேலைகளை மளமளவெனத் தொடங்கி, சமையலை ஆரம்பிப்பவர், சண்டையிடும் தன் இரண்டு குழந்தைகளைச் சமாதானம் செய்ய முனைகிறார். ஒரு வழியாய்க் குளிக்க அவர்களை அனுப்பிவிட்டு நிமிர்ந்து பார்த்தால் அணிந்திருக்கும் வெள்ளைச் சுரிதாரின் மார்புப் பகுதியில் பொட்டுகளாய் ரத்தத் துளிகள்.
அதிர்ந்து போய், கவலையோடு அதனை நோக்குபவரின் கவனம் கலைக்கிறது சமையலறையில் இருந்து வரும் விசிலின் ஒலி. துரிதமாய்ச் சமைத்து முடித்து, தன் குழந்தைகளைப் பள்ளிக்கு கிளப்பும் அவர், அலுவலகப் பிரச்சினையால் அலைபேசியில் கோபப்பட்டுக் கத்தும் தன் கணவனையும் சமாதானம் செய்கிறார். ரத்தப்பொட்டுகளைப் பார்த்து என்னவென்று கேட்கும் கணவனிடம் துப்பட்டாவை இழுத்து, ஒற்றைச் சிரிப்புடன் ஒன்றுமில்லை என்கிறார்.
எல்லோரையும் அனுப்பிவிட்டு ஓய்வாய் அமர்ந்து புத்தகம் ஒன்றைப் படிப்பவர், அதில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுக் கட்டுரையை யோசனையோடு படிக்கிறார். நிறையக் கொட்டுகின்ற முடிகளும், மார்பகத்தில் தெரிகின்ற மாறுதலும் அவருக்குள் எதையோ உணரச் செய்கின்றன. பயத்தில் அப்படியே சிலையாய் அமர்ந்திருப்பவரை ஓடி வந்து அணைக்கின்றனர் பள்ளி முடிந்து வீடு வந்த பிள்ளைகள்.
சட்டெனத் தெளிந்து, அவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து, சேர்ந்து விளையாடி, நடனம் கற்றுக் கொடுக்கிறார். இரவானதும், குழந்தைகளுக்கு உணவூட்டி உறங்கச் செல்கிறார்.
அதன் பின் சில அதிர்ச்சி நிகழ்வுகள், திடுக்கிட்ட அவருக்கு என்னதான் ஆனது?
பார்க்க மட்டுமல்ல... பகிரவும் தகுந்த வீடியோ பதிவு:

மார்பகப் புற்றுநோய்க்கான உரிய விழிப்புணர்வைத் தரும் வகையில் எடுக்கப்பட்டிருக்கும் இக்குறும்படத்தில், மார்பகப் புற்றுநோய் குறித்த ஆறு முக்கிய அறிகுறிகள் பட்டியலிடப்பட்டுள்ளது.

அவை:

#1 மார்பத்தில் புதிதாகத் தோன்றும் கட்டி அல்லது சிறு குவியல் இருப்பது போன்ற உணர்வு.

#2 சற்றே கடினமாக மாறும் மார்பகம்

#3 மார்பகக் காம்பில் வரும் ரத்தம் / திரவம்

#4 மார்பகக் காம்பின் வடிவத்தில் ஏற்படும் மாறுபாடு

#5 மார்பகத்தைச் சுற்றியுள்ள தோலின் பகுதிகளில் ஏற்படும் மாற்றம்

#6 அக்குள்களிலும், மடிப்புகளிலும் வரத் தொடங்கும் கட்டிகள், வீக்கங்கள்.