அவர் சிந்தனைகள் தொடர்ந்தால் போதும்: சாருஹாசன்

அவர் சிந்தனைகள் தொடர்ந்தால் போதும்: சாருஹாசன்
Updated on
1 min read

திரு ஜெயகாந்தன் மறைந்தது பற்றி செய்தி கண்டேன். உண்மையில் அறிவில் அவர் கடைநிலை சீடனாக இருந்தாலும் ஆள்வார்பேட்டை மடத்தில் அவருடன் தொடர்ந்து பங்கு கொண்டவன்.

கடைசியில் அவர் மேற்பார்வையில் தயாரித்த “எத்தனை கோணம் எத்தனை பார்வை?” என்ற படத்தில் முதன்மை பாத்திரத்தில் ஒரு சங்கீத வித்துவானாக அவருடைய வசனங்களையெல்லாம் ரசித்து மென்று நடித்தவன்...

சமீபத்தில் 3 மாதங்களுக்கு முன் எங்கள் இருவருக்கும் பொது நண்பரான ஆட்டோ செல்வராஜ் மூலமாக அவர் இருந்த வீட்டுக்குச் சென்று பார்த்தேன். அவர் என்னை பார்த்து சிரித்தாரே ஒழிய பேசவில்லை. அதற்குமுன் அவர் பேசுவதை நான் கேட்டு ரசித்தவன் அன்று நான் தொடர்ந்து பேசினேன். அவர் சிரித்தார்! ரசித்தாரா தெரியாது.

நானோ...கடவுள், ஆத்மா, மோட்சம், நரகம் இவையெல்லாம் தெரியாதவன். மரணம் பற்றி ஓரளவு தெரியும். ஜெயகாந்தனுக்கு வந்தது அடுத்து எனக்கும் வரும். அதில் ஒரு பெருமை. அவர் சிந்தனைகளில் சில துணுக்குகள் என்னுள்ளும் இருந்து மறையும். அவர் சிந்தனைகள் தொடர்ந்தால் போதும்.

- சாருஹாசன்,நடிகர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in