

அமெரிக்காவின் வளர்ச்சிக்காக உதிரத்தையும் உயிரையும் தந்து உழைத்த ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இன்றும்கூட வெள்ளையின அமெரிக்கர்கள் சிலரின் நிற வெறிக்கு இரையாகிக் கொண்டிருக்கிறார்கள். எனில், 60 ஆண்டுகளுக்கு முன் நிலைமை எப்படி இருந்தது என்பதை நாம் உணர முடியும். 1950-களில் நிறவெறி உச்சமடைந்திருந்தபோது, அதற்கு எதிராக அறவழியில் போராடியவர்களில் முக்கியமானவர் மார்ட்டின் லூதர் கிங் (ஜூனியர்). அமைதிக்கான நோபல் பரிசை 1964-ல் வென்றவர். அமெரிக்காவின் மிகச் சிறந்த பேச்சாளர்களில் ஒருவர். காந்தியக் கொள்கை களால் ஈர்க்கப்பட்டவர்.
1956-ல் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் நேரு, மார்ட்டின் லூதர் கிங்கை இந்தியா வருமாறு அழைத்தார். எனினும், பல்வேறு பணிகளில் இருந்த மார்ட்டின் லூதர் கிங்கால் இந்தியாவுக்கு வர முடியவில்லை. காந்தி பிறந்த பூமிக்கு வர வேண்டும் எனும் அவரது ஆசை, 1959-ல்தான் நிறைவேறியது. தனது மனைவியுடன் இந்தியாவுக்குப் பயணம் செய்தார். இந்தப் பயணம் குறித்து ‘காந்தியின் நிலத்துக்கு எனது பயணம்’ எனும் பெயரில் கட்டுரை எழுதினார்.
“நீ ஏன் இந்தியாவுக்குச் சென்று, உனது பெரும் மதிப்புக்குரிய மகாத்மா காந்தி அந்நாட்டில் செய்திருக்கும் சீர்திருத்தத்தைப் பார்க்கக் கூடாது?” என்று நண்பர்கள் தன்னிடம் கேட்டதாக அந்தக் கட்டுரையில் மார்ட்டின் லூதர் கிங் குறிப்பிட்டிருக்கிறார். அந்த அளவுக்கு மிகப் பெரும் மரியாதை காந்தி மீது அவருக்கு இருந்தது. “தனது வாழ்நாளில் மக்களை அணி திரட்டி ஒன்றிணைக்கும் திறன் கொண்ட தலைவர்களில் உலக சரித்திரத்திலேயே காந்திக்கு இணையானவர் யாரும் இல்லை” என்று அவர் குறிப்பிட்டார். இரு நாட்டுத் தூதரக அலுவலகங்கள் வாயிலாக ‘காந்தி நினைவு அறக்கட்டளை’ விடுத்த அழைப்பை ஏற்று அவர் இந்தியா வந்தார்.
பிப்ரவரி 3-ம் தேதி இரவு நியூயார்க் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அவர், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் தரையிறங்கி, 10-ம் தேதிதான் இந்தியா வந்தடைந்தார். இடையில், பனிமூட்டம் காரணமாக 2 நாட்கள் தாமதமாகிவிட்டன. தனது இந்திய வருகையின்போது பிரதமர் நேரு, குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல மாநில முதல்வர்கள் என்று ஏராளமானோர் தன்னை அன்புடன் நடத்தியதாக மார்ட்டின் லூதர் கிங் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்த மார்ட்டின் லூதர் கிங் பிப்ரவரி 18-ல் சென்னை வந்தார். இரண்டு நாள் பயணமாக கல்கத்தாவிலிருந்து தனது மனைவியுடன் சென்னை வந்த அவரை, ஆளுநரின் உதவியாளர் ஸ்ரீகுமார் மேனன், அமெரிக்கத் தூதரக அலுவலர் தாமஸ் சைமன்ஸ் ஆகியோர் வரவேற்றனர். சென்னை மக்கள் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர். மயிலாப்பூரின் ஸ்ரீனிவாச சாஸ்திரி அரங்கிலும், சென்னை பிரசிடென்ஸி கல்லூரியிலும் உரையாற்றினார் மார்ட்டின் லூதர் கிங். காந்தியின் போதனைகள் உலக அளவில் பலம் வாய்ந்தவை என்று தனது உரையில் குறிப்பிட்ட அவர், காந்தி போதித்த அகிம்சைக் கொள்கையில் தான் என்றுமே உறுதியாக இருப்பதாகக் கூறினார்.
“மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், அலபாமா மாகாணத்தின் மாண்ட்கோமரி நகரில், வெள்ளையினத்தைச் சேர்ந்த சக பயணிக்குத் தனது இருக்கையை விட்டுக்கொடுக்கவில்லை என்பதற்காகக் கருப்பினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்துக்கு எதிராகத் திரண்ட கருப்பின மக்கள், மகாத்மா காந்தி வளர்த்த அகிம்சை முறையிலேயே போராடினார்கள். ‘வெள்ளையினத்தைச் சேர்ந்தவர்களே, இப்போதும்கூட உங்களை நேசிக்கிறோம். ஆனால், உங்கள் நியாயமற்ற சட்டங்களுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்’ என்று கருப்பின மக்கள் கூறினார்கள்” என்று நெகிழ்ச்சியுடன் கிங் குறிப்பிட்டார். தனது சென்னைப் பயணம் தனக்குப் பெரு மகிழ்ச்சி தந்ததாகவும் மார்ட்டின் லூதர் கிங் நெகிழ்ந்து குறிப்பிட்டுள்ளார்.