Last Updated : 28 Apr, 2015 08:53 AM

 

Published : 28 Apr 2015 08:53 AM
Last Updated : 28 Apr 2015 08:53 AM

இன்று அன்று | 1986 ஏப்ரல் 28: செர்னோபில் விபத்து: ஒப்புக்கொண்டது சோவியத்!

இது வரை நடந்த அணு உலை விபத்துகளில் மிக மோசமான விபத்து, செர்னோபில் அணு மின்உலை விபத்து. அமெரிக்காவின் த்ரீ- மைல் தீவு அணு மின்உலையில் 1979-ல் ஏற்பட்ட விபத்துக்குப் பிறகு நடந்த அணு உலை விபத்துகளில் மிக மோச மான விபத்து இது.

அப்போது சோவியத் ஒன்றியத்தில் இருந்த உக்ரைனின் பிரிப்யாட் நகருக்கு அருகில் உள்ள செர்னோபில் நகரத்தில் இந்த அணு மின்உலை அமைந் திருந்தது. இதில் 4 அணு உலைகள் செயல்பட்டன. ஒவ்வொன்றும் 1,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் பெற்றவை. 1986 ஏப்ரல் 26 அதி காலையில் அந்த விபரீதம் நடந்தது. சரியாகத் திட்டமிடப்படாத சோதனை ஒன்றை 4-வது அணு உலையில் நடத்திக் கொண்டிருந்தபோது, விபத்து நேர்ந்தது. இதையடுத்து, மின் கட்டுப் பாட்டு அமைப்பு மற்றும் அதன் அவசர காலப் பாதுகாப்பு அமைப்பைத் தொழி லாளர்கள் மூடினர்.

பல்வேறு மனிதத் தவறுகள் இந்த விபத்துக்குக் காரணமாக இருந்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவத் தின்போது சங்கிலித் தொடர்வினை ஏற்பட்டு அணு உலையில் வெடிப்புகள் ஏற்பட்டன. இதனால் அணுக் கதிர்வீச்சு வேகமாகப் பரவத் தொடங்கியது. பாது காப்பு விதிகளை மீறி அணு உலை ஆபரேட்டர்கள் செயல்பட்டதால் விபத்து ஏற்பட்டது என்று சொல்லப்பட்டது. அணு உலையின் வடிவமைப்பில் இருந்த கோளாறே இந்த அசம்பாவிதத்துக்குக் காரணம் என்றும் ஒரு தரப்பினர் கூறு கின்றனர். தொடக்கத்தில், இப்படி ஒரு விபத்து நிகழ்ந்ததை மறைக்க சோவியத் அரசு முயன்றதாகக் குற்றம்சாட்டப் படுகிறது. எனினும், அணுக் கதிர்வீச்சு பரவுவதைச் சுட்டிக்காட்டிய ஸ்வீடனைச் சேர்ந்த கண்காணிப்பு அமைப்புகள், இது குறித்து விளக்கம் தருமாறு சோவியத் ஒன்றிய அரசை வலியுறுத்தின. இதை அடுத்து, செர்னோபில் அணு உலையில் விபத்து நடந்ததை ஏப்ரல் 28-ல் ஒப்புக்கொண்டது சோவியத் அரசு.

ஏப்ரல் 27-ல்தான், அதாவது விபத்து நடந்து ஒரு நாளுக்குப் பின்னரே பிரிப்யாட் நகரில் வசித்த 50,000-க்கும் மேற்பட்ட மக்கள் அப்புறப்படுத் தப்பட்டனர். எனினும், விபத்துபற்றி முழுமையாக அவர்களுக்குத் தெரிவிக்கப்பட வில்லை. அதற்குள் பலரது உடலில் அணுக் கதிர்வீச்சு பாதிப்பை ஏற்படுத் தியிருக்கிறது. அப்பகுதிகளில் வசித்தவர் களுக்குப் பிறக்கும் குழந்தைகள் விவரிக்க இயலாத பாதிப்புகளுடன் பிறக் கிறார்கள். உடனடி மரணம், புற்றுநோய் பாதிப்புகள் என்று லட்சக் கணக்கானோர் உயிரிழந்திருக்கிறார்கள். ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அமெரிக்கா வீசிய அணு குண்டுகளைவிட அதிக அளவில் அணுக் கதிர்வீச்சு இவ் விபத்தின் மூலம் வெளியேறியது. பெலாரஸ், ரஷ்யா, உக்ரைனில் காற்றின் மூலம் பரவிய அணுக்கதிர்கள் பிரான்ஸ் மற்றும் இத்தாலி வரை பரவின. இன்று பிப்ரியாட் மற்றும் செர்னோபில் நகரங்கள் மனிதர்கள் வாழத் தகுதியற்றவையாக இருக்கின்றன. இங்கு மனிதர்கள் வாழ் வதற்கான சூழல் ஏற்பட இன்னும் 20,000 ஆண்டுகள் ஆகும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x