இன்று அன்று | 1972 ஏப்ரல் 16 : ஜப்பானிய எழுத்தாளர் யசுனாரி கவாபட்டா மறைந்தார்

இன்று அன்று | 1972 ஏப்ரல் 16 : ஜப்பானிய எழுத்தாளர் யசுனாரி கவாபட்டா மறைந்தார்
Updated on
2 min read

ஜப்பான் இலக்கிய உலகில் மிக முக்கியமான ஆளுமை யசுனாரி கவாபட்டா. ஜப்பானின் ஒசாகா நகரில் 1899 ஜூன் 11-ல் புகழ்பெற்ற மருத்துவருக்கு மகனாகப் பிறந்த கவாபட்டா, விரைவிலேயே தனது பெற்றோரை இழந்தார். அதன் பின்னர் அவரது தாத்தா - பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார். துரதிர்ஷ்டவசமாக விரைவிலேயே அவர்களையும் இழந்தார். தனது

15-வது வயதில் நெருங்கிய உறவினர்கள் அனைவரையும் இழந்து நின்றார். ஆரம்ப காலத்துக் காதல்களும் தோல்வியிலேயே முடிவடைந்தன.

தனது 22-வது வயதில் ‘ஷொக்கோன்ஷாய் இக்கெய்’ (யாசுகுனி திருவிழாவிலிருந்து ஒரு பார்வை) எனும் முதல் சிறுகதையை எழுதினார் கவாபட்டா. டோக்கியோ பல்கலைக்கழகத்தில் படித்துக்

கொண்டிருந்தபோது, பல்கலைக்கழக இலக்கிய இதழான ‘சின்- ஷிச்சோ’வுக்குப் (புதிய எண்ணத்தின் அலை) புத்துயிர்ப்பூட்டினார். அவரது முதல் சிறுகதையும் அந்த இதழில்தான் வெளியானது. ஜப்பானிய இலக்கிய உலகில் அவரது வருகை கான் கிக்குச்சி போன்ற முக்கிய எழுத்தாளர்களின் கவனத்தை ஈர்த்தது. கவாபட்டா எழுதிய ‘டான்சிங் கேர்ள் ஆஃப் இஸு’ அவரது எழுத்துத் திறனை முழுவீச்சுடன் வெளிப்படுத்தியது.

இசைக் குழு ஒன்றில் பெரிய தாளவாத்தியம் வாசிக்கும் இளம் பெண்ணால் ஈர்க்கப்படும் மாணவன் ஒருவன், அக்குழுவைப் பின் தொடர்ந்து செல்கிறான். அக்குழுவுடனும் அப்பெண்ணுடனும் நல்ல நட்பை வளர்க்கிறான். எனினும், தான் நினைத்ததைவிட மிகவும் இளையவளாக அப்பெண் இருந்ததால் அவள் மீதான காதல் தீர்ந்துவிடுகிறது. நல்ல நண்பர்களாகப் பிரிந்துவிடுகிறார்கள் இருவரும். இப்படி அவரது முதல் கதையே தனிமை உணர்வைப் பற்றித்தான் பேசுகிறது. இக்கதையை அடிப்படையாகக் கொண்டு ஜப்பானிய மொழியில் பல திரைப்படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும் எடுக்கப் பட்டிருக்கின்றன.

பொதுவாகவே, ஜப்பானிய இலக்கியப் படைப்புகளில் தனிமையுணர்வு, தற்கொலை மனப்பான்மை அதிகம் இருந்தாலும் கவாபட்டாவின் எழுத்துகளில் அது அதிகமாக இருந்ததாக விமர்சகர்கள் கருதுகிறார்கள். ஐரோப்பிய இலக்கியத்தை டாடாயிஸம் மற்றும் எக்ஸ்பிரஷனிஸம் ஆகியவையும் அவரது எழுத்துகளில் பிரதிபலித்தன. மிக முக்கியமான ஜப்பானிய எழுத்தாளர்களின் முடிவு தற்கொலையாகத்தான் இருந்தது. அவர்களில் கவாபட்டாவும் ஒருவர்.

அவர் எழுதிய ‘ஸ்னோ கவுன்ட்டி’ எனும் நாவல்தான் ஜப்பானிய இலக்கியத்தில் மிக முக்கியமான எழுத்தாளராக அவரை அடையாளப்படுத்தியது. ஜப்பானிய மொழியின் பேரிலக்கியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஜப்பானியர்களின் வாழ்வில் மேற்கத்திய கலாச்சாரம் ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பற்றிப் பேசும் இந்நாவல், 1968-ல் அவருக்கு நோபல் பரிசு கிடைக்கக் காரணமாக இருந்த 3 படைப்புகளில் ஒன்று. (‘தி ஓல்டு கேபிடல்’ மற்றும் ‘தவுசண்ட் கிரேன்ஸ்’ ஆகிய நாவல்கள் - மற்ற இரு படைப்புகள்). இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஜப்பானிய எழுத்தாளர் கவாபட்டாதான். ‘ஸ்னோ கவுன்ட்டி’ நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த எட்வர்டு ஜார்ஜ் சீடன்ஸ்டிக்கர் ‘இந்நாவல்தான் கவாபட்டாவின் மாஸ்டர்பீஸ்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஜப்பானிய மொழியில் எழுதப்பட்ட படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்களில் மிக முக்கிய மானவர் எட்வர்டு ஜார்ஜ் சீடன்ஸ்டிக்கர். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பின்னர், கவா பட்டாவின் படைப்புகளுக்குச் சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது. அவரது மற்றொரு நாவலான ‘தி ஹவுஸ் ஆஃப் ஸ்லீப்பிங் பியூட்டி’, முதியோரின் பாலியல் இச்சை குறித்துப் பேசும் நுணுக்கமான படைப்பு. இந்நாவல் ‘தூங்கும் அழகிகள் இல்லம்’ எனும் தலைப்பில் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது (மொழி பெயர்ப்பு: லதா ராமகிருஷ்ணன்). கவாபட்டாவின் இந்த நாவலில் உந்துதல் பெற்று ‘மெமரீஸ் ஆஃப் மை மெலங்கலி வோர்ஸ்’ எனும் நாவலை எழுதினார், இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற மற்றொரு எழுத்தாளரான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்.

தனது நண்பரும் புகழ்பெற்ற எழுத்தாளருமான யுகியோ மிஷிமா 1970-ல் தற்கொலை செய்துகொண்டது கவாபட்டாவைக் கடுமையாகப் பாதித்தது. மன உளைச்சலில் இருந்த அவர், 1972 ஏப்ரல் 16-ல் தற்கொலை செய்துகொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in