Last Updated : 30 May, 2014 12:00 AM

 

Published : 30 May 2014 12:00 AM
Last Updated : 30 May 2014 12:00 AM

இறப்புச் சான்றிதழ் எதற்கு?

பிறப்புச் சான்றிதழ் தொடர்பான விஷயங்கள் அனைத்தையும் பார்த்தோம். பிறப்புச் சான்றிதழ் எந்த அளவு முக்கியமோ, அதே அளவுக்கு இறப்புச் சான்றிதழும் அவசியம். அதைப் பற்றி அறிந்துகொள்வோம்.

இறப்புச் சான்றிதழின் அவசியம் என்ன?

ஒருவரின் உயிர் இயக்கத்துக்கான அறிகுறிகள் அனைத்தும் நின்றுவிட்டதை உறுதிப்படுத்த இறப்புச் சான்றிதழ் அவசியம்.

எந்த சூழ்நிலையில் இறப்புச் சான்றிதழ் தேவைப்படும்?

சொத்து, நிலம், காவல் விசாரணை உள்ளிட்ட விவகாரங்களுக்கு இறப்புச் சான்றிதழ் தேவை.

இறப்புச் சான்றிதழை எங்கு, யாரிடம் பெறுவது?

இறப்புச் சான்றிதழை இறப்பு நிகழும் இடத்துக்கு உட்பட்ட பிறப்பு - இறப்பு பதிவாளரிடம் பெற வேண்டும். மாநகராட்சிகளில் மாநகராட்சி ஆணையரிடமும், ஊராட்சிகளில் நிர்வாக அலுவலர், சுகாதார ஆய்வாளர் என அதற்கு பொறுப்பான அதிகாரியிடமும் பெற வேண்டும்.

இறப்பு நிகழ்ந்தவுடன் செய்யவேண்டியது என்ன?

மருத்துவமனையில் இறப்பு நிகழ்ந்தால், இறந்தவரின் பெயர், வயது உள்ளிட்ட தகவல்களை மருத்துவமனையில் தெரிவித்து, இறப்பு நிகழ்ந்ததற்கான காரணத்தை குறிப்பிடும் படிவம் IV-ஐ பெற்றுக்கொள்ள வேண்டும்.

வீட்டில் இறப்பு நிகழ்ந்தால் என்ன செய்ய வேண்டும்?

வீட்டில் இறப்பு நிகழ்ந்தால், அதை அருகில் உள்ள பிறப்பு - இறப்பு பதிவாளரிடம் தெரிவித்து படிவம் IV-ஏ-வைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதுவே இறப்பை உறுதிப்படுத்தக்கூடிய சான்றிதழ்.

எத்தனை நாட்களுக்குள் இறப்புச் சான்றிதழ் பெற வேண்டும்?

ஒருவர் இறந்து 30 நாட்களுக்குள் பெற வேண்டுமானால், மருத்துவமனையிலேயே பெற்றுக்கொள்ளலாம். 30 நாட்களுக்கு மேல் ஓராண்டுக்குள் என்றால், மாநகராட்சி ஆணையர் அல்லது அதற்கு பொறுப்பான அலுவலரிடம் இருந்து எழுத்து மூலமாக அனுமதி பெற வேண்டும். ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டால், குற்றவியல் நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற வேண்டும்.

ஒருவர் வசிக்கும் ஊரிலிருந்து வேறு இடத்தில் இறப்பு நிகழ்ந்தால் செய்ய வேண்டியது என்ன?

இறப்பு எங்கு நிகழ்ந்தாலும், அந்த இடத்தில் உள்ள பிறப்பு - இறப்பு பதிவாளரிடம் இருந்துதான் சான்றிதழைப் பெற வேண்டும்.

குழந்தை இறந்தே பிறந்தால், கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் என்ன?

இறந்தே பிறக்கும் குழந்தைக்கு, பிறப்புச் சான்றிதழ் கொடுக்கப்பட மாட்டாது. இறப்புச் சான்றிதழ் மட்டுமே கொடுக்கப்படும். அதற்கும், மற்றவர்கள் இறப்புச் சான்றிதழ் பெறுவதற்கான அதே நடைமுறைகள்தான் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x