

திரையுலக கதாப்பாத்திரங்களின் தாக்கத்தால், இந்தியர்கள் பலருக்கும் சினிமா நாயகர்கள் உன்னதமானவர்களாகவே திகழ்கிறார்கள் என்பது இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங் ஹேஷ்டேக் ஒன்றைப் பார்த்தபோது உணர முடிந்தது.
சமூக வலைத்தளமான ட்விட்டரில் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முன்னிலையில் இருக்கிறது #WeLoveYouSalman என்ற ஹேஷ்டேக்.
நிமிடத்துக்கு நூற்றுக்கணக்கான ட்வீட்களால் ட்ரெண்ட் ஆகும் இந்த ஹேஷ்டேகின் பின்னணி என்ன? திடீரென சல்மான் மீதான தனது நேசத்தை ஆயிரக்கணக்கான இந்திய இணையவாசிகள் பதிவு செய்வதன் காரணம்தான் என்ன என்று பிரவுசியபோது உண்மை நிலை தெரிந்தது.
கடந்த 2002-ம் ஆண்டில், மும்பையில் ஒருவர் உயிரிழக்கவும், நால்வர் காயமடையவும் செய்த விபத்து ஒன்றில் குற்றம்சாட்டப்பட்ட நடிகர் சல்மான் கானை, அந்த விபத்தில் காயமடைந்த ஒருவர் இன்று நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார் என்ற செய்தியும், அதனால் இந்த வழக்கில் சல்மான் கானுக்கு பின்னடைவு ஏற்பட்டிருப்பதும்தான் #WeLoveYouSalman-ன் பின்புலம் என்பது தெளிவானது.
மும்பையில் பாந்திராவில் கட்டுப்பாட்டை இந்த கார் ஒன்று வேகமாக ஏறியதில் சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் விபத்துக்குள்ளாகினர். அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், நால்வர் காயமடைந்தனர்.
அந்தக் காரை சல்மான் கான் ஓட்டவில்லை என்று அவரது வழக்கறிஞர் வாதாடி வந்தார். இந்த நிலையில் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான சல்மான் கானை அடையாளம் காட்டியவர், சல்மான் கான் தள்ளாடியபடி காரில் இருந்து இறங்கியதை தாம் நேரில் பார்த்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.
இதனால், கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கில், நடிகர் சல்மான் கானுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.
இதன் எதிரொலியாகவே, சல்மான் கானுக்கு ஆதரவு கூறும் நோக்குடன், ஆயிரக்கணக்கான ட்வீட்கள் பதிந்தவண்ணம் இருக்கிறது.
இப்போது, மீண்டும் முதல் பாராவை நீங்கள் படிக்கலாம்!