

நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரி வேதியியலாளர் மெல்வின் எல்லிஸ் கால்வின் (Melvin Ellis Calvin) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 8). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
அமெரிக்காவின் மினசோட்டா மாநிலம் செயின்ட் பால் நகரில் யூதக் குடும்பத்தில் (1911) பிறந்தார். இவர் குழந்தையாக இருந்தபோது, குடும்பம் மிச்சிகன் மாநிலம் டெட்ராய்ட் நகருக்குச் சென்று குடியேறியது. பள்ளியில் படிக்கும்போதே அறிவியலில், குறிப்பாக வேதியியல் மற்றும் இயற்பியலில் இவருக்கு ஆர்வம் பிறந்தது.
மிச்சிகன் சுரங்கத் தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி உதவித்தொகை பெற்று சேர்ந்தார். அங்கு வேதியியல், கனிமவியல், புவி அமைப்பியல், தொல்லுயிர் படிம உயிரியல், சிவில் பொறியியல் ஆகிய பாடங்களைக் கற்றார்.
1931-ல் பட்டம் பெற்றார். ஒரு தொழிற்சாலையில் ஓராண்டு காலம் பணிபுரிந்தார். 1935-ல் மினசோட்டா பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார். அடுத்த 4 ஆண்டுகளுக்கு ராக்ஃபெல்லர் அறக்கட்டளை மானிய உதவியுடன் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பல ஆய்வுகளை மேற்கொண்டார்.
ஹாலோஜன்களின் எலக்ட்ரான் நாட்டம் (Affinity of Halogens) என்பது குறித்த ஆராய்ச்சிக் கட்டுரையுடன் இவரது ஆராய்ச்சிப் பயணம் தொடங்கியது. 1937-ல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வேதியியல் ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.
1947-ல் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார். அதன் பிறகு பல்கலைக்கழகத்தின் பல்வேறு வேதியியல் துறைகளின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
மரபியல் மூலக்கூறுகள், கரிமச் சேர்மங்களின் நிறம், இயற்கை மூலக்கூறுகளின் எலக்ட்ரான் அமைப்பு ஆகியவை குறித்து ஆராய்ந்தார். பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் வெளியிட்டார்.
ஆண்ட்ரூ பென்சன், ஜேம்ஸ் பாஷம் ஆகியோருடன் இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். ஒளிச்சேர்க்கையின்போது தாவரத்துக்குள் கார்பன் பயணிக்கும் பாதையை இந்த மூவர் குழு கண்டறிந்தது. இதற்கு ‘கால்வின் சுழற்சி’ என்று பெயரிடப்பட்டது.
ஒளிச்சேர்க்கை குறித்த இந்த ஆராய்ச்சிக்காக கால்வினுக்கு 1961-ல் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் தனது ஆராய்ச்சிகள் குறித்து 600-க்கும் அதிகமான ஆய்வுக் கட்டுரைகள், 7 புத்தகங்களை எழுதியுள்ளார்.
இவர் 1980-ல் அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றபோதிலும், அதற்குப் பிறகு 16 ஆண்டுகள் வரை தன் குழுவினருடன் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்தார். பல கல்வி நிறுவனங்களில் விசிட்டிங் புரொபசராகப் பணிபுரிந்தார். பல உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களில் ஏராளமான விருதுகள், பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
லண்டன் ராயல் சொசைட்டி உள்ளிட்ட கவுரவம் மிக்க அறிவியல் அமைப்புகளின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வாழ்நாள் இறுதிவரை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுவந்த கால்வின் 86 வயதில் (1997) மறைந்தார்.