Last Updated : 19 Apr, 2015 09:46 AM

 

Published : 19 Apr 2015 09:46 AM
Last Updated : 19 Apr 2015 09:46 AM

சொல்லத் தோணுது 30: புத்தரின் தலைமுறை!

நாளுக்கு நாள் புதிய முகங்கள், புதுப் புதுக் கட்டிடங்கள், புதிய புதிய சாலைகள், புதிய புதிய வாகன ஊர்திகள். ஒரு நொடி கவனம் சிதைந்தாலும் மனிதர்கள் மீதோ, ஏதாவது ஒரு வாகனத்தின் மீதோதான் மோத வேண்டும். நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்!!

ஒவ்வொரு நொடியும் நம் நாட்டில் பிறக்கும் குழந்தைகளைத்தான் கணக்கெடுக்கிறார்களேத் தவிர ஒவ்வொரு நொடியும் பிறந்த மண்ணை, உறவுகளை, உடமைகளை விட்டு இடம்பெயரும் மக்களைப் பற்றிய கணக்குகள் தேவையில்லை என நினைக்கிறார்கள். ‘’எதற்காகப் பிறந்து வளர்ந்த மண்ணை விட்டுப் பரதேசியாய் போகிறீர்கள்?’’ என அம்மக்களைக் கேட்க இங்கு ஆள்பவர்களுக்கு நேரமில்லை. விண்வெளிக் கலங்கள்தான் இந்நாட்டை வல்லரசாக்கும் என ஆட்சிசெய்ய வருகின்ற அனைவருமே முடிவு செய்துவிட்டார்கள்.

ஒவ்வொரு வாரமும் ஒரு நாளாகவும், ஒவ்வொரு மாதமும் ஒரு வாரமாகவும், ஒவ்வோர் ஆண்டும் ஒரு மாதமாகவும் கழிவது போலவே காலங்கள் ஓடிக் கொண்டே இருக்கின்றன. நின்றுபேச யாருக்கும் நேரமில்லை. பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்குமானத் தேவைகள் அதிகரிக்கப்படுவதும் அதற்கான தேவைகளை நிறைவேற்றும் செயல்களும் ஆட்சியாளர்களால் காலம் கடந்தே சிந்திக்கப்படுகின்றன.

உறக்கத்தில் மூன்றில் ஒரு பங்கும், பயணத்தில் ஒரு பங்கும் தீர்ந்துபோகும்போது மற்றவைகளுக்கு நேரமில்லாமல், எதற்காக இவ்வளவு நேரத்தை பயணத்தில் செலவழித்துக் கொண்டிருக்கிறோம் என சிந்திக்கக்கூட முடியாமல் வாழப் பழகிவிட்டோம்.

மனிதர்கள் நடந்து போகவே இங்கு சாலைகள் இல்லாதபோது வாகனங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை வரவேற்பதற்காகவே ஆட்சியாளர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். உள்நாட்டில் உள்ள வாகனங்கள் போதாது என்று, வெளிநாட்டு நிறுவனங்களை அழைத்து வந்து அவர்களை வாழவைப்பதையே கொள்கையாகக் கொண்டுவிட்டார்கள். வாகனங்களை வாங்கக் கடன் கொடுக்கக் கூவிக் கூவி அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மாடுகளை வாங்கக் கடன் கேட்கும் உழவன் அடித்துத் துரத்தப்படுகிறான் என்பதெல்லாம் நமக்கு வேண்டாத சேதி. எல்லாருமே ஏதோ ஒரு வேலைக்காகவே வாகனங்களில் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்று எவ்வளவோ தொழில்நுட்ப வசதிகள் இருந்தும் கூட கர்நாடக, ஆந்திர மாநில எல்லையை ஒட்டிக் கொண்டிருக்கிற சென்னை மாநகரத்தில் தலைமைச்செயலக கட்டிடம் இருக்கிறது என்பதற்காகவும், அது தங்கள் வீட்டுக்குப் பக்கத்திலேயே இருக்கிறது என்பதற்காகவும் அனைத்து முதல்வர்களும் இருந்தபடியே ஆட்சி செய்து கொண்டு வருகிறார்கள்.

மக்களின் நேரத்தையும், அலைச்சலையும் கணக்கில் கொண்டு பல போராட்டங்களுக்கும், எதிர்ப்புகளுக்கும் இடையில்தான் முன்னாள் நீதியரசர் சந்துரு மதுரை மாநகரில் ஒரு உயர்நீதிமன்றக் கிளையை நிறுவ வழிவகுத்தார். அதேபோல் தலைமைச்செயலகத்திற்கும் ஒரு கிளையை அமைக்கலாம் என இன்னும் யாருக்கும் தோன்றவில்லை.

ஏதோ ஒரு வேலைக் காரணங்களுக்காக அரசு அலுவலகங்களைத் தேடியே தமிழகத்தின் கடைக் கோடியிலுள்ள மக்களெல்லாம் வாழ்வின் பொன்னான நேரங்களை பயணங்களிலேயே கழித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தேடி வருவதெல்லாம் ஏதோ ஒரு காகிதத்திலுள்ள சான்றிதழ்களைப் பெறுவதற்காக மட்டுமே. கணினி தொழில்நுட்பத்தை கையாண்டால் அந்த சான்றிதழ்களை 24 மணி நேரமும் இயங்கும் பணமெடுக்க உதவும் இயந்திரங்கள் போன்றவற்றைக்கொண்டே வழங்கிவிடலாம். அல்லது அந்தந்த ஊர்களில் அருகிலுள்ள அரசு அலுவலகங்கள் எதுவாக இருந்தாலும் அங்கேயே வாங்கிக் கொள்ளலாம். இதையெல்லாம் மற்ற நாடுகள் போல் சிந்தித்து செயல்படுத்தி மக்களை அலைக்கழிக்காமல் அலைய விடாமல் இருக்க யாருக்கும் இங்கே நேரமில்லை. படிக்கிற எல்லாரையுமே கணினி பொறியாளராக மாற்றி 500 கல்லூரிகளைக் கட்டி வைத்துக்கொண்டு, இன்னும் வரிப் பணத்தில் 60 விழுக்காடுகளை அரசு ஊழியர்கள் சம்பளத்துக்கே ஒதுக்கி நிதிநிலை அறிக்கை தயார்செய்து கொண்டிருக்கிறார்கள்.

இன்றைக்கு வாய்த்திருக்கின்ற தொழில்நுட்பத்தில் நேரில் வந்தால்தான் இந்தப் பணி செய்து தரப்படும் என கணக்கிடக் கூடியப் பணிகள் மிகச்சுருங்கிவிட்டன. தங்கள் வேலை பறிபோய்விடும், நேரில் வந்தால்தான் ஏதாவது காரணங்களைச் சொல்லி அலையவிட்டு பணத்தைக் கறக்க முடியும், அப்போதுதான் தன் பதவி அதிகாரத்தை மக்களிடம் காட்டி வெறியைத் தீர்த்துக் கொள்ள முடியும் என அதிகாரத்தில் உள்ளவர்கள் நினைக்கிறார்கள். எல்லாவற்றையும் கணினிமயமாக்கி இதற்கெல்லாம் விடிவுகண்டு மக்களை இன்னலில் இருந்து விடுவிக்கக் கூடியவர்கள்தான் இன்றைக்குத் தேவை.

ஆனால் இதுகுறித்த அக்கரையும் கவலையும் மக்களுக்குக் கூட இருப்பதாகத் தெரியவில்லை. எல்லாருமே புத்தத் துறவிகள் போலவே பொறுமையின் எல்லையில் நகைச்சுவைக்காட்சிகளையும்,ஆடல் பாடல்களையும் பார்த்துக்கொண்டு பொழுதைக் கழிக்கிறார்கள். ஐந்து நாடக நெடுந்தொடர்கள் முடிவதற்குள் அவர்களின் மொத்த வாழ்நாளும் முடிந்துபோகிறது.

ஒரு வாகனத்தை நிறுத்துவதற்கே இடமில்லாத வீடுகளில்கூட இரண்டு மூன்று என வாங்கிக்கொண்டே இருக்கிறார்கள். நிறுத்தி வைப்பதற்கே இடமில்லாத சாலைகளில் அது ஓட எங்கே இடமிருக்கும். வணிகத்தை விரிவுபடுத்துவதற்காக சாலைகளைக் கையகப்படுத்திவிட்ட வணிகர்கள் வாகனத்தை ஓட்டுவதற்கும், நடப்பதற்கும், மிதிவண்டியில் செல்வதற்கும் வழியில்லாமல் வாகனங்களை நிறுத்தி இடையூறாக இருக்கிறார்கள். 60 அடி சாலைகளெல்லாம் 20 அடி சாலைகளாக மாறிப்போய் விட்டன. ஆனால், இதையெல்லாம் யாரும் கண்டுகொள்ளாமல் கண்ணில்லாதவர்கள் போலவே வாழப்பழகிவிட்டோம்.

ஆட்சித் தலைமைக்கு ஆலோசனைகளைத் தந்து மக்களுக்கு வழிகாட்டும் அதிகாரிகளோ தங்களுக்கு சேர வேண்டியதைப் பெற்றுக்கொண்டு ஆளுக்கொரு வாகனத்தில் சுகமாக சென்று கொண்டிருக்கிறார்கள். கோயம்பேடு அரசுக் குடியிருப்பில்தான் ஆட்சி நிர்வாகத்தைக் கவனிக்கக்கூடிய முதன்மையான அதிகாரிகளெல்லாம் வாழ்கிறார்கள். அவர்கள் பணிக்குச் செல்வதெல்லாம் நகரிலுள்ள சில அலுவலகங்களுக்கு மட்டும்தான். தனித் தனியாக ஒவ்வொருவரும் 300 வாகனங்களில் செல்வதற்குப் பதிலாக குளிரூட்டப்பட்ட சிறியவகை பேருந்துகளில் பயணித்தாலே வாகனங்களில் எண்ணிக்கை 10 விழுக்காடுகளுக்குள் குறைந்துவிடும். இதில் பாதிக்கு மேல் ஒரே இடத்தில் தலைமை நிலையத்தில் பணிபுரிபவர்கள். ஒன்றாகச் சேர்ந்து பயணிக்கும்போது ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாறிக்கொள்ளலாம். இவர்களுக்குள்ளாகவே நடைபெறும பணிகள் துரிதமாகவும் நடைபெறும். பக்கத்துப் பக்கத்து அறைகளில் அமர்ந்துகொண்டு காகிதத்தின் மூலம் பேசி, பணி முடியும் காலம் வீணாவதை மிச்சப்படுத்தலாம்.

புதிதாக வாகனங்களை வாங்குபவர்கள் அயல் நாடுகளில் உள்ளதுபோல் அதற்கான தேவையையும், காரணத்தையும் குறிப்பிட வேண்டும். வாகனங்களை வாங்குவதற்கான விதிமுறைகளையும்,கட்டணத்தையும் உயர்த்த வேண்டும். பணம் இருக்கிறது என்பதற்காக விதம் விதமான வாகனங்களை வாங்கிக்கொண்டே இருக்கக்கூடாது. அங்கே நான்கு வழி ஆறுவழி சாலைகள் இருப்பதாலும், மக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும் ஒவ்வொருவரும் தனித்தனி வாகனங்களில் பயணித்தால் சிக்கலில்லை. நம் நிலை அப்படியா இருக்கிறது?

மக்கள் விதிகளை மீறாத அளவுக்கு அங்கே பேருந்து, தொடர்வண்டி போன்ற பொது போக்குவரத்து வாகனங்கள் விரிவாக்கப்பட்டு தேவையான அளவுக்கு வசதிகள் செய்து தரப்படுகின்றன.தேவையில்லாமல் எரிக்கப்படும் எரிபொருள் மிச்சப்படுத்தப்பட்டு கணக்கற்ற கோடிகோடியான பணம் வீணாகாமல் சுற்றுச்சூழல் கெட்டு நஞ்சுக்காற்றை உட்கொள்வதும் தவிர்க்கப்படுகிறது. பதவியில் உள்ளவர்களும், அதிகாரிகளும்கூட மக்களோடு மக்களாக பயணித்தே தங்களின் கடமைகளைச் செய்கிறார்கள்.

ஒவ்வொரு சாலை நிறுத்தத்திலும் கண்காணிக்கும் கேமராக்கள் பொருத்திவிட்டால் விதி மீறப்படுபவர்கள் தண்டம் செலுத்தப்பட்டு சாலைப் போக்குவரத்தும் சீராகும். அரசுக்கும் வருமானம் பெருகும். இந்தக் காலத்தில்கூட போக்குவரத்துக் காவலர்கள் எனும் பேரில் அங்கங்கு நடக்கும் வசூல் கொள்ளையில் இருந்து மக்களும் தப்பலாம்.

முன்னே போகும் ஏர் எவ்வாறு போகிறதோ அதேபோல்தானே பின்னேபோகும் ஏர்களும் போகும். மக்களை வழிகாட்டுபர்வளும், சீர்திருத்துபவர்களும் கோணலாகப் போகும்போது மக்களும் அதையே பின்தொடர்ந்து சிக்குண்டு தவிக்கிறார்கள்.

- சொல்லத் தோணுது…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: thankartamil@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x