Published : 29 Apr 2015 02:19 PM
Last Updated : 29 Apr 2015 02:19 PM

யூடியூப் பகிர்வு: அன்புச் சங்கிலி உங்களை பிணைத்திருக்கிறதா?

பரபரப்பான சாலை. இரு சக்கர வாகனங்களும் கார்களும் பச்சை விளக்கொளிக்காகக் காத்து நிற்கின்றன. வெயிலில் இருந்து தப்பிக்க கார்க்கதவுகளின் கண்ணாடியில் ஒட்டப்படும் ஸ்டிக்கருடன் ஒருவர், அங்கு நிற்கும் கார்களையே சுற்றி வருகிறார். ஏற்கனவே சுத்தமாக இருக்கும் காரின் கண்ணாடிகளை தன்னிடமிருக்கும் துணியால் அழுந்தத் துடைக்கிறார். எப்படியாவது கையிலிருக்கும் ஸ்டிக்கர்களை விற்றுவிட வேண்டுமென்ற முனைப்பு. யாரும் அவரைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. சில கார்கள் கடந்து போக, அடுத்து வந்த காரின் பின்கண்ணாடி மட்டும் கீழிறங்குகிறது. உள்ளிருந்து மடிப்பு கலையாத புத்தம்புதிய இரு ஐநூறு ரூபாய் நோட்டுகளோடு ஒரு கை நீள்கிறது. வாங்குபவரின் கண்கள் ஆச்சரியத்தாலும், சந்தோஷத்தாலும் பெரிதாய் விரிகின்றன. கார்க்காரர் சிரித்துக் கொண்டே கடந்து செல்கிறார்.

யாரென்றே தெரியாத ஒருவரின் மேல், அவர் அன்பு செலுத்தக் காரணம் என்ன?

அன்பு, அது ஒன்றால் மட்டுமே இந்த உலகத்தையே மாற்றிவிட முடியுமா? யாரென்றே தெரியாத ஒருவர் மேல் தன்னலமற்று, எதிர்பார்ப்புகள் எவையும் இல்லாமல் அன்பு செலுத்த முடியுமா? அன்பெனும் சங்கிலித் தொடர் சாத்தியமே என்கிறது இக்காணொளி.