

வண்ணதாசன்,எழுத்தாளர்:
காலையில் தான் பார்க்க முடிந்தது. விகடனில் இருந்து கதிர்பாரதியும் மரபின் மைந்தன் முத்தையாவும் அனுப்பி இருந்தார்கள், ‘ஜெயகாந்தன் மறைந்துவிட்டார்’.
சங்கரியம்மாவிடம் சொல்லிவிட்டு, தொலைக்காட்சியைத் திறந்தேன். புதிய தலைமுறையில் செய்தி போய்க்கொண்டிருந்தது. இரண்டாம் நிமிடம் ஜே.கே பற்றி. அவரை அப்படிப் பார்க்க, அப்பா ஞாபகம் வந்தது.சுகாவும் எஸ்.ராமகிருஷ்ணனும் நின்றுகொண்டு இருந்தார்கள். இளையபாரதி , ரவிசுப்ரமணியன் இருவரும் அங்குதான் எங்கோ இருந்திருப்பார்கள்.
எனக்கு நடக்க வேண்டும், யாரிடமாவது பேசவேண்டும். சுகாவைக் கூப்பிட்டுப் பேசினேன். மிகக் குறைந்த பேச்சு. இருவருக்குமே இதைவிடக் குறைவாகவே பேசியிருக்க வேண்டிய நிலை. பேசி முடித்த உடன், எனக்கு ‘ஜெயகாந்தன் மறைந்துவிட்டார்’ என யாரிடமாவது சொல்ல வேண்டும் போல இருந்தது.
சொல்வதற்கும் கேட்பதற்கும் யாரும் இல்லை. எதிரே முருங்கைக் காய் கட்டுடன் சைக்கிளில் வருகிறவர் எலிசா குட்டியின் தாத்தா என்று தெரியும். அவரிடம் சொல்லலாம். கைலியை முன் பக்கமாகத் தூக்கிப் பிடித்தபடி ராமநாதன் சார் நடக்கிறார். அவரிடம் சொல்லலாம். தென்றல் நகரில் மிக அழகான செங்கல் சிவப்பு நிற வீட்டில் குனிந்து கோலமிடுகிற மனுஷியிடம் சொல்லலாம்.
எப்போதும் பாரதி நகரில் எதிர்ப்படும், இன்று படாத, ஓ.எஸ் இதைக் கேட்கக் கூடியவர் தான். இளநீர் விற்கிற அதியரசன் தினகரன் வாசிக்கிறவன் . என்னைப் பற்றியும் தெரியும். அவனிடம் சொன்னால் ‘அப்படியா சார், என்ன சார் செஞ்சுது?’ என்று கூடக் கேட்பான்.
ஐஸக் ஸ்டோர்ஸ் தாமஸ் நான் எடுத்துவைத்த காய்கறியை எடையிடும்போது, தராசு முள் அசைந்து நிலைகொள்கையில் நான் கிட்டத்தட்ட, சொல்லத் தயாராகிவிட்டேன். சொல்லமுடியவில்லை.
எஸ்.ட்டி.சி சாலையைக் குறுக்கே தாண்டி தெருமுனை அடைகையில் வேகத் தடையில் மருத்துவர்.கோகுல் தன் காரை நிறுத்தி, ‘நல்லா இருக்கீங்களா ஸார்?’ என்று சிரித்தார். மன நல மருத்துவர் ராமானுஜம் பற்றியும் பொன்னியின் செல்வன் பற்றியும் பேச்சுப் போயிற்று. நான் என் உலர்ந்த உதடுகளை நனைத்துக்கொள்வதற்குள் , அவருடைய சக்கரங்கள் நகர்ந்துவிட்டன.
என் எதிரே ஆளற்ற தெரு மட்டும். அக்காக் குருவிச் சத்தம் கேட்டது. கட்டுமான ஜல்லி சிதறிக் கிடந்தது. பக்கத்து முடி திருத்தகக் கடையில் இருந்து கொட்டப்பட்டவை மழையில் தரையில் அப்பிக் கிடந்தது. நான் மிக ஆழ்ந்து ஒரு முறை மூச்சை இழுத்துவிட்டு என்னைச் சமன் செய்தேன்.
என்னிடமே நான் சொல்லிக்கொண்டேன், - ‘ஜெயகாந்தன் மறைந்துவிட்டார்’.