

பாரதிராஜா,இயக்குநர்:
எவ்வளவோ பதிவுகள் இருக்கும், இருந்தாலும் சுருக்கமாக தமிழ் இலக்கிய வனத்திலே ஒரு சிங்கமாக நடைப்போடு வளர்ந்த அந்த கர்ஜனை இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ஜெயகாந்தன் என்ற அந்த மாபெரும் இலக்கிய சிந்தனையாளர், இலக்கிய சிங்கத்தின் கர்ஜனை இந்த பிரபஞ்சம் உள்ளவரை ஒலித்துக் கொண்டே இருக்கும். அவருடைய இழப்பில் துவண்டு போய் இருக்கும் என்னைப் போன்ற எல்லா இலக்கிய ரசிகர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
கமல்ஹாசன்,நடிகர்:
எனக்கு தமிழில் ஓர் எழுத்து குறைந்தது போல பிரமையாக இருக்கிறது. ஜெயகாந்தன் போய்விட்டார் என்று அழுதுகொண்டு ஒரு நண்பர் சொன்னார். போகவில்லை என்பதுதான் என் கருத்து. அவருடைய எழுத்துக்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது. அதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் எழுதியதை எல்லாம் கொஞ்சத்தையாவது நாம் படிக்க வேண்டியது நம் கடமையாகும். அதுதான் ஒரு ஜெயகாந்தன் ரசிகனாக என் வேண்டுகோள்.
சிவகுமார், நடிகர்:
ஒரு கம்பன், ஒரு பாரதி, ஒரே ஒரு ஜெயகாந்தன். அந்த இடத்தை யாராலும் அடைக்க முடியாது. நடிப்பில் எப்படி சிவாஜியை யாரோடும் ஒப்பிட முடியாதோ, அதேபோல எழுத்துத் துறையில் ஜெயகாந்தனை யாரோடும் ஒப்பிட முடியாது. காட்டில் ஒரு சிங்கம், அதேபோல எழுத்துத் துறையில் ஒரு சிங்கம், ஒற்றை சிங்கம் ஜெயகாந்தன். இலக்கியம், எழுத்து, பேச்சு என அனைத்திலும் தனிப்பட்ட மனிதன், தனியான மனிதன் அந்த இடம் எப்போதும் காலியாகவே இருக்கும். அவருடைய ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.