Published : 19 Apr 2015 10:45 AM
Last Updated : 19 Apr 2015 10:45 AM

குஸ்டாவ் ஃபெச்னர் 10

ஜெர்மனியை சேர்ந்த தத்துவமேதையும், உளவியற்பியலை உலகுக்கு தந்தவருமான குஸ்டாவ் தியடோர் ஃபெச்னர் (Gustav Theodor Fechner) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 19). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l ஜெர்மனியின் முஸ்காவ் நகருக்கு அருகே குரோப் ஸார்சன் என்ற ஊரில் (1801) பிறந்தார் தந்தை, பாதிரியார். ஆன்மிகப் பற்றுகொண்ட குடும்பத்தில் வளர்ந்தபோதிலும், பிற்காலத்தில் இவர் நாத்திகவாதியாகத் திகழ்ந்தார்.

l பள்ளிக் கல்வியை முடித்த பிறகு, லெய்ப்சிக், டிரஸ்டென் பல்கலைக்கழகங்களில் மருத்து வம் பயின்றார். 1822-ல் மருத்து வத்தில் பட்டம் பெற்றார். அடுத்த ஆண்டு லெய்ப்சிக் பல்கலைக்கழகத்தில் இயற்கை தத்துவப் பாடத்தில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அப்போது, பல விஞ்ஞானிகளின் ஆய்வுக் கட்டுரைகளை மொழிபெயர்த்தல், மறு ஆய்வு செய்தல், பாடப் புத்தகங்கள் வெளியிடுதல் ஆகிய பணிகளில் ஈடுபட்டார்.

l பிறகு, இயற்பியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இயற்பியலிலும் வேதியியலிலும் ஆய்வுகளை மேற்கொண்டார். நிறம், பார்வை குறித்து 1839-ல் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது பார்வைக் குறைபாடு ஏற்பட்டது.

l குணமான பிறகு மனம் - உடல் தொடர்பு குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபடத் தொடங்கினார். உடலும் மனமும் வெவ்வேறாக இருந்தாலும் ஒரே உண்மையின் இரு வேறு பக்கங்கள் என்றார். அந்த சிந்தனையை அடிப்படையாகக் கொண்டே தன் ஆய்வைத் தொடங்கினார்.

l உண்மையில் இவை இரண்டுக்கும் இடையிலான கச்சிதமான கணிதவியல் தொடர்பைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த ஆராய்ச்சியின் விளைவாக உலகப் புகழ்பெற்ற வெபர்-ஃபெச்னர் விதி (Weber-Fechner Law) பிறந்தது. “உணர்வின் தீவிரம் எண்கணிதத் தொடரில் (Arithmetical Progression) அதிகரித்தால், அதைத் தூண்டும் ஆற்றல் பெருக்குத் தொடரில் (Geometrical Progression) அதிகரிக்க வேண்டும்” என்றார்.

l இந்த விதி சில குறிப்பிட்ட வரையறைக்குள் இருந்தாலும், பின்னாளில் வந்த பல ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. வில்ஹெம் வூண்ட், ஹெர்மன் வான் ஹெம்ஹோல்ட்ஸ் ஆகியோருடன் சேர்ந்து நவீன சோதனை உளவியல் என்ற புதிய துறையை அறிமுகப்படுத்தினார்.

l மனம் எளிதாக அளவிட முடிகிற, கணித தீர்வுக்குள் அடங்கும் ஒன்று என்பதால், உளவியல் அளவீட்டு அறிவியலுக்குள்ளும் அடங்கும் சாத்தியக்கூறு உள்ளது என்பதை எடுத்துக் கூறினார். இதுகுறித்து தான் கண்டறிந்தவற்றை பொது நிகழ்ச்சிகளில் விளக்கிப் பேசினார். தனது ஆய்வுகள் அடங்கிய பல கட்டுரைகள், புத்தகங்களை வெளியிட்டார்.

l அறிவியல் ஆராய்ச்சி மட்டுமின்றி, கவிதையிலும் இவருக்குள் ஆர்வம் கிளை விரித்தது. டாக்டர் மைசெஸ் என்ற புனைப் பெயரில் பல கவிதைகள் எழுதினார். 1895-ல் அழகியல் உண்மைகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

l மனம், உளவியல், உடல், அழகியல் என எதுவாக இருந்தாலும் அவற்றை விஞ்ஞான மற்றும் கணித அடிப்படையில் உறுதிப்படுத்த முற்பட்டார். எனவே இவர் உளவியற்பியல் (Psychophysics) மற்றும் ஒட்டுமொத்த சோதனை உளவியலின் தோற்றுநராக கருதப்படுகிறார்.

l விஞ்ஞானிகள், தத்துவத் துறையினருக்கு 20-ம் நூற்றாண்டில் மிகப் பெரிய உந்துசக்தியாக திகழ்ந்த குட்சவ் தியடோர் ஃபெச்னர் 86 வயதில் (1887) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x