

ஜெயகாந்தன் என்பது ஒற்றைச்சொல்லில் ஒரு சரித்திரம், அது இந்திய இலக்கியத்தின் தமிழ் அடையாளம். ஞானபீடம் என்பது அவர் பெற்ற விருதல்ல; அவர் எழுத்துக்களே ஞானபீடம்தான்.
சூரிய வெளிச்சம்கூட எட்டிப் பார்த்திராத வாழ்க்கையை தன் கலைக்கண்களால் பார்த்துப் பதிவு செய்தவர்; விளிம்புநிலை மனிதர்களை உலக இலக்கியக் கதாபாத்திரங்களாய் உலவச் செய்தவர் ஜெயகாந்தன்.
சமரசம் செய்து கொள்ளாததே அவரது வாழ்வின் கிரீடம் என்று நான் கருதுகிறேன். அதனால் அவர் வாழநினைத்த சத்தியத்தின் வெளியிலேயே அவரது வாழ்வு கழிந்தது.
எழுத்தாளனுக்கென்று வார்க்கப்பட்ட ஒரு தொங்கிப்போன உருவத்தை அவர் துடைத்தழித்தார்; கம்பீரமே அவரது உருவமாயிற்று.
பாரதி எழுத வந்த பிறகு கவிதைக்கு மீசை முளைத்தது போல ஜெயகாந்தன் எழுத வந்த பிறகு உரைநடைக்கு மீசை முளைத்தது.
அரசியலால் இலக்கியத்தையும், இலக்கியத்தால் அரசியலையும் செழுமைப்படுத்த முயன்றவர். 60களிலேயே தமிழுக்கு ஒரு மாற்றுத்திரைப்படத்தை முன்வைத்தவர்.
இலக்கியத்தின் எல்லா வடிவங்களுக்கும் பங்களிப்புச் செய்திருக்கிறார். பல எழுத்தாளர்களின் முதல் எழுத்துக்கு உந்துசக்தி தந்திருக்கிறார். புதுமைப்பித்தன் விட்டுப்போன இடத்தை ஜெயகாந்தன் இட்டு நிரப்பினார். அழியாத பல சிறுகதைகளையும் சில நாவல்களையும் படைத்திருக்கிறார்.
அழியும் உடல் கொண்டுதான் மனிதன் அழியாத காரியங்களை ஆற்றிப் போகிறான். அவரது பௌதிக உடல் மறையும்; படைப்புகள் மறைவதில்லை.
ஜெயகாந்தன் புகழை உயர்த்திப் பிடிக்கும் கூட்டத்தின் முன்வரிசையில் நானுமிருப்பேன்.
ஜெயகாந்தன் படைப்பே நீ வாழ்க.
- வைரமுத்து,கவிஞர்